வழிகளும் வழிமுறைகளும்
தெரியும் வரை மட்டுமே
வழிகாட்டிகளின் தேவை இருக்கும்..-
உண்மைக் கருத்தே என்றாலும்
பெரும்பாண்மையோர் பின்பற்றும்
வழிமுறைகளுக்கு எதிரானதெனில்
அக்கருத்தும் கருத்திட்டவரும்
பழிக்கப்படுவது உலக இயல்பே!-
இலையுதிர் காலத் துயரத்தில் ஏங்கிய மரங்களே
வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கிக் குதூகலிக்கின்றன..-
மாலை நேரத்து விளையாட்டாய்
மலை முகடுகளுக்குப் பின்னால்
ஒளிந்து மறையும் கதிரவன்..-
அதிகாலைத் துயில் எழுப்பும்
கோவில் பக்திப் பாடல்களும்
நடுங்க வைக்கும் பனிப்பொழிவும்
மார்கழிப் பிறப்பை உணர்த்துகின்றன-
நேர்மையின்மைக்குச்
சில நேரங்களில்
புத்திசாலித்தனமென்றும்
சில நேரங்களில்
சாமார்த்தியமென்றும்
சில நேரங்களில்
தந்திரமென்றும்
பெயரிடப்படுவதுண்டு..-
நாம் கண்டு வியப்படைந்த
பிரம்மாண்டங்களும் ஆடம்பரங்களும்
வீழ்ந்து வீணாகிப் போவதுடன் ஒப்பிடுகையில்
கை கொடுத்து விழ விடாமல்
தடுக்கும் நமது எளிமை
பெருமைக்கும் போற்றுதலுக்குமுரியதே..-
இழுத்துப் போட்டுத் தான் செய்யும்
வேலையில் வலியுணராமல்
தன் பேரப்பிள்ளைகள் செய்யும்
சிறு வேலைகளைக் கண்டு வலியுணரும்
உயிர்களே பாட்டிகள்..!-