புனிதம்
-
தம்பிக்கு பிடித்த சாம்பாரை
தாளிப்பில் சேர்த்து
கணவருக்கு பிடித்த அவியலை
கொதி வந்ததும் இறக்கி
அரக்க பரக்க மூழ்கிய
அன்றாடத்தில்
தன் பசி மறந்து
பம்பரமாய் சுழல்கையில்
ஆப்பிளை நறுக்கி
வாயில் திணித்து
இதை சாப்பிட்டு
மீதி வேலையை பாரென்று
சொல்லும்
மகளின் அன்பில்
மறைந்தே போனது
பசியும் பரபரப்பும்...
-
எனக்கு நம்பிக்கையில்லைதான்
எல்லோருமே சொல்கிறார்கள்
துளிருமென்று
இப்படியொரு அவநம்பிக்கைக்கு
துணை போவது வருத்தம்தான்
அன்பானவர்களின் நம்பிக்கையை
புறக்கணிப்பதில் விரும்பவில்லை
என்செய்வேன்
சில சமயம் அவர்களே மறந்தாலும்
என்னையறியாமலே
இது ஒரு இன்றியமையா கடமையாகிவிட்டது
காய்ந்த செடிக்குத்தான்
இன்னும்
நீரூற்றிக் கொண்டிருக்கிறேன்
நீங்களும் நம்புங்கள்
நிச்சயம் ஒரு நாள் துளிரும்
-
அப்பாக்களின் அருமை
இருக்கும் போது
யாரும் உணர்வதில்லை
அவரும் தம் அன்பை வெளிக்காட்டிக்
கொள்வதுமில்லை
அவர் மறைவுக்குப் பின்னொரு நாளில்
ஏதோ ஒரு நற்செயலில்
அவர் சாயலை ஏந்தும் போது
"அப்படியே அப்பா மாதிரி"
பிறர் சொல்லக் கேட்கையில்
அவர்மீதான
அன்பும் மரியாதையும்
கூடுகிறது...
-தாரிகா
-
உன் நினைவு ஏற்படுத்தும்
எதுவுமே வேண்டாம்
நீ யாரோ
நான் யாரோ தான்
நீ என்னுள்
இனி எந்த பாதிப்பையும்
ஏற்படுத்தப் போவதில்லை
என் மனதை ஆற்றுபடுத்திவிட்டேன்
இருந்தும்
உன் நிழலென்று நம்பும் ஒன்றில்
வெறுமை படிகையில்
மனம் பதைபதைக்கிறது
நம்பு
நீ எனக்கு யாரோ தான்...
-
எனக்காக நேரம் ஒதுக்குவதில்லையென்று
ஒவ்வொரு முறையும் குறைபட்டுக் கொள்கிறாய்...
வேலைப்பளு மிகையாக உள்ளதே
என்செய்வேன் நான்...
ஒரு நாளில் அரைமணி கூடவா
உனக்கு நேரமில்லையென்கிறாய்...
சரிதான்
உறங்கும் நேரம் தவிர
சில மணி நேரம் எனக்கு ஓய்வுண்டுதான்
அப்போது ஏதேனும் பொழுது போக்கில்
கவனம் செலுத்துவேன்
புத்தகம் படிப்பேன்...
எப்போதுதான் எனக்கான நேரமென்கிறாய் வருத்தமாக...
ஓ மனமே
என்னை மன்னித்துவிடு
இனியும் உனக்காக நேரம் ஒதுக்கப் போவதில்லை
ஏனெனில்
நீ என் குழப்பங்களின் பிறப்பிடமாக இருக்கிறாய்...
-