யாராவது கருணைகாட்டி விட்டுவிடுங்கள்
இல்லேயேல் அதீத கருணையால் கொன்றுவிடுங்கள்
ஏன் மாறிமாறி சுண்டிகொண்டே இருக்கிறீர்கள்?
நான் சுழன்று கொண்டே
இருக்கிறேன்.
எறும்பு!-
Poetry is my therapy!
கவிகளில் கவிகளால் வளர்பவள்!
காலம் தெரியாமல் உங்கள் சிறகுகளை சில நேரங்களில் விட்டு செல்கிறீர்கள்...தேவதைகளே!
நீங்கள் காத்துகொண்டிருந்த சிறகு
இப்போதெல்லாம் கவனிப்பாரின்றி மழைக்கிறது!
உங்களுக்கு கொஞ்சம் கருணை இருந்திருக்கலாம்!-
சுற்றிக்கொண்டே இருக்கிறது காற்றாடி....
காற்றுக்கு கை வலிக்குமோ என்னவோ?-
நிரப்பி கொள்ள மீண்டும்
இருக்கும் மைப்போல
கிறுக்கி கொள்ள பக்கங்கள் இருந்திருக்கலாம்!-
லேசான இரவுகளில்...
நதிநீராய் இருக்கின்றாய்!
கடல்நீராய் இருக்கின்றாய்!
கண்ணீராய் இருக்கின்றாய்!
கானலாய் இருக்கின்றாய்!
மொத்தத்தில் யார் நீ?-
நீ நீயாக இரு...
நான் நானாக இருந்துவிடுகிறேன்...
நம் இடையில் மட்டும் ஓர் யுகக்காதல் கிடக்கட்டும்!-
ரயிலின் பாதையில் இருந்து இறக்கிவிடப்பட்ட துருப்பிடித்த ரயில் பெட்டியின் மேல் படர்ந்து சிரித்துக்கொண்டிருக்கும் அந்த மஞ்சள்பூவிடம் கேட்டேன்...
உண்மையில் சொல் இந்த துருப்பிடித்த ரயில்பெட்டி....
தேவையில்லையா?-
பேருந்தில் அழகான சன்னலிருக்கை.
ஒரு சலசலப்பான சாலையின்
ஓரத்தில் இரண்டு
கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் நின்றுகொண்டிருந்தார்கள்!
ம்ச்...ம்ச்.. இல்லை இல்லை...
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த இருவர் நின்றுகொண்டிருந்தனர்!
ஹும்...வேடமணிந்திருப்பது புரியாமலே இருந்திருக்கலாம்...
பேருந்து கடக்கும் வரையிலாவது
புன்னகை எஞ்சியிருக்கும்!-
அத்தனைக்கு பிறகும்
தொலைதூரத்து ஒளிக்கீற்றில்...
நெடுநேரப்பயணத்தில்
உடன்கடக்கும் இரயில் ஓசையில்...
வரண்டபின்பு தேடும்
பாட்டிலில் இருக்கும் இரண்டு சொட்டு தண்ணீரில்...
கண்ணம் தாங்கும் முன் கண்ணீரை தாங்க மையோடு நிற்கும் என் பேனாவில்...
அத்தனைக்கு பிறகும்
அசைக்க முடியாமல் நீ ஏன் நிற்கிறாய்?
-
பன்னிரண்டு பாடல்களை மாற்றி,
இருபது பாடல்களை இடையிலேயே நிறுத்தி,
இன்னும் அந்த ஒரே பாடலை மட்டும்
எதற்காகவோ யாருக்காகவோ தேடிக்கொண்டே இருக்கிறோம்!
-