குப்புற ஊறும்
சிசுவின் அழகில்
மயங்கிய ஆமை.
மல்லாந்து கிடக்கும்
மழலையின் சிரிப்பில்
சிணுங்கிய கரப்பான்.
தத்தி தத்தி
இறகு விரிக்கும்
குழந்தை பட்சிகள்.
மீண்டும் பிறந்த
கிள்ளை மொழிக்குள்
மூழ்கி தொலைவது பேரழகு.-
உலகை கண்டதைவிட
உம் உள்ளத்தில் துளிர்த்தேன்
காற்றின் மொழியிலும்
வெப்பத்தின் துடுப்பிலும்-
அள்ளி தெளிக்குது வானம்
துள்ளி குதித்தன மீனம்
நம்பிக்கை உரைக்கும் அலை
பசி போக்கும் மீன் பிடி வலை
கைப்பிடித்து சென்ற காற்றோடு
சுவாசம் நீண்ட ஆனந்த பயணம்.-
ஒய்யார பொம்மையின்
நளினத்தில்
உறைந்த கணம்
உம்
காதணி ராகம்
எனக்குள்
சிருங்கார சுவை ரட்சித்து
ஞான காதலில் கரைகிறேன்.-
வசந்தத்தை தூரிகையாக்கி
மேக சீலைக்குப் பின்னால்
விண்மீன் பூச்சிக்கு வண்ணமிட்டு
குலவை மீட்டும் மென் காற்றினில்
குளுமையை தாயாக்கி அணைக்கும்
உன் பற்றற்ற கோலம் அழகின் அழகு-
காதணி நோகாமல்
செவியில் சிலிர்ப்பூட்டிய
உந்தன்
மீசையின் பிரவேசம்
பரவச உணர்வு
என்னில்
புடைத்த மயிர்க்கூம்புகள்-
எழுபது முறை துடித்து
என்னை நகர்த்தி செல்லும்
செங்காற்று நீதானே.
அருகில் வந்தால் படபடத்தும்
தனித்து நின்றால் சலசலத்தும்
முப்பொழுதும் எனை விழுங்கும்
மூச்சுக்காற்று நீதானே.-
ஆச்சர்யங்கள் பிடித்திழுக்க
மொத்த தவணையும்
ஒரே சமயத்தில் திரும்பி
கொதிநிலையில் பயணிக்கும்
இதயத்தின் சலசலப்பு-
ஒன்றும் பதிவிடாத
வெற்று காகித பக்கம்
மையிடாமல் வழிந்தோடிய
பல கருத்துருக்கள்
விழிப்புணர்வு சாலையில்
புத்தக பூங்காவாக.
-