சுள்ளென்று குத்தி செல்லும்
சூரியனின் கதிர்களை
முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொள்ளும்
அதே மனம் தான்
சிறு பள்ள நெளிவில் தடுமாறி
தளர்ந்து போகிறது...
-
பெரும் கூட்ட நெரிசலில்
தவறிடாத பாதைக்கு
பெரும் ஊன்றுக் கோல்
அவன் சுண்டு விரல்....-
சுருங்கிய கண்களில்
விரிந்தது பிம்பம்
கைப்பேசி திரையில் அவள்...
-
சிறுபிள்ளை தான் நான்...
அவன் மார் தொட்டு
ஏறி இறங்கி செல்லும்
மூச்சுக்காற்றோடு சறுக்கி
விளையாடும் போதெல்லாம்...!!-
யாருமில்லா சாலையில்
ஆடை இறுக்க இடையை நழுவும்
காற்றுக்கு அவனின் சாயலே தான்...!!
-
மணி நேரமில்லை என்றாலும்
பெய்து தீர்த்த மழையால்
தணிந்த வெப்ப சலனத்தில்
இளைப்பாறி கொண்டிருக்கிறது
இலை விழுதுகள்...
வறண்ட சாலை பள்ளங்களில்
சிறு ஓடைகள் ஓட
தத்தி தத்தி குதித்து விளையாடி
கொண்டிருக்கும் தவளைகளை
நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது
கரை ஒதுங்கிய நாய்கள்....
நனைந்த பின்னும்
சிலிர்த்துக் கொள்ளும் சிட்டுக்குருவிகளை
நகலெடுத்து கொண்டிருக்கிறது
யாரோ சிலரால் நனைந்த குடைகள்....
அந்த நாள் பொழுதையும்
அந்த நேர அந்தியையும்
ஆற விடாமல்
நுரை பொங்க வழிந்துக் கொண்டிருக்கிறது
குவளை குவளையாக தேநீர்....
இவை யாவைக்கும்
தொடர்பில்லாதது போல்
யாருக்கோ காத்திருக்கும்
பேருந்து நிலைய இருக்கையில்
அமர்ந்திருக்கும் இரு இலை சருகுகளுடன்
நானும்...!!!
-
பெரிய அளவிலான இலையொன்று
சருகாகி போன நிலையில்
சுருங்கி கிடந்ததை
நாய்க்குட்டியென எண்ணி
கவனமாக கடந்து சென்றேன் ...
உண்மையிலே இடது பக்கம்
படுத்திருந்த நாய்க்குட்டியை
கவனிக்காமல்...
உண்மை தான்...
நிஜங்களை காட்டிலும்
கற்பனையிலும் சாயலிலுமே
சரிகிறது மனம்...!!-
தீர தீர
தீரா காதலை
கருவறை அல்லாது
காதல் அறையில் சுமந்து கொண்டு
காத்திருப்பின் தாகம்
தணிய மறுக்க
நினைவுகளை நீராய் விழுங்கி கொண்டு
உணவெடுக்கும் வேளையிலும்
உனை எண்ணத்தில் உடுத்தி
உடுப்பிலும் உன்னையே நிறுத்தி
ஒரு நொடியாவது உன்னோடு என
அலைந்து திரியும் நானும்
ஓர் நாடோடி தான்
எனக்கான இருப்பிடமாய் நீ வரும் வரை..!!!-
எத்தனையோ வருடங்கள் கழிந்து
எனக்கான சில வருடங்கள் வாழ்ந்து
தினம் தினம் ஜனனம் எடுக்கும்
இவ்வாழ்வில்
மீண்டும் ஓர் புதிய ஜனனம்
எனக்கே எனக்காய் இருக்கும் என்னோடு...
பிறந்த நாள் எனும் பெயரில்...!!!
-