-
நான் வாசித்துக்கொண்டிருக்கும்
கவிதை முதலில் யாரோ யாருக்கோ எழுதியது
பின் திருத்தியெழுதப்பட்டது
வழிதப்பி என்னிடம் சேர்ந்திருக்கும்
இதை நான் மேலும் சீர் செய்கிறேன்
என் முதல் கவிதை
இன்னேரம் யாரைச்
சீர் செய்கிறதோ ?
உலக கவிதைகள் தின வாழ்த்துகள் மக்களே-
வாசிக்க வாசிக்க மூடிக்கொள்கிறாய்
பக்கங்களை
*
எழுத்துக்கூட்டிப் படிக்கும் இதழ்களுக்குள்
இழைவன மெல்லின யிடையினம்
ஒலியாவன வல்லினம்
*
ஒளித்தே வைத்திருக்கிறாய் திறப்பதெப்போது ?
ம்ம்ம்...
புத்தகமா சொல்லும் !!!
*
கோடிடப் பிடித்தது
ஒரே ஒரு வரி
சிலிர்க்க சிலிர்க்க நனைந்தது
மொத்தம்
*
அந்திக்குப் பின்
பூக்கிறது
மயிலிறகு
பொழிகிறது
பூவிதழ்
மணப்பது
காயிதம்
*
பிழைத் திருத்தம்
செய்வதேயில்லை
உச்சி பிறழும்
உளறல்கள்
*-
திடீரென நேற்று
எட்டிப்பார்த்த
சுபாசும் பகத்தும்
ஜவஹரும்
இன்று மீண்டும்
சிமெட்டெரிக்குத்
திரும்பிவிட்டனர்
வழக்கம்போல்
அமைதியே உருவான
ஜி மட்டும் இன்றும்
தடியால்
பிட்டம் தட்டி
ஓடச்சொல்லுகிறார்
முன்தினம் வரை
முண்டாசும் முறுக்குமீசையும்
முழங்கிக்கிடந்த
முகங்களில் இன்று
வழிந்துகொண்டிருப்பது
முலாம் பூசிய முகமூடி-
நீயாகக் கிளம்பச்சொல்லி அனுப்புகையில்
வேண்டாமலே
மழை வந்து வீழும்
நனைப்பதற்கென
அதீத நனைதல் கேடென்பாய்
குடையென்றாகிவிடச்
சொல்லி உன்கரம்
ஒளிந்துகொள்வேன்
நீ முரண்களைச்
சுருட்டிக்கொண்டு
கனிவாய் படர்வாய்
மழை தீண்டாமலே
சொட்டச்சொட்ட
நனைத்திடும் வேலையை
அனிச்சையாய் மவுனம் செய்யும்
நடுநடுங்க எழும்
உஷ்ணத்தை உதட்டுக்கும்
உதட்டுக்கும் கடத்தும்
காற்றுக்கு காதலென்று
மீசை வைத்து லாவக
மேகங்களாவோம்
முற்றம் வந்து மூச்சுமுட்ட
வேர்த்துப்போகும்
வேடிக்கை பார்த்த அம்மாமழை
அந்தோ பாவமெனத் தோன்றும்-
ப்ரியம் ஜீவநதியென ஓடும் உன்
கை ரேகைத் தடம் வருடக் குழவிச் செழித்த
நாய்க்குட்டியாக வளர்ந்த மனது
உன் பகிரங்கமான நிராகரிப்பிற்குப் பின்னும்
அன்பினை ஏந்திக்கொண்டு உன்வாசல் வந்து வாலாட்டுகின்றது
வழக்கத்திற்கு மாறாய் நீ சட்டைசெய்யாமல் இருக்கின்றாய்
அதன் கனிவான பார்வை இப்போதுனக்கு குரூரமாயத் தெரிகிறது
அதன் கேவல்கள் உனக்கு உறுமலாய் கேட்கின்றன
அழுகறை படிந்த கண்களால் அது பகிரத் துடிக்கும் உணர்வுகளை நீ உற்றுப்பார்ப்பதுமில்லை
கேட்பாரற்றுத்திரியும் அதற்கு பசியென்பதற்றுப் போன பின்னும் உன் வழி காத்திருப்பதன் காரணம்
என்னவாகயிருக்கும் சொல் ?
அத்தனைக்குப் பின்னும் அதன் தேவை எல்லாம்
அன்பு சொட்டும் ஒரு பார்வை
மவுனம் பொழியும் நாழிகை
அதே மொழிகளற்ற புரிதல்
மீண்டும் உயிர்ப்பெற உன் புன்னகை
அவ்வளவு தான்
பிழைத்துக்கொள்ளும்-