மொட்டை மாடி :
அகன்ற நிலப்பரப்பில் அலைந்து திரிந்ததில்
அவிழ்ந்து போனது
அழகியலின் அளவளாவுதலும்
அளந்தும் போதாமல் போனது
ஆனந்தத்தின் அரங்கேற்ற அரவமும்..
-
என் தோலுரிந்த கரங்களிலும் மாறாத ஆயுள்ரேகை நீ!
உன் உதடுரைத்த பொய்களிலும் சார்ந்துவிட்ட தாபக்கவி நான்!
என் காடற்ற தேசத்தில்
மாரி(றி)யேனும் பெய்துவிடு மொழியால்..
உன் பூவற்ற புவியில்
பாமாலை செய்கிறேன் இசையால்..-
கோட்சேவின் தோட்டா
துளைத்ததால் ஆன கறையெல்லாம்
அடிக்கடிபார்க்காதபடி
அருங்காட்சியகத்தில் அடுக்கியபடியே இருக்க,
பணம்பதிக்கும் இயந்திரங்களெங்கும்
பார்த்தபடியிருக்கும்
காந்தியடிகளோ,
பதவிப்பொறுப்பில் பதராயிருக்கும்
பணப்பித்து அறிவாளிகளிடம்
புழக்கத்திலிருப்பினும்
சிரித்தபடி சகித்துக்கொண்டிருப்பதும்
அகிம்சைதானோ?!
ஆணவமே தருமெனில்
அறவழி ஆன்மாவின் உருவப்படத்தை
அச்சிட்டுக் கொள்வதென்னவோ
குருதிகுடிக்கும் அசுரகுலம்
ஈசனுக்கு செய்யும்
பூசைக்குச் சமானமோ?!
-
ஈட்டிப்பிடித்தோர் வேகமதுவும்
எதிர்வினை ஈட்டுமென்றும்
இன்னொருவன் ஈட்டிக்கு மடிகையில்
ஓலமிட்டு தேகமதுவும்
முன்கொன்றோர் ஈக்களாய் பிறக்கையில்
ஏளனமிட்டு அவர் மெய்மொய்க்குமென்றும்
மதிக்கு மனமுறாது மீசைக்கு மிடுக்குற
மீட்டெடுக்க முடியா மரணமுந்துதலில்
உலகெனும் ஒரே ஓட்டுக்குள்
வரைபடம் போட்டு நாட்டுக்கு நாடு
வீரவிரயம் செய்யும்
வேடிக்கையில் ஆழ்வது வீணென்றும் உணர்த்தவே
கலியுகக் காக்கைகள் கரையுமோ?!
காக்கை மொழி கண்டறிந்தவரும் கறைபொருப்பாரோ?!
கடவுளெனும் கவண் வருகையில்
கீதையேதும் சொல்லி திருத்தப்பட
ஒரு மனித அர்ச்சுனனேனும் மிச்சமிருப்பானோ?!
காப்பாற்றப்பட ஒரு சீதையேனும் மிச்சமிருப்பாளோ?!
காரிருளே அந்த கடவுள் காணுமோ?!-
அதிர்ந்து பேசாதீர்கள்!!
இதயச்சுவரின் இரகசிய இருட்டறையில்
மாற்றார் மனங்கசிந்த பொழுதுகளில்
மின்னாமல் மங்கிப்போயிருந்த மனிதம்
மிச்சமிருக்கும் இறுக்கத்தருவாயில்
உள்ளங்கொண்டிருக்கும் இடப்பற்றாக்குறையால்
திரண்டெழுந்து
தொண்டை தொடங்கி தரணிவரை அடைத்துவிடப்போகிறது!
அதிர்ந்து பேசாதீர்கள்!!
அகவெளி அகலாமல் அபத்தத்தின்
அணிச்சை அழுகுறலும் அறுந்துவிடப்போகிறது!
அழுது பிறப்பதே சிறப்பெனில்
மனிதா அழுதுவிடு..
மனிதம் பிறந்திருக்கட்டும்!!
-
அது ஒரு ஒற்றைப்பாதை..
தத்தம் அகதெய்வத்தை
தரிசிக்க காத்திருக்கிறோம்
வாழ்வெனும் கோவில்வரிசையில்..
களைத்துப்போவோர் கடப்பதில்லை!
முரண்டுபிடித்து முந்திச்சென்று
மூர்ச்சையடைந்து முளித்துப்பார்க்கையில்
மிச்சமுள்ள தூரமெண்ணி
மலைத்துப்போவார், மாற்றமில்லை!
புறப்பட்டஇடம் பிறப்பெனும் பிறதி உறவின் அடைக்களம்,
புறந்தள்ளுதலிலோ புறமுதுகிடுதலிலோ
பயணப்பக்குவத்தின் பூர்த்திவிகிதம் பலபங்குகளாக வகுக்கப்படும் -
விரச விரிசல்களாய்..
போகும் பாதையில்
புண்சுவடு பூத்தேதீரும் -
புரிதல் பூக்களாய்..
வரிசைகளில் வாழ்க்கைப்பட்டுருக்கிறோம்..
தன்தரிசனத்தின் தட்சணையே சம்ரட்சனையெனும் தன்மையறியாது!
ஆம், இது ஒரு ஒற்றைப்பாதையே.
சமஉயிர்களை இரட்சித்தால் சுயம்சிறக்கும் ஒற்றைப்பாதை!.-
கருநிறத்து மேனியர்களுக்கு
விரல்நகங்களும் வெளிச்சந்தான்.
கழிமுகத்து கொக்குகளுக்கு
மச்சம்கிட்டும் திசையெதுவும் உச்சந்தான்.
இல்லாமையின் ஆற்றாமை இன்றியிரு!!
நிச்சலன நிலை நீக்கியிரு!!
நீளும் நொடியில் நீர்மமாக நிறைந்திரு!!
-
முழுமதியுடன் தன் 'திருமதி'யை ஒப்பிட்டு
நிறைவுச்சுவை கொண்டது அவன்மதி!
மீதி 'இனி-திருமதி'களுடனான ஒப்பீடுசுமைக்கு
ஆயத்தமாகி தேய்ந்தது பிறையென்னும் பாரின் அழகுச்சதி!
வான்வட்டநிலாவின் வடிவழகை
திட்டமிட்டு தீண்டுவதற்கென
தலைதூக்கும் மோக எண்ணஅலைகளோ
ஆண்டாண்டு காலமாக ஆண்வர்க்கத்தின் கதி!.
-சேது மெய்யப்பன்-
மன்றத்தில் உனதருகில் மாலையுடன் நானிருக்க
மாறாத மந்திரங்கள் நம்செவியில் அன்றொலிக்க
மஞ்சத்தில் என்மடியில் மயங்கியே நீயிருக்க
தீராத சொந்தம்கொள்ள நாளொன்றும் வரவேண்டும்!
-சேது மெய்யப்பன்-
நாடித் துடிப்பறிஞ்சு,
நாவில் தனித்த புளிப்பறிஞ்சு,
நீ தங்கிய தருணம் முதல்
திசுத்திரல் செல்லும் திசையெங்கும் உன்நலன் கசிச்சு,
உன் குறிப்பறிஞ்ச பூரிப்பிலென்
மார்சுரக்கத் தயார்செஞ்சு,
மசக்கையின் மயக்கமிகுதியிலும்
தாளாம உனக்காதலிச்சு,
காணாம உள்ளிருந்த உன்ன
கையிலெடுக்கும் காலம்வர
காலோ தரைபடல!!
காத்தான மனம் பிடிபடல!!
-சேது மெய்யப்பன்
-