கவிதைகள்
எழுதி சிலாகித்துக்
கொண்டிருப்பதால்,
அலைபேசியை பார்த்து
சிரிப்பதாய்
அடிக்கடி புகார் எழுகிறது...
என்ன சொல்வது
இந்த கவியெனும் காதலன்
அன்றாடம் எனை
ஆட்டுவிப்பதை...
-
#jothi_tamil kavi
பூட்டிய இதயத்தில்
அவனுக்கான
அறையிலிருந்து மட்டும்
அழுத்தம் கூடி
உணர்வுகளாய்
உடலெங்கும் தெறிக்க,
எழுந்து நிற்கும்
மயிர்க்கால்கள் வழியே
மெல்ல ஊடுருவுகிறது
அவனெனும் ஸ்பரிசம்..-
உங்கள் வீட்டில் பெண்குழந்தைகள் உள்ளனரா?
இவள் பேசுவாளா?
இவள் குரல் எப்படி இருக்கும்?
என்ன படிக்கிறாள்..?
பத்து வருட பழக்கத்திற்கு பின்னும்
பக்கத்து வீட்டு அத்தையின்
கேள்வி தான்...
ஒரு வழியாக எல்லாம் கூறிய பின்னே
இத்தனை அமைதியான பெண்ணை
நான் பார்த்ததில்லை என்ற
பாராட்டு அவளிடத்தில்...
அடுத்த தெருவிற்கு வழிகேட்ட
சித்தியிடம்
அது நிஜமாகவே தெரியாது
எனக்கூற பயம்
தெரியாதென்றால் தெரியாதென்று
கூற முடியாதா?
இப்படியா பொட்டப்புள்ள இருக்கும்
என திட்டல் இவளிடத்தில்...
அன்று
வாய்திறக்கும் இடத்தில்
பேசாமல் இருந்ததன்
குற்ற உணர்வு
இன்று எதைப் பேசுவது
எனத் தெரியாமல்
பேசிக்கொண்டிருக்கிறேன்..
-
எவ்விதம் ஒரு ஆண் மயிலிற்கு தோகையும்
ஆண் சிங்கத்திற்கு பிடரியுமோ,
அவ்விதமே ஈர்க்கிறது
அந்தி பொழுதில் நீ வீடு திரும்புகையில்
உன் அழுக்கு உடையும் வியர்வை நாற்றமும்..
உன்னை ஈர்க்க எனக்கு மட்டும்
ஒப்பனைகளும், வாசனை திரவியங்களும்
கூடவே இரண்டு முழம் மல்லியும்...
அந்த அழுக்கு உடையில் முத்தம் வாங்க
எத்தனை பிரயத்தனங்கள்...
அகங்கள் குலாவிக் கொண்டிருக்கையில்
ஆடையின் அழுக்குகள் ஒரு ஓரத்தில் தானே...
-
அதிகம் உண்டு விட்ட நாகம்
அரைகுறையாய் விழுங்கிய
கிணற்றுத்தவளையை
உருண்டு களைத்து
தவறித் துப்பியதாய்
நானும் என் கவிதைகளும்....
மீண்ட தவளையின்
மண்டைக்குள்
உலகம் முன்பு இருந்த
உருளைக்
கிணற்றை விட
உருண்டையாய் தெரிந்தது...
இது தான்
கவிதை என்று உணர
இத்தவளைக்கும்
கால அவகாசம் வேண்டுமே..-
ஐஸ் ஐஸ் ஐஸ்ஸே...
பால் ஐஸ்...
தேங்காய் ஐஸ்...
சேமியா ஐஸ்...
ஆப்பிள், ஆரஞ்சு,
மேங்கோ ஐஸ்ஸே....
ஐஸ் ஐஸ் ஐஸ்ஸே....
😍😍😍
👇👇👇
-
வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண்டு
ஊரும் எறும்பிங் கொருகோடி உய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று..
-நீதி நெறி விளக்கம்
யானை உண்ணும் உணவில்
ஒரு சிறிது தப்பி கீழே விழுந்தால்
அந்த அசைகின்ற யானை
அதைப்பற்றி கவலை கொள்வதில்லை...
அது போல வாங்கும் சம்பளத்தில்
ஒரு தனியார் துறையும் பிழைக்கட்டுமே...
ஹைக்கூ:
தனியார் பள்ளிப் பேருந்து
அரசுப்பள்ளி வாசலில்
ஆசிரியரின் மகனை ஏற்ற..-
என் தொலைபேசியின்
தொடர்பு பட்டியலில்
முந்நூறுக்கும் மேல்
பெயர்கள் இருக்கும்...
உற்றார் உறவினர்
என ஒரு நூறு..
உடன் படித்தோர்
நண்பர்கள் என
புத்தகமும் பேனாக்களும்
தூக்கிய அனைவரும் என
ஒரு ஐம்பது பெயர்கள்..
தற்போதைய மாணவர்கள்
பழைய மாணவர்கள் என
ஒரு ஐம்பது..
தற்போது ஆசிரியர் பட்டியல் வேறு...
இது போக அலுவலர்கள்
மருத்துவமனை
நகல் எடுக்கும் கடைகள்
என சிலவும்..
தொடர்புப் பட்டியல் நீளமானதால்
தொடர்புகள் இருக்குமோ என்ன?
அம்மா அப்பா கணவன் குழந்தை
மட்டுமே உலகம் என இருக்கும்
நல்ல பெண்களின் பட்டியலில்
நான் இல்லையோ...?-
திசை மறந்த இறகு
புள்ளென நினைத்து
முள்ளில் அடைக்கலமோ..?
பிரித்தால் சிதிலம்
அடைவது சிறகே....!-