குறு அணல் போர்த்தல் மீறி
எந்தன் ஊடுகதிர் பாய்ச்சலில்
சிறுவத்தின் நினைவகத்தில்
ஆழப்பதிந்திட்ட
அவனது வதனத்தை
ஓர் பேருந்துப்பயண
ஆகூழ் கணத்தில்
நாமதேயம் நினைவுகூர்ந்து விளிக்க
ஆம் என்ற ஒற்றை பதத்தில்
என் புட்பக விமான
புறப்பாட்டை
பச்சை கொடி அசைத்து
துவக்கியவன்
தூர்தர்சன் யுகத்திற்குள்
என்னை இறக்கிவிட்டு
நிறுத்தம் ஒன்றில்
அம்புலியின் மந்தகாசத்துடன்
விடைபெற்றான்.
-
சுழலும் பூமியின்
இயக்கத்தில்
நாறிய குப்பைமேடும்
உள்ளடங்கும் தானே
என்றவாறு
காத்திரமான
தத்துவவிசாரத்தை
முன் வைத்து
எதிராளியை முட்டாளாக்க
விழைகிறான்
ஓர் முற்போக்குவாதி.
-
துயரத்தின் புழுக்கத்தினை
வியாபித்த
தோல்வியதனை
குறைபட்டுக் கொள்ளும் போதாமையினை
ஆன்ம ஆறுதலுக்குட்படா
அங்கலாய்ப்பினை
தாங்கவொண்ணா
விரக்தியின் வெளிப்பாட்டை
ஆற்றுப்படுத்தி
மனவெழுச்சி சமநிலை கோட்பாட்டின்
உபாத்தியாயம்
கைக்கொள்ளும்
சான்றாண்மை
ஆனைக்குப்பு சூரனுக்கு
வாய்க்க வேண்டுமென
எல்லீர் ஒன்றும்
பாண்டித்தியம்
உண்பித்தல் வேண்டாம்
முன்காட்சி உருவொன்றை
அட்ரினல் சுரப்பில் ஊறவைத்து
சந்தாதாரர் உயர்த்தும்
நின் சாமர்த்தியம்
யாவரும் அறிந்ததே
வலையொளியாரே!
-
ஒன்றாகிய பரம்பொருளின்
நியமங்களுக்கு உட்பட்டு
தன்னாகிய
ஆத்மஞானத்தை
பசித்திருந்து
தனித்திருந்து
விழித்திருந்து
பின்தொடர்ந்து
காத்திரமான
தூக்கனாங்குருவியின்
ஏகாந்த வாழ்வியலை
வாழ்ந்து விட்டு
மடிந்து போன பின்னும்
தன்னை
மீண்டும் மீண்டும்
மனனம் செய்ய வைக்கும்
பகா எண்கள்.
-
சாலிடர் டீவி யுகத்தை
நோக்கிய
காலப்பயணம்👇
(A timetravel to era of solidaire tv)-
விஐபி தரிசனம்
உயரத்தின்
உயரத்தில்
ஓய்யாரமாய்
ஓர் இருக்கை
தங்க குதிரை
ஆசனத்தில்
வீற்றிருக்கும்
அழகனுடன்
அளவளாவ
நான்மாடக்கூடலின்
ஞான மழலையருக்கு
அம்பாரியாகும்
அப்பாக்களின்
தோள்பட்டை.
-