நிர்பந்தத்தால் நிகழ்ந்த
அந்த கடைசி வழியனுப்புதலில்
உனது அன்பின் குரல்
இவ்வாழ்க்கைக்குள் ஒலிப்பது
மொத்தமாய் நின்றுபோனது.
ஆனால் காலம் கடந்தும்
இதயத்தில் எதிரொலிப்பதை மட்டும்
அது நிறுத்தேவேயில்லை.-
நீ நிரூபிப்பதே நீ.
About me....!
Author✍️
Damn research scholar in anthropo... read more
திணிக்கப்பட்ட
மௌனங்களின் மேல் உருள்கிற
வழவழப்பான சொற்கள்
எடை மிகுந்ததாயிருக்கிறது
உமிழும் அபாயங்களை
தடுத்தாள்வதென்பது ஏனோ
அத்தனை எளிதானதாயில்லை.-
எதையும் ஞாபகப்படுத்தாத
மழை எதற்கு
ஞாபகங்களின் சூட்டை தணிக்காத
அதன் ஈரம் எதற்கு
மழையின்
ஒவ்வொரு துளியிலுமிருக்கிறது
மண் மீதான தீராக் காதல்
ஒவ்வொரு துளிக்குள்ளுமிருக்கிறது
மனிதன் மறைத்த
ஒரு ரகசியக் காதல்.
-
நான்
கையாளும் சூத்திரங்களை
மறந்துவிட்ட பின்
தீர்விலிருந்து விலகி
பெருங்குழப்பமென மாறும்
எண் கணிதம்.-
யாருமற்ற இவ்விரவின்
கனத்த தனிமையும்
அடர் மௌனங்களும்
ஓயாமல் இருளில் கரையும்
பெயர் தெரியாப் பூச்சிகளின்
இடைவிடாத பிரார்த்தனையில்
பங்கெடுத்துக்கொள்கிறது.-
சூழ்ந்து நின்று
சாகசம் செய்யும்படி
நிர்பந்திக்கும் சொந்தங்களுக்கு
தனது புன்னகையின் வழியே
ஆளுக்கொரு
கடலைப் பரிசளிக்கிறது
குழந்தை.-
விஷமேற்றப்பட்ட
ஒரு புன்னகையை
நீங்கள் வலிந்து எனக்குள்
திணிக்காமலிருந்தால்
இந்த நாளொன்றும்
அத்தனை மோசமானதாய்
இருந்திருக்காது.
-
மூன்று நான்கு இருக்கைகளுக்கு
முன்னாலிருந்து மழலையொன்று
தலையை மட்டும் தூக்கிக் காட்டி
என் மீது கவனத்தைக் குவித்து
பற்கள் முளைக்காத
தனது வாயைத் திறந்து
பளிச்சென சிரிக்கிறது.
பேருந்தின் நெரிசலுக்கிடையில்
புகுந்து வரும் அவ்வொளி
அண்மித்ததும்
இனிப்பென உருமாறுகிறது.
திடீரென திணிக்கப்படும்
எடை மிகுந்த அத்தனை பெரிய
இனிப்பு பெட்டியை
எப்படி திறப்பதென்றுத் தெரியாமல்
சிற்றெரும்பென மழலையின் முன்
செய்வதறியாது
திகைத்து நிற்கிறேன்
நான்.-