அழகழகாய்
வண்ணப் பொடிகள்
அதன் நடுவிலொரு
மென்மையான பூ...
எந்த புள்ளியில் தொடங்கி
எந்த புள்ளியில்
முடிந்ததென்றே தெரியாத
இந்த சிக்கலான
கோலத்தை போன்றது தான்
உன் காதல் என்பதும்..!!— % &-
நான்
வெளியே
நிற்பதிலொன்றும்
ஆச்சரியமில்லை..
உள்ளிருந்து
எனக்கு எந்த குரலும்
கேட்கவில்லை.— % &-
நடு இரவில்
நாதியற்று கிடக்கிறது
பெருநகர வீதி...
சுவற்றில் சாத்தியிருக்கும்
மிதிவண்டி தேடி
சிறு நீர் கழிக்கிறது
தெரு நாய் ஒன்று.
இரவின் பேரமைதியை
இதற்கு முன் அறியாத
அந்நாய் தன்னிருப்பை காட்ட
சத்தமிட்டு குரைக்கிறது..
தங்கள் இருப்பை காட்ட
ஒவ்வொரு வீதியிலும்
நாய்கள் வரிசையாய் குரைக்க
தொடங்குகிறது...!!— % &-
நிகழ்பவை அனைத்தும்
நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
இப்போது
என்னில் விழும்
இந்த சிறு மழை தூறல்
போதுமெனக்கு...
மற்றவை பற்றி
மழை நின்ற பிறகு
யோசிக்கலாம்..!— % &-
நேற்று ஒருவரை
ஒருவர்
கொண்டாடி தீர்த்தார்கள்.
இன்று
ஒருவரின்
சிறகை மற்றவர் ஒடித்து
தனியே அமர்ந்து
கண்ணீர் விட்டார்கள்.
காயத்துக்கு மருந்தும்
அவர்களே என்றார்கள்.
பிறகு
இதன் பெயர் தான்
அன்பென்றார்கள்.
எனக்கு தான் ஒரே குழப்பமாக
இருக்கிறது..!— % &-
சிறகணிந்து
பறந்தாலும்
இளைப்பாற
இயலாத
கூடற்ற பறவை
நான்.!— % &-
என் மனக்குளத்தில்
நானே
தூண்டில்காரனாக
இருக்கிறேன்...
நானே
மீனாகவும்
இருக்கிறேன்...
இந்த சிக்கலுக்கிடையில்
குளத்தில் தெரியும்
வானத்தின் அழகையும்
நானே
அமர்ந்து
ரசிக்கிறேன்.— % &-
நானில்லாத போதும்
என்னை சிலர்
தேடினார்களென
யாரோ சொல்லி கேட்கும் போது..
மகிழ்ச்சியாக தான் இருந்தது.
நான் இல்லாமலேயே
போகும் ஒரு நாளில் ..
அவர்கள் என்னை
தேடலாம்.
எனக்காக கண்ணீர்
சிந்தலாம்..
எதுவாயினும்
"இங்கு இருப்பவர்கள்
இல்லாமல் போவது தானே
நிஜம்.-
புற்களின் கீரிடங்களாய்
ஆயிரமாயிரம்
பனித்துளிகள்.
அதில்
ஆயிரமாயிரம்
சூரியனின் பிம்பங்கள்.
தன் பிம்பங்கள்
உடைத்து
சற்றே தாகம் தணிகிறது
காலை சூரியன்.-
இந்த அற்ப
காரணத்துக்காகவா
என்னை பிரிய
போகிறாய்"..என்றேன்.
சரி விடு நாளை
ஒரு நல்ல காரணத்தோடு
வருகிறேன்"..
என்று விடை பெற்றாள்.-