பழுத்த மரமது வேர்விட்டு
செழித்த மரமது...
பழைய மரமது என்றும்
இளைய மரமது...
தனித்த மரமது
தரணியில் மிக
இனித்த மரமது...
பட்டுப்போல் மரமது
கடைசிவரை
பட்டுப்போகா மரமது
இப்பேற்பட்ட மரத்தின்
வேர்களை
வெட்டிவிட நினைக்கும்
வீணர்களுக்கு
தெரிவதில்லை - இதன்
வேர்களை அல்ல
இலைகளைக் கூட
இம்மியும் கிள்ள முடியாதென்று...!!!-
நெருங்கி வந்தால்
நெருப்பை வீசுவதும்
தூர நடந்தால்
தூண்டில் வீசுவதும்
வாடிக்கைதான்
அவள் கண்களுக்கு...!!!-
வீசியெறிந்த
உருட்டுக்கட்டைகளை
எல்லாம்
தூசியெனக் காற்றில்
பறக்கவிட்டு
சிறுத்தைப்புலியாய்
சீரிய வீரம்
இன்று
பூரிக்கட்டையின்
முன்னால்
புனுகுப்பூனையாய்
பதுங்கி நிற்கிறது...!
புலியையே முறத்தால்
விரட்டியவர்களுக்கு
பூனையெல்லாம்
எம்மாத்திரம்...!!!-
மழை நனைத்த
தலையை
வாரி முடியாமல்
முகத்தருகே வந்து
சிலுப்பிவிட்டுச்
செல்கிறது
காற்று...!!!-
முன்னெச்சரிக்கையாய்
விடுமுறை விடும்
போதெல்லாம்
முந்திக்கொண்டு
முதல் ஆளாய்
விடுமுறை
எடுத்துக்கொள்கிறது
மழை...!!!-
சில இடங்களை
கடக்கும் போது மட்டும்
கடக்க விடாமல்
கால்கள் வேர் பிடித்து
நின்றுவிடுகின்றன...!
அதில்
ஏகாந்தப் பூக்களோ
ஏமாற்றப் பூக்களோ
கண்ணீர் பூக்களோ
காதல் பூக்களோ
சட்டென மலர்ந்து
பட்டென உலர்ந்து விடுகின்றன...!!!-
அந்தக் குறிப்பிட்ட
நிறுத்தத்தில் மட்டும்
பேருந்தை விட்டு
இறங்கும் போதெல்லாம்
பெருந்துயரம் ஒன்று
என்மேல் ஏறிக்கொள்கிறது...
அங்கே...
வரவேற்கவோ
அரவணைக்கவோ
அமர்ந்து பேசவோ
இதழ் உரசவோ
கண்ணீர் சிந்தவோ
காதல் செய்யவோ
நீயில்லை
எனத் தெரிந்தும்
இந்த
மீளா வினைகளை
மீட்டி விடும்
நினைவுகளை
என்னவென்று சொல்வது...!!!-