இருளென்றொன்று இல்லை
ஒளியென்றென்றும் உள்ளே.
- பூமா பாலன்-
மாய்ந்து போகும் மாறியும் போகும்
காய்ந்து கனியும் காயமும் வலியும்
நாளும் பொழுதும் நகரும் நேரம்
நாமும் போவோம் நாமாய் தூரம்
கொட்ட கொட்ட சொட்டும் அன்பு
வற்ற வற்ற வருகை தருமாம்
ஆயுள் போதாது தாயுள்ளம் காண
ஆவல் சாயாது ஆண்டவன் பேண
என்றும் அழியா திருக்கும் பாசம்
வேசம் இல்லா திருத்தல் நேசம்
சோகம் சாகும் வேகும் பாகும்
சோலை வனமும் மனமுள் சேரும்
பூவாய் ஆவாய் வாராய் தாராய்
வீரம் தீரம் வீற்றிருக்கும் தீயாய்
நேரம் தூரம் தாண்டி தோண்டி
பாரம் ஆறும் பாடம் கூறும்
வைத்த பஞ்சம் வைகறை கொஞ்சம்
தைத்த நெஞ்சம் தைரியம் தஞ்சம்
வேண்டும் போது ஏற்றிச் செல்லும்
தோன்றும் போது தோற்றம் கொள்ளும்.
- பூமா பாலன்-
உண்மைக்கும் கற்பனைக்கும்
இடையேயான நிலையிலிருக்கும்
உணர்வுகளின் வடிவமே எழுத்து.
- பூமா பாலன்-
விழுங்க முயன்ற வார்த்தைகளை
உமிழ்ந்து மகிழ்ந்தேன்
வெற்றுக்காகிதத்தில்.
- பூமா பாலன்
-
பயணம் தொடங்கும் முன்பே
பாதைகள் பல போடப்பட்டது
பாதைகளைக் கடந்த பின்பே
பயணத்தின் தூரம் தெரிந்தது
எத்தனை தூரம் சென்றாலும்
நீண்டு கொண்டே போகிறது
முடிவை அறிய முற்படும்போது
மீண்டும் முதலில் தொடங்குகிறது
கற்களும் முட்களும் நிறைந்த
கடுமையான பாதைகள் கற்றுக்
கொடுக்கும் பாடங்கள் அத்தனை
பழகிவிடில் பக்குவமும் படுத்தும்
ஒளித்து வைத்த ரகசியங்களை
இறுதியில் உடைத்து காட்டுகிறது
ஒவ்வொருவரும் பயணப்படும்
தனித்துவமான பாதையொன்று.
- பூமா பாலன்
-
எண்ணங்களை எப்பொழுதும்
மென்று கொண்டிருப்போம்
என்னவென்று தெரியாமல்
எதற்கென்று புரியாமல்
உணர்வுகளை வெளிப்படுத்த
வழிதேடிக் களைத்திருப்போம்
கிடைத்திருந்தாலும் புதைத்து
வைத்து இருந்திருப்போம்
பேரண்டத்தைக் கடந்து
ஞானத்தை அடைந்தும்
ஏதோவொன்று உள்ளே
மறைந்தே கிடக்கும்
புதிர்களில் இருந்து
புரிதலொன்று பிறக்கும்
புரியாதவை அனைத்தும்
புதிராகவே இருக்கும்.
- பூமா பாலன்
-
காலக்கதவைப் பூட்டி வைத்தாலும்
ஞாபகத்தின் ஒலி என்றும் நிற்பதில்லை.
- பூமா பாலன்-