திவ்யா கார்த்திக்  
2 Followers · 3 Following

Joined 23 June 2023


Joined 23 June 2023

என் கை பிடித்து பல கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தவன் இன்று என் துணையின்றி பல மைல் தூரங்களை எப்படி கடந்தான் என்று கேட்கிறது "இறந்தவரின் இரு சக்கர வாகனம்"

-



இருக்கும் வரை அனைவரையும் மகிழ்விக்கும் நான் இறந்தால், அந்த ஒரு நொடி அனைவரும் ச்சோ,ச்சோ என்ற பிண்ணனி இசையோடு இறுதி அஞ்சலி செலுத்துவர்....
நான் தான் "பலூன்"

-



தவமாய் தவமிருந்து பெற்ற தங்கமே!
வருடங்கள் பல கடந்து எங்கள் வாசல் தேடி வந்த வசந்தம் நீ!
கையில் உனை ஏந்தும் முன் ஏகப்பட்ட ஊசிகளை ஏந்தி விட்டேன்!
மருந்துகளால் மறத்துப் போன என் ஆரோக்கியம் உன் சுண்டு விரலின் ஒற்றை ஸ்பரிசத்தால் துளிர் விட ஆரம்பித்தது!
சிங்கக் குட்டி வருவான் என காத்திருந்த எங்களுக்கு ஆணின் குணாதிசயங்களை கொண்டு பிறந்த சிங்கப் பெண் நீயே!
உன் சின்ன சின்ன குறும்புகளால் கோவப் படும் என்னை உன் சிறு புன்னகையால் சாந்தப் படுத்தி விடுவாய்!
வேத மொழிகளே வேர்த்து நிற்கிறது எங்கள் வேதாவின் மழலை மொழி கேட்டு!
வாழ்வில் அளவில்லா ஆனந்தமும், எல்லையில்லா வெற்றிகளும், பெருமை மங்காப் புகழும் உன் வசமாகட்டும்!!!
"" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் வீட்டு குட்டி தேவதையே!!! ""

-



கடவுள் உன்னை மட்டும் அன்பாலே செதுக்கி எனக்காக அனுப்பி வைத்து விட்டானோ?
என் அலைபேசியில் தவறாமல் தினமும் வரும் ஒரே அழைப்பு உன்னுடையது மட்டுமே.!
ஊராரின் வசவுகள் எனை வந்தடையும் முன் உலை போல் கொதிப்பவன் நீ!
எந்த கவலையில் நான் இருந்தாலும் முதலில் கண் துடைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரன் நீ!
"நான் இருக்கும் போது நீ கவலைப் படலாமா? விடு நான் பார்த்துக் கொள்கிறேன்" என்ற ஒற்றை வார்த்தை தரும் பலம், படை பலத்திற்கு சமம்!
அக்காவாய் நான் இருந்து அனைவரையும் வழிநடத்த அண்ணன் இல்லை என்று நான் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக அண்ணனாக பதவி ஏற்றுக் கொண்ட பாசக் கார தம்பி நீ!
அக்காவாய் நான் ஒன்றும் உனக்கு செய்ததில்லை. அண்ணணாய் நீ எதையும் செய்ய தவறியது இல்லை எனக்கு!
இரத்த பந்தம் இல்லா உடன் பிறவா சகோதரன் என்ற வார்த்தை வெறும் வார்த்தை ஆகவே போகட்டும்!
உறவுகளின் உன்னதமே உன் பிறந்த நாள் ஆன இன்று உன் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கட்டும்!
அத்தியாயத்தின் அனைத்து பக்கங்களும் நம் அன்பினால் நிறையட்டும்!
""பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!!! ""


-



ஆசிரியர்
பெற்றவளின் கை விடுத்து உன் கை பிடித்த தருணத்தில் தொடங்கியது என் கல்வி பயணம்!!!
அரை மனதோடு உள்ளே வந்த நான் உன் அன்பில் அடைக்கலம் ஆகி உன்னை mam என்று அழைப்பதா இல்லை mom என்று அழைப்பதா என்று குழம்பி நின்ற தருணங்கள் ஏராளம்!!!
அன்பைக் கற்பித்த அன்னைக்கு சமமாய் பண்பைக் கற்பித்த உன்னையும் வைத்து விட்டேன் என் மனதில்!!!
நான் உயர எனை பெற்றோர் பாடுபட்டதில் ஒரு சுய நலமுண்டு. எந்த எதிர் பார்ப்பும் இன்றி அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரமாய் அறிவினை கொடுத்து எனை ஏற்றி விட்ட கலைமகள் நீயே!!!
நான் கல்வி கற்க, கால் கடுக்க நீ நின்று கற்பித்த பாடங்களை, வாழ்வின் பாலங்களாக மாற்றி உயர்ந்து விட்டேன் இல்லை இல்லை உயர்த்தி விட பட்டுள்ளேன் உன்னால்!!!
உன் கரங்களால் செதுக்கப்பட்ட சிற்பம் நான்.நன்றி கடனை அடைக்க இயலாத கரங்களால் வடிக்கப் பட்ட வார்த்தைகள் இது!!!


-



உன் மனம் என்னும் வயலில் லட்சியம் என்னும் விதையைப் போட்டு கற்பனை என்னும் நீரைப் பாய்ச்சிக் கொண்டே இரு...
நீ செய்யும் கற்பனை உன் லட்சியத்தின் உச்சத்தை உரசிப் பார்க்கட்டும்...
அளவுக்கு மீறி ஆசைப்படுகிறாய் என்று அறிவு சொன்னாலும்,
ஒன்றும் இல்லாத உனக்கு சிம்மாசனம் தேவையா என்று உறவு சொன்னாலும்,
உன் கற்பனைக்கு மட்டும் முட்டுக்கட்டை போட்டு விடாதே...
நீ கேட்கும் அனைத்தையும் இந்த பிரபஞ்சம் உனக்கு தரக் காத்துக் கொண்டுள்ளது...
நீ கேட்கும் விதத்தில் தான் உள்ளது உனக்கு கிடைப்பதும், கிடைக்காமல் போவதும்...
காசா, பணமா கற்பனை தானே செய்து விடு...
உன் சிந்தனையும்,செயலும் ஒரு சேர வரும் பட்சத்தில் "கண்ட கனவினில் பாதியையாவது கடந்து விட மாட்டாயா என்ன? "

-



குழந்தை திருமணம்

புரியாத வயதில் அறியாத மனிதனுடன் திருமணமா?
துள்ளி ஓடிய காலில் மெட்டி அணிந்து மெல்ல நடப்பதா?
பள்ளிப் பாடம் படிக்கும் வயதில் பள்ளியறைப் பாடமா?
புத்தக சுமையை சுமக்கும் வயதில் பிள்ளை சுமையா?
கதை கேட்கும் வயதில் என் குழந்தைக்கு கதை சொல்வதா?
தொட்டில் கட்டி ஆடும் வயதில் தொட்டி கட்டி ஆட்டுவதா?
சத்தம் போட்டு சிரிக்கும் வயதில் சத்தமில்லாமல் அழுவதா?
ஒரு முறை சிந்தியுங்கள் சந்ததியை வளர்க்கும் வயதா எனக்கு?
சட்டங்கள் நினைத்தால் முடியும்
"""காப்பாற்றுங்கள்"""
சட்டம் ஒரு இருட்டறை என்று சொல்லி என் வாழ்வை இருட்டாக்கி விடாதீர்கள்!!!

-



அவமானம் எனும் உளியால் தன்மானம் எனும் மரத்தை வெட்டி விட்டாய்...
வலி தானே வலித்து விட்டு போகட்டும் என்று நினைத்தேன்...
வலியின் கடைசியில் வைராக்கியம் பிறந்து விட்டது...
பிறந்த வைராக்கியம் எனக்காக இலக்கையும், அதற்கான வழியையும் வரைபடமாய் தந்து விட்டது...
அடுக்கடுக்காக அவமானம் தந்தவர்களே....,
எதை காரணம் காட்டி என்னை தலை குனிய செய்தீர்களோ, அதையே தாரக மந்திரமாக்கி உங்கள் முன் தலை நிமிரும் வரை அழிந்து விட மாட்டோம் நானும் எனது வைராக்கியமும்!!!
எனது வைராக்கியம் மற்றவர்களுக்கு வெறும் பிடிவாதமாக தெரியலாம்...
எனக்கு மட்டுமே தெரியும் அது என் தன்மானத்திற்கு ஏற்பட்ட காயத்திற்கான மருந்து என்று!!!

-



ஒரு சேர வரும் போது வார்த்தைகள்
வர மறுக்கின்றன...

வராத வார்த்தைகள் தான் சொல்ல வேண்டிய சேதியை கண்ணீரின் வழியாக தூது அனுப்பி விடும் போல!!!

அதனால் தான் என்னவோ அந்த மௌனத்தின் மொழி மற்றவர்களுக்கு புரிந்து விடுகின்றன!!!

-



கருப்பு வெள்ளை
புகைப்படத்தில் ஒளிர்கிறது வண்ணமயமான
நினைவுகள்...
நம் மனதிற்கு பிடித்த
சில உறவுகள் இன்றும்
கருப்பு வெள்ளை
புகைப்படத்திலே
நம்முடன் பேசிக்
கொண்டு இருக்கிறார்கள்...
இன்று வெவ்வேறு
ஃபில்டர்ஸ் உபயோகம்
செய்து ஒரு நாளைக்கு
பத்து புகைப்படம் எடுத்து கொண்டாலும்
கிடைக்காத சந்தோஷம்,
அன்று இரண்டு நாளைக்கு
முன்பு இருந்தே காத்திருந்து, நண்பர்களிடம்
மகிழ்ச்சியாக
பெருமை பேசி, புகைப்படம்
எடுக்க செல்வதற்கு என்றே
ஒரு அலங்காரம் செய்து,
கடைக்கு செல்வதற்குள்
அது அலங்கோலம் ஆகி,
கடை கண்ணாடியில் அதை
சரி செய்து, புகைப்படம்
எடுத்து, அந்த புகைப்படம்
கைக்கு வந்ததும் அதை மற்றவர்களிடம் காண்பித்து
மகிழ்ந்த தருணங்கள்
இனி ஏங்கினாலும்
கிடைக்கப் போவதில்லை!!!

-


Fetching திவ்யா கார்த்திக் Quotes