என்றோ உதித்த கனவுகளும்
இன்று நானும் அதன் நினைவுகளும்!
ஒன்றா இரண்டா திட்டங்கள் பல ;
பள்ளி துவங்கி கல்லூரி வரை
கனவுக்கான செயல்பாடுகள் !
வேலைக்கு சென்றவுடன்,
மழைக்காலங்களில்
வெளிச்சமற்ற பகல் போல்
கனவுகள் இருண்டே விட்டது!
மீண்டும் அதன் ஒளியை தேடி
நானும் என் கனவுகளும் !-
சில நேரம் வருத்தங்கள்
கூற விளையும் நொடியில்
வரும் கண்ணீரை விட,
ஆறுதல் பகர அருகில்
யாரும் இல்லை என்ற
நிலையில் வரும்
கண்ணீரே ஆழம் நிறைந்தது!-
சில காதல்கள் சொல்லப்பட்டு ,
சாதியினால் கொலை
செய்யப்படுவதை விட ;
சொல்லப்படமால்
மனதினுள் வாழ்வது
அழகே!-
நீ கடந்து சென்ற பின்,
உன் உவமைகளை
அள்ளித் தூவிய பாடல்களும் ;
உன் ஸ்பரிசத்தை
நினைவூட்டிய எதிர் வீட்டு
குழந்தையின் முத்தமும் ;
என்றோ நாம் அமர்ந்து
பேசிய சுவரின் ஈரப்பதமும் ;
கொஞ்சிக் கொண்டு கண் முன்
கடக்கும் சில காதல்களும் ;
உன்னை தினமும் நினைவூட்டி
மேலும் காதல் செய்ய
காரணியாக இருக்கிறது !
-
உரிமைகளை பறித்து விடுகிறீர்கள் ;
சுதந்திரத்தை பிடுங்க முயல்கிறீர்கள் ;
பார்க்கும் இடங்களில் எல்லாம்
கேளிக்கை சித்திரம் வரைகிறீர்கள்;
உழைக்க திறமை கொடுத்தாலும்
திருடன் பட்டமே தருகிறீர்கள் ;
எங்கு எதை வைத்து முன்னேற
என்று அறியாமல் ,
விழி பிதுங்கி;
வழியற்று;
நிற்கதியாய் ;
நிமிர்ந்து பார்க்க இயலா
நிலையில் கூட,
எதையேனும் சாதிக்க முயன்று
கொண்டே தான் இருப்போம் !
நீங்கள் மனிதத்தோடு நடக்கா விடினும்;
நாங்கள் மனிதத்தை
சுமப்போம் !
இப்படிக்கு - திருநங்கை 💜-
இதற்கெல்லாமா அழுகிறாய் ?
இதற்கு ஏன் சிரிக்கிறாய் ?
இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா ?
இதற்கு ஏன் இவ்வளவு ஆனந்தம் ?
இது ஒன்றும் பெரிய
தோல்வியாய் தெரியவில்லையே ?
இது என்ன யாரும் செய்யாதா சாதனையா ?
இது என்ன தாங்க முடியா கஷ்டமா ?
.
.
இதற்கு இல்லையெனில்
வேறு எதற்கு ?
-
பல நேரங்களில்
உன் பொய்களை அறிந்ததும்
அறியாதது போல் நான்
நடிப்பது ஏன் என்று யோசித்து
இருக்கிறாயா ?
உன்னை போல்
அதுவும் எனக்கு
பிடித்தவைகளே.... 💜-
எல்லாவற்றையும் கொட்டித்
தீர்த்து விட அவர்களை நோக்கி
பிரயாணம் செய்த நாட்கள் ஏராளம் !
இன்று , ஏதேனும் இருந்தாலும்
ஒன்றுமில்லை என்று சொல்லி
நகரும் நிலைக்கு நம்மை
உட்படுத்தியது அவர்களின்
மௌனமா ? இல்லை நம் காயமா ?
என்று தான் தெரியவில்லை !-
யதார்த்தமாக பழகுவதும் ;
இயல்பாய் இருப்பதும் ;
சிரித்து பேசுவதும் ;
கண்ணீரை மறைப்பதும் ;
மனசாட்சிக்கு அஞ்சி நடப்பதும்
...
...
என்று எந்த குண நலனுமே
மனித சந்தையில்
ஏனோ விற்கப் படுவதில்லை!
-
காயங்களுக்கு என்னவோ
ஆறிடத் தான் ஆசை ;
நாள் தோறும் அவைகளை
குடைந்தெடுக்கும்
நினைவுகளுக்குத் தான் ,
ஆற விருப்பம் இல்லை போலும்!-