நான் நானே   (தமிழ்)
392 Followers 0 Following

தோன்றியதை எழுதுகிறேன்
எழுதுவதற்காக தோன்றுகிறது...
Joined 13 December 2017


தோன்றியதை எழுதுகிறேன்
எழுதுவதற்காக தோன்றுகிறது...
Joined 13 December 2017

இன்றொரு வே(வா)தம்

ஏழ்வர் உண்ணும் இடத்தில்
திறந்தது மூவர் வாய்
சொல்ல நினைத்த ஒன்றை
சோற்றிடையே சொன்னதொரு வாய்

கருத்துக் கணிப்பில் அபார தோல்வி
மூன்றில் இரண்டும் எதிர்ப்பு வேள்வி
கருத்தை பின்வாங்க வைக்க முயற்சி
ஒப்புக் கொள்ளாமல் நின்றது பயிற்சி

கடலை உறிஞ்சும் மேகம் போல
அரைமணி நேரம் நிற்காத விவாதம்
சற்று பொறுத்து சிந்தித்து பார்த்தால்
உண்மையிலது வேறுபல சொன்ன வேதம்

சரிவர உருப்பெறாத ஒருகருப் பிண்டத்தை
சொல்லாமல் இருப்பது நல்லதுக்கு உரியது
முதல் முரண் முளைக்கும் போதே
நிறுத்தாத நிலையில் துன்பம் பெரியது

இரண்டு கருத்து ஒத்தவர்களின் எதிர்ப்பு
மூன்றாவது நபரை அசைத்துப் பார்க்கும்
எந்த எல்லைக்கும் சென்று சேராத
பற்றாத புகைந்த விவாதமும் இருக்கும்

ஒருவேளை இருதரப்பில் ஒருதரப்பு சொந்த
நிலையை விட்டு இருந்தால் மகிழ்ச்சி
ஒற்றை முரணுக்காக ஒட்டுமொத்த உறவையும்
துண்டிக்காமல் மெல்ல நகர்ந்தது நெகிழ்ச்சி...
_மொ.ப.பார்த்தீபன்...

-



விளக்கை அணைத்த பின்னர் அங்குமிங்கும்
உலாவித் திரியும் கரப்பான் பூச்சியாய்
நீயுறங்கச் சென்றதும் நானும் அலைகிறேன்
நிம்மதியை கரையானாய் கரைத்தது யாரோ

கடற்கரை ஓரம் கடலலை அடித்து
வந்து துப்பிய ஒருசிப்பி போலே
வாழ்க்கை எனக்கு உன்னை அளித்தது
இரவையும் பகலையும் கலந்தது நீயோ

அழுது ஆர்ப்பாட்டம் செய்த பின்னர்
தாய்மடியில் சொக்கித் தூங்கும் குழந்தையாய்
உன் முகம் கண்டு பூத்து சிரிக்கிறேன்
அழியாத சுவையான நீ மழை நீரோ

சுடும் கடும் வெப்ப காலத்தில்
மானற்ற வனாந்தரத்தில் பற்றிய தீயாய்
உன்னைக் கண்ட நொடியில் எரிகிறேன்
வேகாமல் நோகாமல் மலர்கிறேன் தானே

வானமும் விண்மீனும் பிரியாத போது
நானும் நீயும் உறக்கத்திலும் பிரியலாமோ
காணாத தெய்வம் மகிழ்ச்சியை என்னிடம்
நீயென அனுப்பியது இன்று தானே

வாளை விலக்காத கரிகால சோழனாய்
அற்புத விளக்கை ஏந்திய அலாவுதீனாய்
கவிதைத் தூணை ஏந்திய தமிழாய்
என்றென்றும் சுமப்பேன் இனி நானே...
_மொ.ப.பார்த்தீபன்...

-



வாழ்க்கைக் கரையோரம் கழிவுகளை மட்டுமல்ல
ஓவியத்தையும் அழித்தோ அழைத்தோ போகிறது
ஓய்வில்லாத அந்த மறதி அலை...

அறுந்த கயிற்றைத் திரிப்பதாய்
விடுபட்ட சங்கிலியைப் பிணைத்த மனதில்
தண்டவாளத்தில் வெடித்த குண்டாய் பிளவு...

-



நிறையாத அணைக்கட்டின் நாலாபுறமும்
பொங்கி பொங்கி வழிகிறது
விவசாயிகளின் கண்ணீர்...

செல்லும் இடம் மறவாதிருக்க
சிறுநீர் கழித்து செல்லும் நாயாய்
கோடு கிழித்து செல்கிறது விமானம்...

புழக்கம் இல்லாத தானியத்தில்
தானியங்கி போலே புத்துணர்வுடன்
பூத்தது தவிட்டு வண்டு...

குளிருக்கு அடுப்படியில் அண்டிய பூனையால்
விடிய விடிய வயிற்றில் புளிக்கரைசலுடன்
புளி தின்ன வந்த எலி...

கோடிட்ட இடங்களை நிரப்பாத
மாணவருக்கு நன்றி சொன்னது
மூச்சு முட்டிய நகர எழுத்துகள்...
_மொ.ப.பார்த்தீபன்...

-



கண்கள் அயர்ந்து உறங்குகையில்
வைத்த விழி வாங்காமல்
பார்க்கிறது அவளாய் நிழலும்...
_மொ.ப.பார்த்தீபன்...

-



அவள் தண்ணீர் விட்டு
வெட்டிய நகங்களில் முழுவதுமாய்
இறந்து கிடக்கிறதென் காதல் செல்கள்...
_மொ.ப.பார்த்தீபன்...

-



இளமையில் மொத்த பித்த நரையை
சுமந்தும் மனதில் கனமின்றி
பறந்து திரிகிறது மேகம்...
_மொ.ப.பார்த்தீபன்...

-



சோகம் படிந்த முகத்துடன் நீயென்
முன்னே கோரிக்கை மனுவொன்றை வைத்தாய்
தெளிவான புள்ளி விவரங்கள் ஏதுமில்லாத
போதும் உன்மனு என்பதால் பரிசீலித்தேன்
என்னுடைய நிலைப்பாட்டால் ஏதோவொரு சலனம்
இருவிழி வாசலை எட்டிப் பார்த்துள்ளது
தக்க காரணங் கூறி மனுவை
என்னால் தள்ளுபடி செய்ய முடியும்
சிறுசிறு உறுத்தல்கள் உனை உரசுவதாக
என்னிடம் ஒப்புவித்ததை நினைவு கூர்ந்தேன்
குற்ற உணர்வுக்கு ஆளாக்கும் ஏதாகிலும்
விலக்கப்பட வேண்டியதன் அவசியம் உணர்ந்தேன்
மனு அவசர கால உதவியின்
அடிப்படையில் தீர்வுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
புயல்நேரத்தில் கடலோரம் கூட இருக்காத
படகாய் நான் தள்ளி நிற்கிறேன்...
_மொ.ப.பார்த்தீபன்...

-



பெயர் இறந்து பிணம் பிறக்கையில்
வீடும் விலாசமும் இருந்தென்ன பயன்
கைப்பிடி சாம்பலும் காற்றில் கரைகையில்
செல்வமும் புகழும் செழித்தென்ன பலன்

சதைக்கு அலையும் தரித்திர மயக்கம்
பணத்தைக் குவிக்கும் குரூர இயக்கம்
நாமே கழிவு பிறகென்ன சந்ததி
சேர்க்க சேர்த்ததை சேமிக்கவா இப்பிறவி

இளமை கழியும் முதுமையும் ஒழியும்
எது நிரந்தரம் எல்லாம் விலகும்
சபலம் ஓர் அவலட்சண ஆபரணம்
கனத்துக் கறுத்து கழுத்தை அறுக்கும்

முதலைக்கு பயந்து புலிக்ககப்படும் ஆடுகளே
உண்மையும் பொய்மையும் ஒருதாய் பிள்ளைகளே
உண்மை விளம்பியே எதுமெய் எதுபொய்
இருப்பதும் வருவதும் போனதும் மாயையே

சிந்திப்பது எல்லாம் திரையிலே தெரிந்தால்
யாருக்கு உண்டு இங்கே உறவு
நொறுங்கி விழுந்தாலும் இணைந்து எழுபவரிடம்
துயரம் தன்தலை வணங்கி விடும்...
மொ.ப.பார்த்தீபன்...

-



எண்ணத்தை எழுதினாலே கவிதையா என்ன?
கம்பனும் கட்டமைப்புக் கொண்டான் மின்ன
கவிதை என்பது கதையின் விதை
உருக்கமும் நெருக்கமும் கலந்த சதை

சொல்நடை மிளிர பொருளடை ஒளிர
கற்பனைக் கவர நல்லிசைக் கசிய
எழுதிய கவிதையின் ஆயுள் பலயுகம்
அரைகுறைக் கவிதையின் பலம் சிலநொடி

எழுத்தில் புதுமையின் அனுபவம் வேண்டும்
அப்படி இருந்தாலே படிக்கத் தூண்டும்
எழுதியதும் மனம் லேசாக ஆகும்
வாசிக்கும் உள்ளம் கனத்துப் போகும்

எந்த நயமும் இல்லாதது குப்பை
அந்த கவிஞருக்கு ஏற்பட்ட தொப்பை
ஆயிரம் குறை பிரசவம் எதற்கு
நூறே பிள்ளை போதும் அதற்கு

பொய்யைக் கூட மெய்யாக்கி செல்லு
அறிவை ஞானமாக மையூற்றிச் சொல்லு
செங்கடலும் நீரே காவிரியும் நீரே
உப்பா நன்னீரா ஆராய்ந்து பாரு

விலக்கு அசடு ஒதுக்குக் கசடு
உணர்ந்து எழுது உள்ளத்தை உழுது
உனக்கென பதி ஒரு அடையாளம்
அதன்பின் புகழ் மதிப்பு கடலாழம்...

-


Fetching நான் நானே Quotes