இறுதி விரல் பிடித்து
இணையாக வந்த
தேவதையவள் தந்த
இணையில்லா பரிசு
இரண்டாம் தேவதையாவள்...-
குட்டிக்கள்வனே
உந்தன் பாதங்களது
எந்தன் வயிற்றில்
உதைக்கும்நேரம்..
உணராத வலியதை
நீ தரையில் நடக்கையிலே..
நான் உணர்கிறேனடா...-
எந்தன் முன்னோர்கள்
தாம் செய்த பாவம் நீங்கி
மோட்சம் பெறத்தான்..
செல்லமகளின்
பாத கொலுசுக்கு
முத்துகளாய் மாறி
சேவைகள்
புரிகின்றனரோ...
-
கண்களிலே நீர் ததும்ப..
கைகுழந்தையை
கண்ட மறுநொடி..
கண்மணி அவள் கண்திறக்கையில்..
கன்னத்தில் முத்தமிட்டு
எந்தன் காதலை சொல்ல..
அவளோ எந்தன்
கண்ணீரை துடைத்துவிட்டு
விரலால் மூக்கினை இடித்து
அடுத்தது எப்போது என்று கேட்டு
கடத்துகிறாள் என்னுள்ளே
அத்துனை வெட்கத்தினை...
-
அடிவயிற்றில்
முத்தமிடத்தான்
ஆவலுடன்
சென்றேன்...
மனைவிக்கு
கொடுப்பதற்குள்
மகளுக்கு கொடுக்க
அத்தனை ஆர்வமா..என்று
காதை திருகியபடியே
பெரும்காதலுடன்
கடிந்துகொள்கிறாள்..
சிரித்தபடியே
இருவருக்கும்
குறையில்லாமல்
கொடுத்துசெல்கிறேன்
எந்தன் காதலினை...-
பெண் நிலவொன்று
என்னை அணைக்க..
வண்ண மயிலொன்று
மார்பில் தவழ..
இருவரையும்
அணைத்தபடியே..
கழிக்க வேண்டுகிறேன்
நித்தமும் எந்தன்
இரவு பொழுதினை...-
சின்ன சின்ன
கைகள் அசைத்து..
மின்னும் அந்த
கண்கள் சிமிட்டி..
இதழ் குவித்தபடி
மழலையவள்
பேசும்போது..
மனமது மயங்கி
மறந்திடாதோ
தன்னை ரணமாக்கும்
பல்வேறு நிகழ்வுகளை...
-
பப்பா
ஒரு முத்தாச்சி தா
என வாங்கிகொண்டு
அம்மாவுக்கு கொடுக்காதே
என்றொரு
கட்டளையுமிட்டு
குட்டிகண்மணி
உறங்குகையில் எல்லாம்
அறிந்துகொள்கிறேன்
.
இன்று அவள்களுக்குள்
ஏதோ சிறு சண்டை என...-