நாளை நாளையென்று ஒதுக்கிவைத்த பலநாளைகள்
இன்றுவந் தெதிரே நிற்கிறது-இன்னும்
நாள்கடத்த நாளை என்றொன்று இருக்கிறதா
என்றென் மனமோ சிரிக்கிறது..-
மையிட்ட விழியோ,மீனேதானோ?!?
மீன்பிடிக்க வலைவிரித்தவன்
மீன்விரித்த வலைக்குள்
சிக்கிவிட்டான் பாவம்...-
சொடுக்கெடுக்கும் கைக்கு
சோர்வே தெரியாதோ..
சொக்கிநிற்குமங் கைக்கு
சொந்தம் இவன்தானோ..
திக்கித்திணறி பேசும்
மொழியும் மறந்தாளோ
திக்கும் தெரியாத - விழிக்
கடலில் விழுந்தானோ..-
தண்ணீரில் கரைந்து
முடியப்போகும் வழலையைக்
கழிக்க மனமின்றி - புதிதோடு
சேர்த்தொட்டி உபயோகிப்பாய்..
ஆனால்....
கண்ணீரில் கரைந்து
மடியப்போகும் என்காதலைக்
கழிக்க மட்டும் - இன்று
மனம்வந்ததோடீ சகீ!-
-வாழ்க்கை
விருத்தங்கள் இல்லாத - தாய
விளையாட்டைப்போல் சென்றாலும்
சிறுத்தண் பார்வைகொடு - தாயே
வாழ்ந்து விடுவேன்-
பொய்'மை' ஊற்றி எழுதித் தந்தான் காதல்கவிதை - கொஞ்சம்
மெய்யும் தொட்டுத்தீட்டித்தாயேன் என்றேயுரைத்தேன்
ஆஹாஹா இதோ வருகிறேனே என்று உடனே எழுகிறான்
"அடடா தப்பு தப்பு என்தப்பு கவிதையில் பொய்தான் சிறப்பு"
அவசரமாகச் சொன்னேன்
நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே திரும்பிச் சென்றான்...
நான் பிழைத்தேன்..-
திறக்க மறந்தால்
காத்திருக்கலாம்
என்றாவது ஒருநாள்
நியாபகம் வரக்கூடுமென
திறக்க மறுத்தால்
என்ன செய்வேன்?-
நெருப்பைக் கக்கவா
நீரைக் கொட்டவா என்று
போட்டிபோட்டுக்கொண்டு
நிற்கின்றன இருகண்களும்
இடையில் இந்த மனம் வேறு..
அரவணைப்பைத் தேடி
அவனிடமே சென்று நிற்கிறது..-