இரவு நேரம்
கவிதை எழுத
தயாராகி விட்டன
கைகள்...
வாத்தியம் வாசிக்க
தொடங்கி விட்டது
வாய்....
நிதானமாக மூச்சுப்பயிற்சி
செய்தது மூக்கு....
அப்படியே நீட்டி நிமிர்ந்து அயர்ந்து
உறங்கி விட்டது
மூளை.
-
முல்லைக் கொடிகள்
தேரோடு கருகி விட்ட
செய்தி கேட்டு
ஓடிவந்த பாரி
நெருப்பணைய
இரு சொட்டு கண்ணீர்
சிந்தி விட்டு
விரைந்து கிளம்பி
விட்டான்....
மனுநீதி சோழனுடன்
கை குலுக்க.
-
பக்கம் பக்கமாய்
திருப்பி பார்...
அக்கம் பக்கம்
எல்லாம் உன்னை
திரும்பி பார்க்கும்.
எனக்கு பெயர்
புத்தகம்...
என்னை படித்தவன்
நடமாடும் நூலகம்.
-
சொர்க்கத்தின் வாசல்
திறந்திருக்குமாமே
யார் சொன்னது?...
நீண்ட நாட்களாக
பூட்டியே கிடக்கிறது
அவள் வீடு.
-
கவிதை
எழுத தெரியுமா ?...
என்று கேட்பவர்களுக்கு
எப்படி
எழுதிக் காட்டுவேன்...
என்னவளின் பெயரை.
-
மயானத்தின் எதிரே
வெந்து கொண்டிருந்தது.
இருட்டுக்கடை பனியாரம்...
ஜலதோஷத்தில் ஆ(கா)விகள்.
-
அந்திமாலை பொழுது
தென்றல் தவழும் நேரம்...
காகிதங்கள் எல்லாம்
கப்சிப்...
எழுதுகோல் மட்டும்
ஏகாதிபத்தியம்
பேசுகிறது.
-
எங்கள் தேசத்தில்
காகிதமும் பறக்கும்
விமானமும் பறக்கும்...
நிலமை கொஞ்சம்
இறங்கினால்
புழுதி பறக்கும்.
-