மழை தீர்ந்து
மௌனித்திருக்கும் வான்
வார்த்தைகள் வற்றி
வரண்டிருக்கும் நான்
இருவருமின்று
கைகோர்த்துக்கொண்டோம்
ஒருமித்தேயொரு முறைப்பாடியற்றி
உன் வீட்டுயன்னல்களில்
தவழ்தென்றலிடம்
அவசரச்சேதி அறிவித்திருக்கிறோம்,
விடயமறிந்ததும்
வெளியில்வந்துன்
இன்முகம் காண்பித்துச்சிரியேடி!
போதுமேயடி காதலி, இது மிகை
எனக்கொரு கவிதைக்கும்
வான்நண்பனுக்கொரு
மழைநிகழ்த்துகைக்கும்
-
ஒரே நாளில் பூத்துதிரும் வண்ணமலர்
ஓவென்று அழுது புலம்புது தம்கதை
தூரத்தில் பறந்திடும் துடிப்பான வண்ணத்தி
துரிதமாய் விரைந்திடுது கதறல் கேட்டவழி
ஏனய்யா இப்பிறவி எமக்கெனவே வாய்த்திட்டான்
எண்ணற்ற ஆசைகொள்ள தகுதியும் பறித்திட்டான்
பிறப்பும் இந்நாள் இறப்பும் இந்நாள்
பலநாள் வாழ்க்கை பலிக்காத சாபம்
இதுவோ உன்புலம்பல் நகைத்தேன் சிரித்தேன்
இப்படியோர் வாழ்வுபெற தவியாய் தவித்தேன்
ஆசைநிறைந்த அல்லல்வாழ்க்கை
வேண்டாமடி மலரே
அமைதிநிறைந்த உன்வாழ்வு
ஆசிர்வாதமடி தளிரே.-
நீள விரிந்த நீர்க்கரை
நெஞ்சம் நிறையக் காதல்
நிசப்தம் பழகிய
நன்மாலைப்பொழுது
உன்னுடன் ஒரு நெய்தல் உலா
தூரத்தே அஸ்தமிக்கும் சூரியன்
பக்கத்தே பல்லிழிக்கும் பௌர்ணமி
மின்மினிகளின் ஒளித்தோரணம்
மீன்களின் நவநர்த்தனம்
அலைகள் ஓதும் காதற்கீர்த்தனை
ஆழிவாய் மிதக்கும் ஓடப்பல்லக்கு
என் தலைமுடி வருடிட உன் விரல்கள்
தலைவைத்து உறங்கிட உந்தன் மடி
வாய்க்கவேண்டும் உன்னோடொரு
கடற்பயணம்
-
நீ நீராடித் தலை துவட்டிச்
சிந்திய நீர்த்துளிகள்
என் கடைவாய்வழி வடிந்து
நாசிகளூடு புகுங்கணத்துச்
சந்தேகம்,
நன்னிலத்தில் பெய்த மழைநீர்
நாற்திசை நதிகளிலும் ஓடி
அந்தணர் கைவாய் அகப்பட்டு
ஆகம மந்திரங்கள் ஒலிக்கபெற்று
அபிஷேகாராதனை செய்வித்தருளிய
தீர்த்தத்ரவம்
அதுவன்றோ,
ஐயமுற்றேன்.-
மேகப்பல்லக்கு வானவீதியில்
ஊர்வலம்தான் போகுது
மின்னற்குடைகள் கணப்பொழுதில்
விரிந்தேதான் மடியுது
இடித்தாளம் எக்காளமாய் ஒலிக்குது
புயற்காற்று சாமரங்கள் வீசுது
புவிமரங்கள் பரதமும் பழகுது
எந்நாட்டு இளவரசி விஜயம்
ஏன் இத்துணை ஆர்ப்பாட்டம்
விண்ணாளும் தேவமங்கை அவளோ
இன்னிசை பாடி வந்திறங்கினாள்
தண்ணீர் தேவதை
அவள், மண்ணாளும்
மழைராணி அன்றோ!!-
உன் காலடித்தடம் பதிந்த
கடற்கரை மணற்கூட்டம்
காலகணிதம் செய்து
கட்டுக்கதைகளை பொய்ப்பித்தன
கடற்கன்னியருக்கு
கால்கள் இயல்பென்றே!-
வானம் பார்த்தே வாழ்ந்திருப்பேன்
வானவில் கொண்டே கவி வடிப்பேன்
வங்கக்கடல் அலை ரசிப்பேன்
சங்கத்தமிழ் நான் படிப்பேன்
விண்மீன் கொய்தே சரம் தொடுப்பேன்
விந்தைகள் யாவும் சொல்லிலுரைப்பேன்
எழுதுகோல் நண்பன் என்றேன்
எழுதும் மையில் என் ஆயுள் கண்டேன்
அருமருந்தன்ன தமிழ் கண்கொண்டேன்
அரியதோர் வரம்தாம் அடைந்திட்டேன்
தேன்தமிழ் ததும்பும் பா புனைவேன்
தேகம் மரிக்கினும் தமிழாய் பிறப்பேன்!-
நின் செல்லக்கொஞ்சல்களையும்
குட்டிக் கோவங்களையும்
சிறுகத்திரட்டிச் செதுக்கியதே
என்றன் காதற்பெருங்காப்பியம்
வசனமுடிவின் முற்றுப்புள்ளிகள்
உன் முத்தங்கள்.
காற்புள்ளிகள்
கட்டியணைத்தல்கள்,
ஆச்சர்யகுறிகள் யாவும்
அன்புசேர் காதுதிருகல்கள்!
வார்த்தைகள் வற்றி
குறிகளே மீள்கிறது,
முடிவுறாதொரு தொடர்காவியம்
அது நம்மிடை காதல்!!
-
சிறுநண்டுகளின் சில்மிஷம்
தீர்ந்தபாடில்லை.
தூரத்தில் கதிரவனும்
கண்ணடித்து
காதல் சமிக்ஞை
காண்பித்தான்.
காற்றில் உருண்ட
இராவணன் மீசைகள்
அடாவடியாய்
காதலிக்கிறேன் என்றன.
அவள் என்னவள் என ஆர்ப்பரித்து
விரைந்துவந்து
கட்டித்தழுவிக்கொண்டன.
அலைகள்,
கரையை-
சிந்திச்செல்லும் ஒவ்வொரு
கண்ணீர்த்துளியையும்
உறையச்செய்து
உனக்காயொரு மாளிகை
அமைத்துக்கொண்டிருந்தேன்
கரைந்த கண்மைகள்
கருந்தீந்தை பூச
என் மாளிகை
இரவோடு சங்கமித்துவிட்டது
உன் நினைவுகள் கொண்டு
விலாசம் அமைத்து
காற்றதிர்வலைகளிடம்
சங்கதி பகிர்ந்திருக்கிறேன்
அலைவரிசை அகப்பட்டுவிட்டால்
என் மாளிகை சேர்ந்துவிடு.
-