பகலிலே என்ன செய்ய நான்...?
கடல் கீழே அழுதாலும்
இந்த மழை என்னவோ
மேல் இருந்து தான் கொட்டுகிறது...
காற்று வழியாக என்னுடன்
கலந்தே இருக்கப் போவதாய்
சொல்கிறாய் நீ..!
நான் வேறு ஒரு உலகத்தில்
வானமாய் பிறக்கப் போகிறேன்..
நீ நிலவாகவே வந்து விடு..!
இந்தப் பிறவி மனதைப் பிழிகிறது
உயிர் பிரிக்கிறது
காதல் எப்போதும் இப்படித்தானோ..?-
🌿இயற்கை உலவி
📍மருத்துவம் - தொழில்
விடியவில்லை இந்த இரவு
நிலவு ஒன்று நிலை கொண்டு நிற்கிறது
இந்தக் கடல் நான் தான்
நானே தான்...
நிலவை கடலும் கடலை நிலவும் தொட முடியாது தான்
எனக்குத் தெரியும்..!
இந்தக் காற்றின் வழியே ஓசைகள் அனுப்புகிறேன்
உனக்கு அலைகள் பிடிக்குமென்று தெரியும்
நீ நிலவொளியில் அலை கதைத்து ரசிக்கிறாய்
பல ஜென்மங்கள் இப்படியே கரைகிறது நமக்கு
நிலவு இரவு கடல் என...!
-
ஈரம் சொட்டச் சொட்ட
புழுதி கிளப்புகிறது கோடை மழை...
தூக்கம் கண்களைத் தடவும் முன்னே
தழுவிச் செல்கிறது பாடல் ஒன்று..
வானுக்கும் பூமிக்கும் நடு நடுவே
காற்றாய் மிதப்பதெல்லாம் நான் தான்...
நானே தான்...!!
இந்த இரவு இப்படியே கழிந்து விடட்டும்..!-
பசியதைக் கடப்பதும்
நோன்பில் நடப்பதும்
பிற உயிர்க் கருணையும்
ஒரு குரல் தொழுகையும்
உலகத்து நன்மையும்
இம் மனிதம் காப்பதுவும்
இறையதை உணர்தலே
எல்லாம் ஒரு குடை நிழலே...!
-
பேசிய வார்த்தைகளை விட
பேசாத மௌனங்களின் சத்தம்
கொஞ்சம் பலமானது....
பொத்தென்று விழும் கல்லை
விழுங்கிக் கொள்கிறது அமைதிக் குளம்
எறிகின்ற விரல்களுக்கு ஏனோ
புத்தரின் சாயல்...!
-
மணிக்கு இரண்டு முறை என அழைத்து
உன் வேலைகளை நான்
தொல்லை செய்வதாகச் சொல்கிறாய்
சரிதான்...!
உன் அருகாமை இல்லாத நொடிகளை
உனை அழைத்தோ உன்னிடம் கதைத்தோ
உனைக் கொஞ்சியோ விஞ்சியோ
உனைப் பற்றி நினைத்தோ
அல்லது கவிதை ஒன்றைக் கிறுக்கியோ
திருப்தி செய்து கொள்கிறேன்...
இதுபோக மீதியிருந்து
மெல்லமாய் நகரும் நொடிகள் எல்லாம்
பிரிவு ஆற்றாமை அதிகாரத்தின்
பெருந் தொகுதி...!
❤-
நீளும் சிறகுகளுக்கு நிறம் எதற்கு..?
நில்லாமல் நீண்டிடும் நல்ல ஆகாயம் இது...!
பறத்தல் ஒன்றே எனக்குப் போதுமானது
நிலை மறந்து நான் பறத்தல் ஆகச்சிறந்தது...!
தினம் ஒரு நிறமாய் பூச நினைக்கிறீர்
நான் சாயங்களற்ற சுதந்திரப் பறவை
உண்மை மறக்கிறீர்...!
பறவைக்கு நிறம் தேவையாய் இருக்கக்கூடும்
பறத்தலுக்கு அல்லவே...?
வண்ணங்களின் வனப்பில் வாழ்ந்து சாகிறீர்கள்
வாழ்க்கை தொலைக்கிறீர்கள்...!
தொலை தூரப் பயணம் ஒன்று
துயில விடாமல் அழைக்கின்றது
நான் சிறகுகள் சேமித்து வைக்கிறேன்...
இன்னும் ஒரு கவிதை கிறுக்க நேரமில்லை எனக்கு
நீளும் இந்தச் சிறகுகளுக்கு நிறம் எதற்கு..?
-
அடித்து நனைத்துச் சென்ற
அந்த கோடை மழைக்குப் பின்
அதனதன் நிறத்தை மாற்றித் தந்து
பூசிக் கொள்கிறது வானமும் பூமியும்
நீளும் இந்த பேரன்புப் பெருவெளியில்
நீயும் நானும் மட்டும்
விதிவிலக்கா என்ன..?-
மூச்சுத் திணறி
முழுகி எழும்
ஒரு முந்நூறு
நினைவுகளுக்கு
அப்பால்
இன்னும்
முடிந்திடாது
நீள்கிறது
கடல்...!-
நெகிழ்ந்திடும் நுனிப் புல்லில் பட்டு
சூரியன் தெரிக்கட்டும்...
உண்பதற்கு ஈரக் காற்றிருக்க
நுரையீரல் கொஞ்சம் நிரம்பட்டும்...
கண்களுக்கும் காதுகளுக்கும்
சாவிகள் தந்துள்ளேன்
மனக் கதவு முழுக்க இனி
திறந்தே கிடக்கட்டும்...
மூளைக்கு இன்று விடுமுறை
நாளை வந்த பின்
தொந்தரவு தொடங்கட்டும்...
அட ஆமாம்...
நான் சொல்லும் வரை
இந்தக் காலை நேரம்
முடிந்திடாமல் காத்திருக்கும்...!-