அப்படி என்ன தவறு
இழைத்து விட்டேன்??
எப்பொழுதும் உன் வருகைக்காக
காத்திருந்து இருக்கிறேன்
உன் அழகை ரசித்துக்
கொண்டாடியிருக்கிறேன்
உன் தீண்டலில் மெய்மறந்து
சிலிர்த்திருக்கிறேன்
உன்னைப் பாடல் வரிகளாய்
வடித்து இருக்கிறேன்
உன் மீது எப்பொழுதும் தீரா
நேசம் வைத்து இருக்கிறேன்
இருந்தும் என் மேல் ஏன்
இத்தனை வன்மம்
இரக்கமற்ற இரவே,
என் உறக்கம் பறித்து
சிரிக்கிறாய்
-
இனிப்பற்ற தேநீர் கோப்பையில்
வந்து விழுந்துவிட்ட சீனியாய்
உன் காதல்,
உன்னைக் கரைத்து என்னை
நிரப்புவதில் அப்படி என்ன
பேரானந்தம்
நீ இலாத ஒவ்வொரு துளியும்
கசக்கிறது
-
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள்
இருப்பதை, எப்பொழுதும் இவ்வுலகம்
மறந்து விடுகிறது. இன்னொரு
பக்கத்தை மறந்தும் கூட
பார்ப்பதற்குத் தயாராக இல்லை
அந்த இன்னொரு பக்கம் எப்பொழுதும்
அனுமானங்களால் கட்டமைக்கப்
படுகிறது. அனுமானங்கள் தவறில்லை,
அவைகள் மட்டுமே உண்மை என
நம்பி முன் முடிவுகளுக்கு வருவதில்
தான் அத்தனை சிக்கல்கள்-
உனைத் தேற்றும் சொற்கள் கைவசம்
இல்லா நேரம் மெல்லமாய்
உன்னருகில் விரல் கோர்த்து
என் தோள் சாய்த்துக் கொள்கிறேன்,
ஈரக் காற்றில் வான்வெளி நோக்கி
நாம் அமர்ந்து இருந்த நேரம்
நிலா வெளிச்சத்தில், நட்சத்திர
தோரணங்களுக்கு இடையே
நம் வலி மறக்க இயற்கை நடத்திய
இன்னிசைக் கச்சேரியில் மயங்கி
விழித்த பின் தான் தெரிந்தது
"நீ", "நான்", நாமாகியது
-
உன் இதழோரம் துளிர்க்கும்
மெல்லிய பரவளையம் கொண்டு
என் நாட்களை நேராக்கிச்
சமன் செய்யும் கலைக்கு
"கணிதக் காதல்"
எனப் பெயரிடுவோமா
-
உன்னைச் சந்தித்த நாளன்று இருந்த
தெளிந்த வானம் இன்றும் இருந்தது,
கிளிகளின் கீச்சொலிகள் கேட்டுக்
கொண்டு இருந்தது,
கடந்து சென்ற மனிதர் கூட்டமும்
இருந்தது,
நடந்து வந்த பாதையும் இருந்தது
இளைப்பாறிய மரமும் இருந்தது
நீயும் இருந்தாய், அருகில் தான்
நானும் அமர்ந்து இருக்கிறேன்
இந்தக் காதல் மட்டும்
எங்கோ ஒளிந்துக் கொண்டு
கண்ணாமூச்சி காட்டுகிறது-
உன் விரல்கள் இளைப்பாறத் தானே
இந்தக் கைகள் ஏந்திக் கொண்டிருக்கிறது
உன் தலை சாய்த்து ஆசுவாசப் படுத்திக்
கொள்ளத் தானே இந்தத் தோள்கள்
இன்னும் பலம் தாங்கிக் கொண்டிருக்கிறது
நீ சொல்வதெல்லாம் கேட்பதற்கு தானே
இந்த செவிகள் இன்னும் விழிப்புடன்
இருக்கிறது
நீ கேட்பதெல்லாம் கொடுப்பதற்காகத்
தானே இந்த அன்பு உயிர்த்திருக்கிறது
முடிவில் நீ , நீயாகவே உன்னிடம்
திரும்பிச் சென்றடைய விரும்புவது
தானே இந்த நேசத்தின் நிமித்தமாக
இருக்கிறது-
வார்த்தைகள் வலுவிழக்கும்
தருணங்களில் மௌனத்தின்
பேரிரைச்சல் நிரம்பி வழிகிறது
அறையெங்கும்
-
உறக்கமற்ற இரவுகளில்
உன் நினைவுகளை அருகில்
கிடத்தி உறங்க முயற்சிக்கிறேன்
எதுவும் கைக் கொடுக்கவில்லை
ஒரு வழியாக நீ வீடு வந்து
சேர்ந்த நாளன்று மொட்டை
மாடி நிலா வெளிச்சத்தில் உன்
மடி சாய்ந்து மொத்தத்திற்கும்
சேர்த்து வைத்து நான் உறங்கியதைக்
கண்ட நட்சத்திரங்கள், உன் மடி
கிடைக்காத ஆற்றாமையில்
இரவெல்லாம் எரிந்துக் கொண்டிருந்தன-
வாழ்க்கைப்பட்டவனிடம் இருந்து
மனக் கொடுமைகள் தாங்கி
கனவுகள் எல்லாம் கலைந்து போய்
கனத்த இதயத்துடன் வீடு வந்து
சேர்ந்தவளைப் பார்த்து "படித்த
திமிர், பணம் சம்பாதிக்கும் திமிர்"
என பழித்துக் காட்டிய அவள்
அக்கறையுள்ள எதிர்வீட்டு அத்தை,
தான் இழுத்த இழுப்புக்கெல்லாம்
கணவன் அசைந்து கொடுக்கவில்லை
என அலைபேசியில் புலம்பிக்
கொண்டிருந்த தன் மகளுக்கு
அறிவுரை கூறினாள் " ஒத்து
வந்தா பாரு இல்லனா வெட்டி
விட்டுடு" என்று-