குழந்தையின் கைகளில் பொம்மையாகவும்
கணவனின் காலடியில் நாயாகவும்
கனவுகளையெல்லாம் இழந்து பிறர்க்காக வாழும் உயிருள்ள பிணத்தின் பெயர் தான்
இல்லத்தரசியோ?
அம்மாவின் அகராதியில் தன்னலம் என்னும் வார்த்தை தடை செய்யப்பட்டதோ?
இல்லை என்னும் சொல்லை இல்லாமலாக்கிய என் இல்லத்தரசியே -நீ என்
இதயத்தில் என்றுமே அரசிதான்!
-உன் இளவரசி
-
மின்னலாய் என்னைத் தாக்கினாள் -அவளது குறும்புப் பார்வையால்!
மீசையை இருந்தயிடம் தெரியாமல் சவரம் செய்ய வைத்தாள் -அவளை
அள்ளியணைத்து முத்தமிடும் ஆசையால்!
மன்னனாகயிருத்த என்னை அவளது சேவகனாக மாற்றிவிட்டாள் -அந்த ஒரு சொல்லில்,
அப்பா என்னும் ஒரே சொல்லில்!
என் இளவரசியின் கோட்டையில்
நான் என்றுமே அவளது அன்பின் அடிமை!
-அப்பா-
ஏழு வண்ணங்கள் கொண்ட வானவில் வளைந்திருப்பதைக் கண்டு ரசித்தவர்கள்
பிறந்து ஏழு மணி நேரம் மட்டுமே ஆன என்னை, என் கால்கள் வளைந்திருப்பதைக் கண்டு ஏசினார்கள்
வாரி அணைக்க வேண்டிய என்னை
அனாதை இல்லத்தின் வாசலில் விட்டுச் சென்றார்கள்
ஊனம் என்னும் குறையுடன் பிறந்த எனக்கு அனாதை என்று பெயரிட்டார்கள்!-
என் மகன் நட்சத்திரமாய் ஒளிர, நான் என்னைச் சூரியனாய் எரித்துக் கொண்டேன்
இன்று என் மகன் நட்சத்திரமாய் ஒளிர்கிறான்
இந்தச் சூரியனை முதியோர் இல்லத்தில் ஒழித்துவிட்டு!
முதியோர் இல்லத்தில் தனிமையில் தவிக்கும் பெற்றோர்களுக்குச் சமர்ப்பணம்!
வருங்காலத்தில் முதியோர் இல்லங்கள் இல்லாமல் செய்வோம்!
-
விழாவில் விருந்துண்ணும் ஆசையில் தொலைத்த உன்னைக்
குப்பைத்தொட்டியில் பசிக்காக எச்சில் பண்டத்தைத் தேடும் பொழுது கண்டுகொண்டேன்
ருசி மறைத்த என் கண்களைப்
பசி திறந்துவிட்டது!-
தன் கணவனைக் காப்பாற்ற
லட்ச ரூபாய் பணத்திற்காகக் கர்ப்பப்பையைப் வாடகைக்குக் கொடுத்தாள் ஒருத்தி
பணத் தேவை வர்ணனுக்கு இல்லையோ,
கார் மேகத்தை வாடகைக்குக் கொடுக்க
- வறண்ட நிலம்
-
கிழிசலை மறைக்கும் ஒட்டுத் துணியைப் போல்
என் தலையெழுத்தின் கிறுக்கலை மறைக்க ஓவியமாய் வந்தாள்
அன்பைக் காட்டுவதற்கு,
அனாதை இல்லத்திலிருந்து!
- இந்த மலடியின் மகள்-
தினமும் மாலையில் தேநீர்க் கடையில் பிறரின் எச்சில் கோப்பைகளைக் கழுவும் எனக்கு
நாளைப் பள்ளி ஆண்டு விழாவில் சிறந்த மாணவனுக்கானப் பரிசுக் கோப்பை,
அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றதற்காக!
-குழந்தைத் தொழிலாளி
எச்சில் கோப்பைகளைக் பிடிக்கும் கைகளும்
பரிசுக் கோப்பைகளைப் பிடிக்கலாம் கொள்கையில் பிடிமானமிருந்தால்!-
பணத்தைக் கொடுத்துப் பொருளைப் பெறுவது வியாபாரம்
உணவையும் கொடுத்து உயிரையும் கொடுப்பது விவசாயம்!
அரிசியை மக்களுக்குக் கொடுத்துவிட்டு
அழுகையைத் தன் வருவாயாகப் பெற்றுக்கொண்டார் விவசாயி!
வியாபார யுக்தி அறியா விவசாயி!-