பூஞ்சிட்டு   (கவின் மொழி)
97 Followers · 79 Following

kavithasudhakar19@gmail.com
Joined 20 February 2021


kavithasudhakar19@gmail.com
Joined 20 February 2021

அண்ணா அண்ணா அண்ணா
கோபம் உனக்கு ஏன் அண்ணா

கடுகடு வென பேசுவது ஏனோ
சிடுசிடுவென விழுவது ஏனோ

நீ தூங்கும் போது அடித்தேனோ
உன் பொருளை யெடுத்தேனோ

படபட வென பொறிவது ஏனோ
தைதை யென குதிப்பது ஏனோ

அண்ணா அண்ணா அண்ணா
கோபம் உனக்கு ஏன் அண்ணா

குடுகுடு வென ஓடி வாண்ணா
ஜில்ஜில் ஐஸ் தரவா அண்ணா

மூச்சுப் பயிற்சி செய் அண்ணா
நூறுவரை எண்ணிடு அண்ணா

கிச்சுகிச்சு மூட்டிடவேனண்ணா
கலகலன்னு சிரிச்சிடு அண்ணா

அண்ணா அண்ணா அண்ணா
ஆடிப்பாடி மகிழ்வோ மண்ணா!!

-



புத்தகத்தை நீயும் பிடி
புத்தியைத் தீட்டிடப் படி

புத்தகத்தை நீயும் பிடி
சித்தம் தெளிந்திடப் படி

புத்தகத்தை நீயும் பிடி
தத்தம் தகுதி உயரப் படி

புத்தகத்தை நீயும் பிடி
உத்வேகம் கொள்ளப்படி

புத்தகத்தை நீயும் பிடி
புத்தாக்கம் படைக்கப்படி

புத்தகத்தை நீயும் பிடி
வித்தகம் பெற்றிடப் படி

புத்தகத்தை நீயும் பிடி
முத்திரைப் பதிக்கப் படி

புத்தகத்தை நீயும் பிடி
சொத்தாக எண்ணிப்படி

புத்தகத்தை நீயும் பிடி
நித்தமும் தவறாமல் படி

புத்தகத்தை நீயும் பிடி
புத்தகமாய் மாறிடப் படி!!

-



புன்னகை ஒளிரும் மென்சிரிப்பு
பொன்நகை குன்றும் ஜொலிப்பு
வெள்ளந்தி மழலையின் சிரிப்பு
வெள்ளை நிறமே வெடிச் சிரிப்பு
மகிழ்ச்சியில் பூக்கும் புன்சிரிப்பு
மஞ்சள்நிறமே மந்தகாசச்சிரிப்பு
கர்வம் உமிழும் ஆணவச் சிரிப்பு
கறள் நிறமே அகங்காரச் சிரிப்பு
நம்பிக்கை தரும் குமிண் சிரிப்பு
நல்சிவப்பு நிறமே குறுஞ்சிரிப்பு
வாகை சூட்டிடும் சாகசச் சிரிப்பு
வான்நீலநிறமே ஏகாந்தச்சிரிப்பு
கேலி கிண்டலும் ஏளனச் சிரிப்பு
காளிமம் நிறமே நமட்டுச் சிரிப்பு
ஆனந்தம் தரும் செல்லச் சிரிப்பு
ஆரஞ்சு நிறமே அதிகாரச்சிரிப்பு
சிந்தை கவரும் சங்கீதச் சிரிப்பு
செப்புநிறமே அலங்காரச்சிரிப்பு
புன்னகை ஒளிரும் மென்சிரிப்பு
புத்துணர்ச்சி தரும் முறுவலிப்பு!!

-



சித்திரைச் செவ்வானம் ரித்வின்

சிந்தனைச்சிற்பி எங்கள் சின்சான்
சிந்தை மயக்கும் எழுச்சி நெஞ்சன்
சிறகைவிரிக்கும் எழில் சின்னான்
சிலிர்ப் பூட்டும் எயினன் கரிச்சான்

சிறுநகை பூக்கும் இளம்பிறையன்
சிக்கல் களையும் நுண்மதியோன்
சிரிக்க வைத்திடும் கலைவாணன்
சித்தாந்தம் நவிலும் பேரறிவாளன்

சிங்க நாதமென முழக்கமிடுவான்
சிவந்த கரங்களுடை அருட்பாலன்
சிப்பாய் வீரனாய் காவலிருப்பான்
சிருங்கார வேலனாய் மிளிர்வான்

சிலம்புக்கூத்தனை வாழ்த்துங்கள்
சிகரம் தொட்டு விட வாழ்த்துங்கள்
சிரஞ்சீவியாக வாழ வாழ்த்துங்கள்
சிறப்புற்று இன்புற வாழ்த்துவோம்!

-



வத்சு மாமி

எண்மை நிறைக்கும் எயினியடி கண்ணம்மா- நீ
உண்மை உணர்த்தும் உழிஞையடி கண்ணம்மா
வண்மை இறைக்கும் வள்ளியடி கண்ணம்மா-நீ
தண்மை பொருத்தும் தமிழினியடி கண்ணம்மா

இன்மை போக்கும் இறைவியடி கண்ணம்மா - நீ
நன்மை சேர்க்கும் நிலமடந்தையடி கண்ணம்மா
வன்மை கூட்டும் வஞ்சியழகியடி கண்ணம்மா-நீ
துன்மை நீக்கும் துழாய்அலங்கலடி கண்ணம்மா

ஒண்மை பொலிவூட்டும் ஒயிலடி கண்ணம்மா-நீ
கண்மை கனிவூட்டும் கயலெழிலடி கண்ணம்மா
நுண்மை செறிவூட்டும் நுட்பமடி கண்ணம்மா - நீ
திண்மை உரமூட்டும் திலகவதியடி கண்ணம்மா!!

-



மின்னெழில் பொருந்திய மிருதுளா

மின்னும் தாரகையடி கண்ணம்மா - நீ
மிழலை செவ்வாகையடி கண்ணம்மா
மிழற்றும் நாரிகையடி கண்ணம்மா-நீ
மிஞ்சும் சந்திரிக்கையடி கண்ணம்மா

மிளிரும் தூரிகையடி கண்ணம்மா - நீ
மின்னிதழ் நறுமுகையடி கண்ணம்மா
மின்னேர் நங்கையடி கண்ணம்மா - நீ
மிடுக்குடை காரிகையடி கண்ணம்மா

மிரட்டும் பேரிகையடி கண்ணம்மா - நீ
மிகை அழகு ஈங்கையடி கண்ணம்மா
மிடலுடை மங்கையடி கண்ணம்மா -நீ
மிகல்மிகு வேங்கையடி கண்ணம்மா!!

-



ஆத்திசூடியைச் சூடுவோம்
ஏத்தியேத்தித் தொழுவோம்
நித்தம் மனனம் செய்வோம்
புத்தியில் நாம் ஏற்றுவோம்

கொன்றை சூடி மகிழ்வோம்
அன்பை நாளும் பகிர்வோம்
ஒன்றாய் கூடிப் பயில்வோம்
நன்னெறியைப் பற்றுவோம்

நல்வழியைத் தொடர்வோம்
நல்லது கெட்டது அறிவோம்
எல்லோரிடமும் சொல்வோம்
அல்லவை விட்டு விடுவோம்

மூதுரையின் வழி நடப்போம்
சூதுவாது தீதும் விடுப்போம்
பொதுமை பண்பாற்றுவோம்
புதுமைகள் நாம் படைப்போம்

அவ்விய குணம் களைவோம்
கவ்வை இல்லாது உயர்வோம்
அவ்வை மொழி உணர்வோம்
இவ்வுலகம் மெச்ச வாழ்வோம்!!

-



தவளை தவளை நானே
தத்தி தத்திப் போவேனே
தவளை தவளை நானே
தாவி தாவிச் செல்வேனே

தவளை தவளை நானே
இடியின் சத்தம் கேட்டேனே
தவளை தவளை நானே
மின்னல் ஒளிக்கண்டேனே

தவளை தவளை நானே
மழையிலாட்டம் போட்டேனே
தவளை தவளை நானே
மழைப் பாட்டும் பாடுவேனே

தவளை தவளை நானே
வானம் தொட்டு வருவேனே
தவளை தவளை நானே
வானவில்லை வரைவேனே

தவளை தவளை நானே
வண்ணம் பூசி மகிழ்வேனே
தவளை தவளை நானே
விண்மீனை வளர்ப்பேனே

தவளை தவளை நானே
நீண்ட நாக்கை நீட்டுவேனே
தவளை தவளை நானே
வண்டு பூச்சிகள் தின்பேனே

-



கிளியேகிளியே கிளியக்கா
கொஞ்சிப் பேசும் கிளியக்கா
கொஞ்சம் பாரடி கிளியக்கா
கொள்ளையழகடி கிளியக்கா

கிளியேகிளியே கிளியக்கா
கோபமும் ஏனோ கிளியக்கா
கோவைப்பழமடி கிளியக்கா
கொத்தித்தின்னடி கிளியக்கா

கிளியேகிளியே கிளியக்கா
பச்சை வண்ணக் கிளியக்கா
பாலும் சோறுமடி கிளியக்கா
பசியாறடி கிளியே கிளியக்கா

கிளியேகிளியே கிளியக்கா
வளைய மணிந்த கிளியக்கா
வித்தை காட்டடி கிளியக்கா
விளையாடி மகிழ வாடியக்கா!!

-



அறிவை வளர்க்கும் தோழன்
அறியாமை அகற்றும் தோழன்
அற்புதம் படைக்கும் தோழன்
அகத்தை நிறைக்கும் தோழன்

நம்பிக்கை ஊட்டும் தோழன்
நல்வழியைக்காட்டும் தோழன்
நம்மைச் செதுக்கும் தோழன்
நன்மைகள் செய்யும் தோழன்

மகிழ்ச்சி அளிக்கும் தோழன்
மனச்சோர்வை நீக்கும் தோழன்
மகத்துவம் சேர்க்கும் தோழன்
மனநிறைவைத் தரும் தோழன்

புத்தியைத் தீட்டிடும் தோழன்
புரட்சியைத் தூண்டும் தோழன்
புகழைத் தேடித்தரும் தோழன்
புத்துணர்வை நல்கும் தோழன்!!

புத்தகமே என்னுயிர்த் தோழன்..

-


Fetching பூஞ்சிட்டு Quotes