Pavazha Muthu   (Nithilarani)
9 Followers · 4 Following

Love for poems
Joined 28 April 2021


Love for poems
Joined 28 April 2021
17 APR AT 19:42

இருளறையின் நாவில்
வடிந்துகொண்டிருக்கிறது
ஒற்றைத்துளி வெளிச்சம் :)

-


6 APR AT 8:30

அடிக்கடி கண்சிமிட்டி
உடையும் நட்சத்திரங்களை
என் வானத்திலிருக்கும் ஒரேயொரு நிலா
ஒளித்து வைக்கிறது

உடைந்த நட்சத்திர பாகங்களை
ஒட்டுபோட அலைகிறேன்
நிலவிடம் தொலைந்த நட்சத்திரக் கூட்டத்தில்
தீ பற்றி மீந்த சாம்பலை
உவாநாளில் பூசிக்கொண்டிருந்தது நிலவு

-


1 MAR AT 11:53

அலகு தெறித்துவிட்ட நெல்லின் உமியில்
வேறொரு குருவியின் ரேகை பதியப்பட்டிருந்தது

வண்ணங்களைத் தூவுவதாய்ப் பாசாங்கு செய்த பட்டாம்பூச்சியின்
உதிர்ந்த சிறகை ஏந்திய எறும்புகளின் கரங்களில்
கொஞ்சூண்டு ஈரம் பிசுப்பிசுத்தது

தீபாவளிக்குக் காலி செய்யப்படும் ஒட்டடையில்
கூடுதலாக ஒருநாள் தங்கிய சிலந்தியிடம்
வாடகை வாங்க வழியொன்று சொல்லுங்களேன்

மேலும்
ஒருநாளை ஒட்டிக்கொண்டு வந்த பிப்ரவரி
எதார்த்தத்தை மென்று
மெல்லச் சிரித்து
அடக்கமான கல்லறையில்
தோற்றம் - 29.02.2024 - மறைவு செதுக்கப்பட்டிருந்தது
எழுப்ப வழி சொல்லுங்களேன்

-


20 FEB AT 16:30

வெளியில் இழுத்து
இலைச்சுருட்டுக்குள் விட்டதும்
அணைகிறது பசிப்புகை

-


13 FEB AT 23:06

பேசுவதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட
சொல்மணிகள் தீர்ந்தும் வெறுங்கிண்ணத்தைக்
கொத்தித் தின்பதில் காதலும்
ருசிதீர்ந்து
அடுத்த மாடிக்குப் பறத்தலில் பிசினஸும்
வெகுவிமரிசையாக நடைபெறுவதற்கான என்ட்ரி டிக்கெட்
வாலண்டைன்ஸ் டே


-


11 FEB AT 19:54

கண்கூச ஒளிர்ந்த மின்னல்வேர்
இரு நொடிக்கு மட்டும்
நீர் ஊற்றி வளர்த்துவிடுகிறது நேசச்செடியை

மூன்றாவது நொடியில்
பற்றி எரிகிறது மனம்

அந்த நொடியில்
உரு மங்கி மறைந்த வேர்
வேறொருவருடைய வானில்
வேறொருவருடைய மின்னலாய் வேரூன்றியிருந்தது

பாவம்
நீங்களாவது சொல்லுங்களேன்
எரிந்து கொண்டிருக்கும் நேசச்செடியை
அணைந்து வீழ

-


13 DEC 2023 AT 0:36

இரவுநேர பயணங்களை
உமிழும் சாலைகள்
நெளிந்து கொடுத்துக் கொண்டிருக்கும் அழகுக்கு
திருஷ்டியாய்
ட்ரெய்னேஜ் குழிகள்
வேகத் தடைகள்
மேடு பள்ளங்கள் 'உச்' கொட்ட
ஊர்ந்து நிதானிக்கும்
கனரக வாகனங்கள்
திருஷ்டி கழிந்து
கரும்புகையைத் தூவெனத் துப்புகிறது

அந்தகாரத்தில் மையைப் பூசிய கையோடு
அளவெடுக்க வேண்டும்
ஓசோனின் ஓட்டையை

-


4 DEC 2023 AT 21:01

நூலகப் புத்தக அடுக்கில்
இலட்சப் பக்கங்கள் ஆண்டாண்டுகளாய் தவமிருந்து
மேஜைக்கு வந்ததும்
ஒருமுறை
முன்னிருந்து பின்னாகவும்
பின்னிருந்து முன்னாகவும்
இட வலமாகவும்
வல இடமாகவும்
தலைகீழுமாய் ஒரேயொருமுறை
முன் அட்டைப்படத்தை ஒரு நிமிடம்
பின் அட்டையை இரண்டு நிமிடம்
விலையை மட்டும் மூன்று முறைக்கு ஒரு நிமிடம்
நூறு பக்க நெடுங்கதையில்
பாதி பக்கங்களை விழுங்கியும்
மிஞ்சியதில் பாதியை விழுங்கி குமட்டியும்
எஞ்சிய பாதியில் வலைவீசிப்பிடித்த ஆறு வரிகளை
காலத்தின் வடு ஆற்ற ஸ்டேட்டஸ் வைத்தும்
தேற்றிக்கொள்கிறேன்

இத்தனை அலுங்கல் குலுங்களில்
நான் கலைத்த நூலின் தவத்துக்கு
வெள்ளையடிக்கப்பட்ட இரவுகளைக் குனுகுகிறது
லைப்ரரி புறாக்கள்

-


22 NOV 2023 AT 20:10

துள்ளிகுதித்து ஓடிவரும்
பிஞ்சு நெஞ்சை
ஆரத் தழுவி அமர வைப்பதாய்
கனவு காண்கிறேன்
தூக்கியெறிந்து சுக்கு நூறாய்
உடைக்கிறாள்
கனவையும்

இப்போது அவள்
ஓர் உப்பளவு உவர்க்காத முகச்சுளிப்பை
கடலளவு அளந்து ஆற்றிக்கொண்டிருக்கிறாள்

அத்தனையும் சகித்து
மனம் நொந்து எழுந்த அடுத்த நொடி
"அவங்க அம்மாவாட்டம் இருக்கறாள"
என்பதாவது
காதுக்கு எட்டா தூரத்தில்
அலைந்து கொண்டிருக்கலாம்

-


31 OCT 2023 AT 17:44

சுருங்கி "லப்" கொட்டுந்தோறும்
அவன் கடுஞ்சொல்லில்
சுருங்கும் அவள் முகச்சாயலைப்
பூசியிருக்கிறது அது

அடுத்த கணத்தில்
அவனது பிக்கப் லைனால்
"டப்" என விரிந்து பல்லிளிக்கும் அவளை
அப்படியே உரித்து வைக்கிறது

"லப் - டப்" அடிக்குமதன் நாகரிக மொழிக்காக
இந்தா ஒரு வெள்ளைப்பூ!

-


Fetching Pavazha Muthu Quotes