அம்மா.....
என்றும் என் உயிராக நீ
பிடித்த தலைப்பு
உன்னை விட வேறெதுவும்
யோசிக்கத் தோன்றவில்லை..
-
அதுவரை ஓலமிட்ட குரல்கள்
ஒரளவு ஓய்ந்திருந்தது
அவர் உடல் கிடத்தப்பட்ட
மரநாற்காலியை தனியே விட்டு..
பகலே தான் அது..
இன்னும் காயாமல் இருந்த
அந்நாற்காலிக்கு மேலும்
இரு கால்கள் துணையாக,
சாயும்வேளை சாயும்வேளையாயிற்று..
இழந்தது ஒருவரைதான்
ஆனால் ஓராயிரம் ஒளிக்கற்றைகள்
அவ்வோலைப்பந்தலின்
கண்களின் வழி வருவோரையெல்லாம்
புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தது..
கல்யாண சாவாம்....-
இதுவரை அவன் என்
கைப்பிடித்து எழுதவே
ஆசை கொள்கிறான்...
எழுத்துக்கள் தெரியாமலா?
எழுதும் முறை தெரியாமலா..?
என் கைகளுக்குள்ளிருந்து
விடுபட அவன் எத்தனிக்கவில்லை..
ஏன்? .. சிறு முயற்சி கூட இல்லை..
அவன் சுயத்தை விரும்பும் தாயாய்
அவன் கைகளை விட
காத்திருக்கிறேன்....
ஒரு கட்டத்தில்
விட்டுவிட்ட கைகள்
தூரம் செல்வதை ரசித்து பதறுகிறேன்..
சரியாய் எழுதிய எழுத்திற்காய்
அவன் கொடுத்த முத்தம்
அவன் இன்னும் என் மடியில்
அமர்ந்திருப்பதை உணர்த்தி
ஆறுதல் தந்தது...-