அகிலத்தின் மூத்தவனே
ஆனை முகத்தவனே
இன்பம் தருபவனே
ஈசன் அருமகனே
உலகார் அறிந்தவனே
ஊக்கம் தருபவனே
எல்லாம் வல்லவனே
ஏற்றி விடுபவனே
ஐயம் தீர்ப்பவனே
ஒளியில் இருப்பவனே
ஓடி வருவாய்
ஔடதம் தருவாய்
அஃதே அருள்வாய் விநாயகனே 🙏-
முதல்வனுக்கும் முருகனுக்கும்
அய்யனுக்கும் அடியார்க்கும்
அயலார்க்கும் அகிலார்க்கும்
ஆதிமூலமான அப்பனே...
ஊழ்வினைக் கடனில் மூழ்கினேன்
உன்வினை கொண்டு காப்பாய்...
மந்திர திருநீறு அணிந்தேன்
மந்த நிலை மாற்றுவாய்
வில்வத்தைத் தூவினேன்
விழாமல் தாங்குவாய்
பிறவிப் பெருங்கடல் நீந்திக் கடக்க
பிறப்பருக்கும் மன்னனிடம் ஏந்திக் கிடக்கிறேன்
கரை ஏற்றுவாய் வழி காட்டுவாய்..
உன் அருளால் உன்தாழ் வணங்கி
உன் திருவடி சரணடைந்தேன்
இருள் நீக்கி ஒளி தருவாய்
நற்றுணையாவது நமசிவாயவே🙏-
கலைஞனின் விழிகள் உறக்கத்திலும் நடிக்கும்..
கவிஞனின் வரிகள் இறந்த பின்னும் துடிக்கும்...
-
உன்னிலே தொடங்கி
உன்னுள்ளே உலவி
உன்னால் இயங்கி
உன்னிடம் தொலைந்து
உன்னுடன் குமுறி
உன்பால் வாழ்கிறேன் நானே.,
என் ஆருயிர் தேநீரே!!!!
-
பூக்கள் உறிஞ்சும் தேனீக்கு
பூவின் மனம் புரியாது
அலைகள் தீண்டும் கரைகளுக்கு
அலையின் வலியும் புரியாது
காற்றில் ஆடும் இலைகளுக்கு
காற்றின் குமுறல் புரியாது
மழையில் நனைந்த மண்ணிற்கு
துளியின் அருமை புரியாது
ஊட்டி வளர்த்த மனிதர்க்கு
அன்பும் பாசமும் புரியாது
தூரம் தொலைந்து போனதுமே
தேடிச் சென்றும் புரியாது ...-
கண்ட நொடியில் கவர்ந்திழுக்கும் அழகே
உனக்கு நிலா என பெயரிட்டவன் யார்?
இருளில் விளக்காய் ஒளிரும் வெண்சுடரே
உனக்கு வெண்வண்ணம் தீட்டியது யார்?
விண்மீன் கூட்டத்தின் அருமை அரசனே
உனக்கு அரியணை தந்தது யார்?
மாதம் ஒருமுறை முழுதாய் மறைகிறாயே
உன்னைக் கடத்திச் செல்பவன் யார்?
நீ குறைந்தால் இருள்கிற மனம்
நீ வளர்ந்தால் மிளிர்கிறதே!
கல்மனம் ஒன்றே உள்ளது என்னிடம் - அதனை
எப்படி நீயும் இழுத்தாய் உன்னிடம்?
குன்றும் குழியும் நீ செல்ல
நிழலென நானும் உடன் வரவா?
தனித்தே உலவும் உனக்கு
தனியேன் நானும் துணை வரவா?
உன்னால் துடிக்கும் அலைகளிடம்
நீ என்னவன் என்றே முறையிடவா?
என்னையே சுற்றி வருகிறாயே
நீ காதல் சொல்ல வழி தரவா?
விரைவில் பதில் தருவாய் கள்வனே...-
கடலின் ஆழத்தை துளியில் தருவது
வானின் தூரத்தை வரியில் உரைப்பது
வெற்றிச் சுவையை அறிய வைப்பது
துவண்ட உள்ளம் உயரச் செய்வது
பூவின் நறுமணம் மையில் தவழ்வது
மனதின் ஆசைகள் வழிந்தே பாய்வது
ஏக்கம் அதனை தீர்த்துக் கொள்வது
ஊடல் அழகினை உணர்திச் செழிப்பது
மகிழ்வின் சிறகுகள் விரித்தே பறப்பது
காதல் குழியில் விழுந்தே மடிவது
கவிதை-
💚அந்நாளும் இதுதானா?!💚
ஔடதமாய் நீ இருக்க
ஔதாவாக நான் இருப்பேன்
என்னுள் பாதியாய் நீ இருக்க
உன்னுள் மீதியாய் நான் இருப்பேன்
தூக்கம் தொலைத்து நாள் செல்ல
தேடாதே என 'நா' சொல்ல
காதிலே நீ கதை மெல்ல
காலங்கள் பலவும் நாம் வெல்ல
இருவர் இவர்கள் ஆக மாற
தாய் தந்தை நாமென கூற
மழலைகள் மடியில் உறங்க
கவலைகள் எல்லாம் இறங்க
உலகம் யாதென அறிவோம்
வாழ்க்கை இவையென புரிவோம்
இக்கனவுகள் ஈடேறும் கனம் எதுவே- அஃது
கழுத்தில் முடிச்சிடும் நொடி இதுவே-
💚கனா கண்டேனடி💚
ஓராட்டு நீ பாடி நான் விழிக்க
நீராட்ட வரவே நீ விளிக்க
ஆடைகள் தேடியே நான் குழம்ப
ஆசையுடை தரவே நீ விரும்ப
பயணம் செல்ல நாம் கிளம்ப
எங்கே என்று நீ விளம்ப
பனிக்கால இரவிலே
யாருமில்லா வழியிலே- நம்
விரல்கள் பத்தும் ஐந்தாக
பாதச் சுவடுகள் நான்காக
வாய்மொழி எல்லாம் மூன்றாக
கண்கள் நான்கும் இரண்டாக
இருவர் இதயம் ஒன்றாக
காதல் பெருகும் நன்றாக
தூரம் கடந்து நாம் செல்வோம்
துருவம் அனைத்தும் நம் வெல்வோம்...
-
💚என்னவளே அடி என்னவளே!💚
ஒப்பனை இல்லா சொப்பனமே...
தயக்கம் கொண்டேன்,
பயத்தால் இல்லை
மயக்கம் அடைந்தேன்,
சோர்வால் இல்லை
மூச்சிரைத்து நின்றேன்,
நோயால் இல்லை
வியர்வையில் நனைந்தேன்,
வேண்டுதல் இல்லை
விந்தை நீ பேசினாய்,
கனவா? இல்லை
மணம்கொள்ள வினவினாய்,
மனம் கொள்ளவில்லை
மும்முடிப்பில் வெல்வேன்,
பொய் உரைக்கவில்லை
உனை மறுத்துச் செல்ல,
நான் மூடன் இல்லை
அழகோவியமே...
நீ இல்லையேல்,
வேறு வாழ்க்கை எனக்கில்லையே...-