அந்த விடுமுறை நாளில்..
முழு நிலவும் விடுப்பிலிருந்த வேளையில்..
கடும் வெயிலில்..
சுடும் மணலில்..
கால்களும் காதுகளும் எனை
நிந்திக்க ஏன் நின்றேன்?!
நிலம் தழுவி நித்தமும்
கடல் கத்துகிறதாம்..
காணாக் குமரி கண்டத்தைக்
கரை ஏற்றத் தானோ?!
இத்தனை இரைச்சலில்
பாறை தேடி அமர்ந்தோர்க்கு
எப்படி கிட்டியிருக்கும் அமைதி?!
நேரிய எழுதுகோல் பற்றியும்
வளைந்து நிற்பதேன்
வள்ளுவர் சிலை?!
பனை நிழலில் அமர்ந்து
பகர.. வினவ.. ஆயிரம்!
பிடியில் இருந்ததோ
கைப்பேசி மட்டும்.. - அது
விக்கி விழுங்கிய ஒன்றை இங்கே
விடுவித்து விட்ட நிறைவில்..
தமிழினி_சுபா
#பேசுபடம்-
26 MAY 2021 AT 0:59
13 MAR 2022 AT 15:57
"பருத்திருந்தால்
மடியில் சிலையோ,
உடலில் சேலையோ,
பிணைக்கும் கயிறோ
காத்திருக்கும்!
கடல் பார்த்த வில்லா வாசல்
வண்ணக் குடை
வளர்ந்து நிற்பது போல
உரசும் கம்பிகள் சகித்து,
நெளிந்து நிற்கிறாய்,
விளம்பரப் பலகை தாங்கி..
உன் சிறு நிழல்,
போக்குவரத்து காவல் பணி,
தெருவுக்கே நீ தரும் அடையாளம்,
இவர்கள் கொள்ளும் அன்பு..
எல்லாமும் தான்..
எல்லாமும் தான்..
தென்னம்பாளை - குலையோடு,
உயிர்வளி அருளும் நீ
வீதி நடுவே
வீற்றிருக்கக் காரணங்கள்..",
பிதற்றும் வழிப்போக்கன் என்னிடம்
கீற்றுகள் கீச்சிடுகின்றன:
"போராளிகளைத் தெய்வங்களாக்கியே பழகிவிட்டீர்கள்..
போரைத் தவிர்க்கப் பழகுவது எப்போது?!"
உடனடி பதில் தான் இருக்கிறதே..
"விதைத்தவரைக் கேள்!"-