ஒரு கூடை முத்தம்
கொஞ்சம் வியர்வைத் துளிகள்
இதமாய் சில தழுவல்கள்
இறுக்கமாய் சில மீறல்கள்
இன்னும் சில
புரியா மொழிகளையும்
சேர்த்தே
உளற உளற
அப்பாடா
இனிதே நிறைவடைந்துவிட்டது
இந்த நீள்இரவு !!
-
நம் பேச்சின்
சுவாரஸ்யங்கள்
தோய்ந்து போன
பொழுதில்
துவங்கியது
இந்த
உயிருதிர் காலம்
-
இந்த முறையும்
அந்தப் பாடலை
பாதியிலேயே
நிறுத்திவிட்டேன்
இன்றும் அந்த
பாதையை
புறக்கணித்தேன்
இப்போதும்
பேய் பயம்
நாய் பயம் போல
ஒரு பயம்
அழுத்திப்பிடிக்கின்றது
இன்னமும்
நம்புகிறேன்
நீ தொலைந்ததாய்
உன்னை மறந்ததாய்
நான் மீண்டதாய்
-
அளவுகள் ஏதுமில்லை
அழுகையை மாற்று
-புன்னகையென
இருக்கும்
இடைவெளி
இல்லாமல் போகட்டும்
-புன்னகை புயலில்.
-
என்னைக் கொன்று விடு
என கருணை மனு ஏந்தி
காத்துக் கொண்டிருக்கிறது
சில நினைவுகள்!
-
உன் வழிநெடுக்க
மிகை மிகையாய்
பேரன்பைக் கொட்டிவிட்டு
சிறுகச்சிறுக அள்ளி பொழுதெலாம்
திரிகிறது மனம்
சில பைத்தியக்காரத்தனங்கள்
எப்போதும் அப்படித்தான்
யாருமற்ற வெளியிலும் தன்னுலகை
தானே தரிசித்து நகரும்
-
நதி தொலைத்து
நகர்தலை
மறந்திருக்கும்
கல்லொன்றிற்கு
கனமழையென்ன கடும்வெயிலென்ன-
இப்போதெல்லாம் நம்முரையாடலில்
இடம் பெயர்வதில்லை அந்த ஸ்மைலிகள்
அறியாக் கதையொன்றை சொல்லாமல் சொல்கின்றது நாம் சொல்ல மறந்த மிஸ்யூக்கள்
எப்போதும் ஒன்றாகவே இருக்கிறோம் இப்போதெலாம் நாம் நமைத் தொலைத்த உணர்வு
இடைவெளிகள்,பிரிவு ,தனிமை இவையெல்லாம் இல்லாத வாழ்வு நம்மில் என்ன தந்திருக்கிறதெனக் கேட்டுப்பார்க்கிறேன்
சுவாரஸ்யங்களே இல்லாத பலவற்றைத் தந்திருப்பதாய் விடை கிடைக்கிறது
கேட்காமல் கிடைக்கும் முத்தம்,கூட்டத்தின் நடுவே கூச்சம், சின்னச்சின்ன சில்மிசம்,தொல்லை செய்யும் அத்துமீறல்
அதட்டலிடும் வெட்கம், பொல்லாத ஊடல்
பொய்க்கின்ற கோபம்,எல்லாம் எங்கேயோ கிடக்கின்றது
மனம் இப்போது தூசி தட்ட விரும்புகிறது
ஒரு பழைய புகைப்படம் போலாக நினைவுகள் துடைத்து மீண்டும் பார்த்து ரசித்து தவிக்கின்றது
விட்டுக்கொடுக்காதே
மவுனிக்காதே
வாதம் செய்
ஏதாவது செய்து சண்டையிடு
முடிந்தால் நாலு கெட்டவார்த்தைகூட சேர்த்துக்கொள்
கொஞ்சம் கொல்
தற்காலிக தனிமை,சிதைக்கும் வெறுமை
மீச்சிறு பிரிவு,கொஞ்சம் கொஞ்சல்
கொஞ்சம் கெஞ்சல்,பின்னொரு முத்தம்
இவை தானே நாம் கற்ற காதலின் உற்ற துணை
-
அவள்
பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையில்
வெண்பஞ்சாய் சுழன்றது பூமி
பளிங்குகள் இல்லை
பாறைகள் இல்லை
கல்லாய் இல்லை
கரியும் இல்லை
நெகிழ்வும் மென்மையுமாய்
உயிர்கள் ஊடுருவியது
இதை உடைக்க வேண்டாமென
கொஞ்சம் நம்பிக்கையும்
ஒரு துளி அன்பையும்
அளித்து புன்னகைத்தாள்
எரிந்து கொண்டிருக்கும் கோளுக்கு!
-