விடுதலை பெற்ற இந்தியாவில்
இருக்கும் ஒவ்வொருவருக்கும்
அவர்களது உரிமை
அவர்களுக்கென உருவாக்கப்பட்ட
ஒரு தனி அரசியலமைப்புச் சட்டத்தால்
உறுதி செய்யப்பட்ட நாள் இன்று.
இந்தியக் குடியரசுக்கு உழைத்த
அரும்பெரும் தலைவர்களுக்கு
நன்றிதெரிவிப்போம்.
-பித்தன் ✍️— % &-
காலியான ரோட்டில்
சில்லென்ற எதிர்க்காற்றில்
மிதவேகமாகமாக பைக்கில்செல்லும்
தருணத்தை
ஆசிர்வதிக்கிறது வானம்
மென்தூறல் எனும்
அட்சதை தூவி...
-பித்தன் ✍️-
பணியிடத்து
எந்திரக் கூச்சலிடையே
புள்ளினத்தின் மெல்லிசை
நினைவூட்டுகிறது,
நான் வேலைசெய்வது
முன்னாள் பெருங்காட்டில் என்று.!
-பித்தன் ✍️-
ஒரு தகப்பனைப் போல்
உன் நன்மைக்காக
இரண்டு அடி கொடுத்த
வள்ளுவனைக் கொண்டாடுக!
திருவள்ளுவர் நாள்!
-பித்தன் ✍️-
சுழன்றும்
ஏர் பின்னதுலகம்.
உழுவார்க்கு
வணக்கங்களையும்
உழாஅர்க்கு
முன்னவரை வணங்கி வாழ
வாழ்த்துகளையும்
உரித்தாக்குகின்றேன்.
-பித்தன் ✍️-
இதோ போகி
அதோ நெருப்பு.
அறத பழசான
ஜாதி மதங்களையும்
மூட நம்பிக்கைகளையும்
எரித்துக் கொண்டாடுங்கள்.
புகை வானேறி முட்டட்டும்.
போகித்தீ உங்களை
உளங்குளிர்ந்து வாழ்த்தட்டும்.
-பித்தன் ✍️-
கழைத் துளை வழி
நுழைந்த வெற்று வளி
வெளிவரும்போது
இசையாகியது. அது
செவித் துளை வழி
இதயம் நுழைந்து
இனிமையாய்க் கரைந்து
பசையாகியது.
-பித்தன் ✍️-
என்னிடமிருக்கும்
அழுக்குமூட்டையிலிருந்து
நாளுக்கொன்றாய்
அழுக்காடைகளைத்
தூர எறிகிறேன்.
அன்றைய ஆடை
மீண்டும் அழுக்காடையாக
என் அழுக்குமூட்டையில்
சேர்ந்து விடுகிறது.
-பித்தன் ✍️-
நம்பிக்கையும்
முயற்சியுமே வேண்டும்.
அது எத்தனை பெரிய
மலையையும்
பள்ளத்தையும் தாண்டும்.
பிறகு உங்களைத்தான் வாழ்த்தும்
இந்தப் புது ஆண்டும்.
-பித்தன் ✍️-
உண்ணுதல்
யார்க்கும் எளிய,
அரியவாம்
ஊட்டுதல்
தத்தம் மகற்கு.
-பித்தன் ✍️-