என்
வண்ணமே!!
மழையினால் உமக்கு
காய்ச்சல் வரும் என்ற
கவலை எனக்கு
எப்போதும் இருந்ததே
இல்லை..,
காரணம்,இங்கு
வானவில்லை நனைக்கும்
மழை இதுவரை
வானில் பிறந்ததே
இல்லை..!-
சிந்தவே சித்தரிக்கப்பட்டவன்..
இவண்.நித்திரை தொலைத்த நிதி 👼👼
எழுதாத வரிகள் எழுத
எடுத்தேன் உன்னை பேனாவே,
எழுத்தை நான் தொடங்கும் முன்னே
எதிர்வந்தாள் என் மைனாவே!
என்ன இனி எழுதுவதென்று
எறிந்தேன் உன்னை பேனாவே,
என்னை எழுதி என்னிடம் தந்தாள்
எனதருமை மைனாவே..!-
அவள் இனியவள்,
அமுதினும் இனியவள்
அவள் அமைதியானவள்,
அழகில் வான்மதியானவள்
அவள் மென்மையானவள்,
அகத்தில் மேன்மையானவள்
அவள் சாதாரணமானவள்,
அன்பில் அசாதாரணமானவள்
அனைத்திற்கும் மேல்,
அவள் என்னவள்,
வேறென்ன?
அவள் என்னவள்..!
-
மாலை நேர
மதியைக் காண
நிமிர்ந்துப் பார்த்தேன்
நானே நானே,
மதி குனிந்துதான்
எனைப் பார்கையில்
மனம் குழைந்ததே
தானே தானே,
விழிப் பாலத்தில்
மொழி வண்டிகள்
உருண்டோடின மௌனமாய்
மெல்ல
காதல் சேர்க்கவே,
காதல் வந்ததே
காற்றும் வந்ததே
இருந்தும் காத்திருக்கிறேன்
இருவர்
கைகள் கோர்க்கவே..!
-
முறிந்த காதல்களின் உள்ளிருக்கும் இரு பாலரின் பிரிவின் காரணங்களை விட , அதில் அடங்கி இருக்கும் நியாயத்தின் முகமே ஒங்கி உயர்ந்து நிற்கும்..
நியாயத்தை கைவசம் வைத்துக்கொண்ட
ஒருவர் எப்போதும் தான் எடுத்த முடிவில் உறுதியுடன் உலாவ எண்ணுதல் வேண்டும்,
தவறினால் முட்டாளக்கப்படுவாய்,
புரிந்து கொள்
இங்குக் கருணைக்கு காலியிடம் இல்லை,
எனவே
சொரணையுடன் இருங்கள்..!
-
காற்றில் இலைபோல
மின்னல் கிளை கொண்டு
விண்ணில் மிதக்கும் இவள் கார்முகில்..
காட்டின் தேன்போல
கதைத்து மனம் கவர்ந்து
ரசிக மனம் அள்ளும் கலைமகள்...
ஒலிவாங்கியை
உயிராய்க் கொண்டு
உயிர் வாங்கிடும்
இளமைச் செண்டு,
இன்று,
நலிவற்ற வலிகளை
எல்லாம் நீ மற...
நாளை,
கனவெல்லாம்
காத்திருக்கிறது
நிஜமாய் மாற...!
-
யார் அவனோ?
அவன் யாரோ?
ஒரு மாதத்தில் மும்முறை
உடல் நேரிடும் வன்முறை
அதை தாங்கா என்னைத் தாங்கி
கொள்ளும் ஆண்மகன்
அவன் யாரோ?
உடல் மெலிந்திடும் போதிலும்
எடை கூடிடும் போதிலும்
நகையாடாமல் என்னை ஏற்றுக்
கொள்ளும் நாயகன்
அவன் யாரோ?
நான் துாங்கும் தருவாயில்
என் ஆசைத் திருவாயில்
ஒரு முத்தக் கனவை
விதைத்துச் செல்லும்
கனவுக் காதலனோ..!
-
தாய் தாலாட்டை ஏங்காத
குழந்தையோ இல்லம்மா..
ஒரு பாராட்டை ஏங்காத
கலைஞனும் இல்லம்மா..
நதி நீரோட்டம் ஏங்காத
உழவனும் இல்லம்மா..
ரத தேரோட்டம் ஏங்காத
இறைவனும் இல்லம்மா..
இந்த ஏக்கங்கள் இல்லாத
இடம் ஏது சொல்லம்மா..
பலர் தூக்கங்கள் கொள்கின்ற
இடுகாடு தானம்மா..!
-
வெண் மேகம்
வந்து உரசிட
கரு மேகம்
கர்ப்பம் ஆனதோ,
கார் மேகக்
கருவின் வழியே
மழை என்னும்
மழலை வந்ததோ,
கரு வெள்ளை
பேதம் எல்லாம்
புவி வாழும்
மனிதருள் தானே,
நிற பேதம்
நினைக்கா வானம்
தினம் தருவதோ
மழை எனும் பானம்...!
-
புது மொட்டொன்று
செவி சாய்க்கையில்
குளிர் காற்றொன்று
கதை சொல்லுமே,
செவி சாய்த்ததும்
கதை கேட்டதும்
பூ பூக்குமே
அது காதலே,
முதற் காதலே..
அதை காண்கையில்
மன தோரத்தில்
நினைவு ஊட்டுமே
நம் வாழ்க்கையின்
முதற் காதலே..!
-