ஒப்பாரி
-
ஒப்பாரிப் பாடல்
மீனு வாங்கப் போனவரே
மீதம் இல்லா வந்தவரே
கனவா போகக் கூடாதா-என்
கண்ணு அவிய கூடாதா
செவிடா போகக் கூடாதா-நான்
செத்து மடியக் கூடாதா
என் ஆசை மச்சானே
என் உசிரு நீதானே
மூனு உசிரை விட்டுபுட்டு
உன் உசிரை தேடிபோனாயோ
சமைஞ்ச நாள் முதலா
உன்னை நினைச்சு வளந்தேனே
சமைக்கும் போதும் கூட
உன்னை நினைச்சு இருப்பேனே
உருகுலைஞ்சு நிக்கேன் மச்சான்
உலைய பத்தி நினைப்பேனா
முகமில்லா கிடக்கும் என்ராசா
முகவரிக்கு எங்க போவேன்
கட்டியவள மறந்து போனாயோ
கண நேரத்தில உசிரவிட்டாயோ
அய்யா எந்திரினு பிள்ளயழுவுது
அழும் புள்ளய தேத்துராசா
வவுத்து பிள்ளைக்கு வழிசொல்லு
வவுத்து பொழப்புக்கு நீயேபொறுப்பு
காலன் வந்து அழைச்சா
காரணம் கேட்க தோணலையா
எமனா வந்தான் லாரிக்காரன்
என்னையும் கூட்டிப்போ மச்சான்
பூவும் பொட்டும் வேணாம்
பூவரசன் நீ மட்டும் போதும்
மஞ்சக்கயிறும் வேணாம் மச்சான்
மகராசன் நீ மட்டும் போதும்
பாடையில போறவனே...
பாதியில விட்டுப் போறியே
பாவம் தொலைக்க போனாயோ
பாவி என்னையும் கூட்டிப்போ
காலமெல்லாம் இருப்பேன் சொல்லி
காலனுடன் போவது ஏனோ
எந்திரிச்சு வந்திடு மச்சான்
என்னை நினைச்சுப் பாரு மச்சான்....
-
இதோ அவன் மீளா உறக்கமேந்தி கிடக்கிறான்!
அவள் அவனை எழுப்பிடும் முனைப்பில் கதறுகிறாள்!!
அவன் எழப்போவதில்லை என தெரிந்தும்கூட
அவள் முயற்சியை கைவிடுவாதாயில்லை!!!
கண்ணீரும் ஒப்பாரியும் ஓங்காரமாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது.-
அமைதியாய்
அவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்!ஓங்காரமாயும் ஓலக்குரலுமாயும் ஒலிக்கும்
ஒப்பாரியும் ஓர் தாலாட்டுதான்.-
தமிழ் அத்தை
தலைமகள் நீதானம்மா
தலைவிதி அழைத்ததோ
தங்கமான குணத்தழகி
தவிக்க விட்டதேனம்மா
தலையன்புன் மனசம்மா
தரிசாகிப் போனதேனோ
தகைபாடும் சொல்லழகி
தழுவிட மறந்ததேனம்மா
தமிழ்மறை வாசகமம்மா
தப்பாட்டம் ஆடியதேனோ
தண்மையான பண்பழகி
தவறிப் போனதேனம்மா
தயைபுரியும் அருளம்மா
தண்டனை தந்ததேனோ
தலைசிறந்த நிறையழகி
தசநாடி நின்றதேனம்மா
தசாவதானி பொன்னழகி
தலைவனை சேர்ந்தாயோ
தந்துவையரில் அன்பழகி
தண்கதிர் மறைந்ததம்மா
தலவிருட்சம் நீதானம்மா
தத்துவ தரிசனமானாயோ!!-
பறிக்கமறந்த பூக்கள்
பறித்த பூக்கள் ஒய்யாரமாய் கூடையிலிருக்க, எங்களிடம் மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்றெண்ணி ஒப்பாரி வைத்தன அவள் பறிக்க மறந்த பூக்கள்.-
அக்கா..
அஞ்சுகமே கண் திறந்துப் பாராயோ
மஞ்சுளமே கதை சொல்ல வாராயோ
அற்புதமே பிஞ்சுமுகங்கள் பாராயோ
கற்பகமே தோளில் சுமக்க வாராயோ
மஞ்சரமே பிறைநிலவைப் பாராயோ
ரஞ்சிதமே அன்னம் ஊட்ட வாராயோ
சண்பகமே தவழும் பேத்தி பாராயோ
புன்னாகமே ஆராட்டு பாட வாராயோ
கொள்ளை நோய் வந்து கிடந்தாயோ
பிள்ளைச்செண்டுகளை மறந்தாயோ
தில்லை நாதன் பாதம் அடைந்தாயோ
முல்லை மலர்ச்சிரிப்பை மறந்தாயோ
பற்றறுத்து காலன்பின் சென்றாயோ
உற்றார் உறவுகளை நீர் மறந்தாயோ
தங்கரதமே பாடு பட்டுச் சென்றாயோ
மங்களமே கூடு விட்டுப் பறந்தாயோ
யாத்திரையில் துயில் கொண்டாயோ
நித்திரையில் எங்களை மறந்தாயோ
அய்யன் நினைப்பில் மறைந்தாயோ
வெய்யவன் கதிரில் அணைப்பாயோ
-
ஒப்பாரி
வரம் ஒன்னு வாங்கி வந்த
வந்த வழி போயிடுச்சே
உதிரிப்பூ உன் மேல மாமா....
ஊதுவத்தி வாசம் இப்போ
முல்லப்பூ வாங்கி தந்த
முழுசா கூட வாடலையே
இப்போ மூங்கிலிலே போறீகளே
மாமா....
என்ன முண்டச்சியா ஆக்கிவிட்டு
தங்க ரதத்துல தூக்கி வந்த
மாமா....
இப்போ தவிக்கவிட்டு தான் போறீகளே
கூரைப்பட்டு வாங்கி தந்த
இப்போ கோடிப்போட போறீகளே
கூட வர மாமா....
என்னையும் நீங்க கூட்டிக்கிட்டு போயிடுங்க ....
மாமா.... கூட்டிக்கிட்டு போயிடுங்க...
-