••சிற்பமாக இருப்பதுவும்
இவன் தானோ••
சிலரின் கதைகளில்
அற்பமாய்த் தெரிவதுவும்
இவன் தானோ••
சிலரது கதைகளில்
கதைமாந்தரும் இவன் தானோ••
கதைகளைப் புனைவதுவே
தீராக் காதலாய்க் கொண்ட
கதாசிரியனும் இவன் தானோ•••!-
•••அவ்வளவு வேகமான
மனக்கோர்வையில் பொதிந்த
வார்த்தை முத்துக்களை
சேர்ந்து கோர்த்துவைத்து
அன்புமொழி பேசுகையில்
நீயும் நானும் வேறல்ல•••!
ஒன்றிய சிந்தையில்
இரண்டறக் கலந்த என்அன்பே••!-
•••இலக்கற்ற பயணியாய்
இன்னது வேண்டுமென்ற
ஆசையாவும் துறந்து
பற்றற்ற மனத்தொடு
இயற்கையின் மடியினில்
இசையோடு இயைந்து
இல்லாளின் துணையுடன்
இருகரம் வீசிநடந்து
வையகம் முழுவதும்
சுற்றித் திரியும் போக்கில்
கனா ஒன்று கண்டேனடி•••!-
•••படபடவென்று பேசித்
தீர்த்திடும் அவளின்
அப்பழுக்கற்ற உள்ளன்பின்
ஆழமறிந்து உள்ளூர
மனம் துடிதுடித்ததுவே••!
படபடக்கும் கண்ணசைவும்
ஆயிரம் அர்த்தங்களை
சொல்லாமல் உணர்த்திடுதே••!
செல்லப் பேச்சும்
கள்ளப் பார்வையும்
கொல்லாமல் குளிர்விக்குதே••!-
••திட்டித் தீராத நம்பிக்கையும்
வாழ்ந்து பார்க்கும் நெஞ்சுரமும்••
தேடித் தேடிச் சேர்த்தது
அவள் பார்த்த கண்காட்சியில்
வாங்க வியலாத பெட்டகமொன்று••
தேடித் தேடிச் சேர்த்தது
போகிற போக்கில் கிடைத்த
ஞாபகப் பறவையின் சில எச்சங்கள்•••!-
மௌனத்தைக் கற்கும் வரை•••
மனம் வசப்படாது போகுமே••!
வார்த்தைகள் படபடக்குமே••!!
திண்ணிய நெஞ்சகத்தின்
வலிமையுந்தான் விளங்கிடுமோ••
ஆழ்மனதின் ஆற்றலும்
பொருள்படவே பெருகிடுமோ••!
மௌனம் கற்கப் பழகிடுவாய்
எந்தன் மென் மனமே••!-
•••உன் பெயரில்லாமல்
என் வாழ்விருக்காது••
உன் பெயரில்லாமல்
எந்தன் நினைவிருக்காது••
உன் பெயரில்லாமல்
எந்தன் மனம் துடிக்காது••
உன் பெயரில்லாமல்
ஞாபகங்கள் எனக்கேது••
உன் பெயரில்லாமல்
வசந்த காலமும் வாடைக் காற்றும்
ஒருபோதும் இருந்திராது•••!-
•••மனம் கலங்கும் போதும்
முடிவில் இடறிய போதும்
நெஞ்சம் தளரும் போதும்
நம்பிக்கை உடைதலிலும்
கனவுகளின் நீட்சிப்பொழுதிலும்
-
என்ன இருக்கிறது
இந்த வாழ்வில்•••
•••இதுவரை பார்த்திராத
எல்லையற்ற நீள்வானம்••
ஏராளமான பறவையினங்கள்••
எண்ணிலடங்கா காடுகளும் மலைகளும்••
பறிக்கப்படாத பல்வண்ண மலர்கள்••
பார்த்துத் தீராத இயற்கை வனப்பு••
பொருளற்ற இவ்வுலகிலே
பொருள்பொதிந்த சில பயணக்குறிப்புகள்••-
•••வார்த்தைகளைக் கூறிட்டு
விற்றுத் தீர்த்து வந்தேன்••
மௌனியாக மாறிய பின்னும்
மொழியின்றி உணர்வறிந்தேன்••
மனமறியா மாணவனுக்குத் தானே
வார்த்தையும் விளக்கமும்
தேவையுற நேர்கிறது•••!-