சில நேரங்களில்
மடித்து வைக்கப்பட்ட கவலைகளை
எடுத்து
நம் தோளில் மாட்டிவிடுகிறது...
காலம்-
பறக்க
நினைக்குமிடங்களிலெல்லாம்
சுவாசித்து விடமுடிவதில்லை...
சுதந்திரக் காற்றை-
மௌனத்தின் குமுறல்
கேட்கும் காதுகள்
ஒருபோதும்
அணிந்துகொள்வதில்லை...
வார்த்தை அணிகலன்களை-
மறக்க முடியாத
அந்த
நாட்களெல்லாம்
ஞாபகப்பூக்களாய்
மலர்ந்து கொண்டேயிருக்கின்றன...
மனத்தாவரத்தின் வேர்களில்-
இல்லாததையெல்லாம்
இருப்பதாகக் காட்டிச்
சந்தோசம் தரும்
கனவு நல்லது...
இருப்பதையெல்லாம்
சொல்லி சொல்லிக்
கொடுமைப்படுத்தும்
இந்த நிஜத்தைவிட-
முகவரியில்லா கடிதங்களாய்
சுற்றுகின்றன...
நடைபாதைகளில்
படிந்து கிடக்கும்
உயிருள்ள விலாசங்கள்-
கல்யாணச் சந்தையில்
பெண்ணின் மௌனம்
பெரும்பாலும்
சம்மதமென்றே
மொழிபெயர்க்கப்படுகிறது...
பெரியோர்களால்-
உதிரும் சருகுகளால்
மரங்களுக்கு
வலியில்லையென்பதைக்
காற்று
எப்படி முடிவு செய்யமுடியும்...???-
கண்ணாடி ஜன்னலில்
காலை நேரத்து மழை
கண்ணீர் வடிக்கிறது...
ஜன்னல் கைதியாகிவிட்ட
பூக்களுக்காக-