-
நீயும் நானும்
வாழ்ந்த கதையில்
வில்லொடித்தாய்
மூக்கறுத்தாய்
வெண்ணை திருடி
குறும்பு செய்தாய்
ஆடை ஒளித்து
வெட்கம் தந்தாய்
தூக்கிச் சென்று
துயரம் தந்தாய்
படைத்தாய்
காத்தாய்
அழித்தாய்..
ஆயினும்
யாதுமாகி
என் இறைவன்
என்றானாய் !
-
என் ஒற்றைப்புள்ளி வானம் நீ..
அதில் அற்றை திங்கள் அழகும் நீ...
என் கண்கள் கூசும் கதிரவன் நீ...
அதன் கதிர்கள் தரும் ஒளியும் நீ...
என் இதயம் பூத்த மலர் நீ...
அதில் வாசம் தந்த வல்லோனும் நீ..
என் மனதை சுழற்றும் புயல் நீ...
அதில் துளியாய் விழும் மழை நீ...
என் உயிரில் கலந்த நேசம் நீ...
என்னை உயிரோடிருக்கச் செய்யும்
சுவாசம் நீ...
என் யாதுமானவன் நீ..-
இதுதான் என
நீ சொல்லிவிட்டால்
நானும்
அதுதான் என
புரிந்துக்கொள்வேன்.
எதுதான் என
நீ சொல்லாதவரை
அதுதானோ இதுதானோ
என நான் குழம்பி
எதுதான்
என நினைப்பது?-
அவனிடம் பேசாப் பொழுதிலெல்லாம்
அதரங்கள் மட்டுமே அமைதியாயிருக்கின்றன..
அங்கத்தின் ஒவ்வொரு அணுவி(னி)லும்
அவனின் நினைவுகளே முணுமுணுப்பாய்...-