மிகவும் தனியாக இருக்கும்போது
இந்த உலகத்தில்
ஒரு கூழாங்கல்
ஒரேயொரு கூழாங்கல்லாக
தானிருப்பதை
நினைத்துக்கொள்வதாக
இருக்கிறேன்
~ பெருந்தேவி-
உனக்கு நீயே தான்
சொக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்
உனக்கு நீயே தான்
மிஸ்டுகாலில் விளையாடிக் கொள்ளவேண்டும்
உனக்கு நீயே தான்
வாழ்த்து தெரிவித்துக் கொள்ளவேண்டும்
உனக்கு நீயே தான்
மறந்த பொருட்களை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்
உனக்கு நீயே தான்
பின்னால் வந்து கட்டிக் கொள்ள வேண்டும்
உனக்கு நீயே தான் நிலா காட்டிக் கொள்ள வேண்டும்
நீயே தான் உன் காதில் கிசுகிசுத்துக் கொள்ளவேண்டும்
நாலாவது ரெளண்டில்
உனக்கு நீயே தான் கண்டித்துக் கொள்ளவேண்டும்
உன் கண்ணில் நீர் வழிந்து உன் நெஞ்சிலேயே தான் உதிரமும் கொட்டவேண்டும்
உன் தலையை அரிந்து
உன் மடியில் போட்டுக் கொண்டு
நீயே தான் கோதிவிட வேண்டும்.
- இசை
-
மனக்குகையில் தலை சாய்த்திருக்கும்
எறும்பு !
தன்னை விட இருபது மடங்கு பெரிய
இலையை
தன் குகைக்கு
இழுத்துச் செல்கிறது நுண்பற்களால்
எறும்பொன்று.
இந்த அசுர பலத்தை
மனக்குகை எழுப்பும்
எச்சரிக்கைகள் தந்திருக்கலாம்.
குட்டி எறும்புகளின் குரல் காதுக்கு வருகையில்
கூடுதல் வேகம் இழுப்பில் .
வழியில் சில எறும்புகள் உதவிக்கு வந்து விட்டு
இடையிலே பிரிகின்றன
தானியங்கள் இருப்பை பரிசோதிக்கும்
தலைவி எறும்பு
ஆறுதலை கண்களால் அறிவிக்கிறது
வெளியே மழை வலுக்கத் தொடங்குகிறது.
~ ஸ்டாலின் சரவணன்-
அன்பு ஒன்று முறிந்த போது
நம்பிக்கை ஒன்று உடைந்த போது
உயிர் ஒன்று நசிந்த போது
ஒளி மங்கி
வாழ்க்கையை ஒரு பழம் துணியென
உணர்ந்து கொண்டு
எதிர்க்காற்று
கண்ணீரைக் கொண்டு போகும்
பேருந்துப் பயணத்தில் எல்லாம்
என்னைத் தள்ளிக் கொண்டு
ஒரே இருக்கையில்
என்னோடு அமர்ந்திருக்கிறது கவிதை.
ஒரு நாள் அசரீரியும் சொன்னது. "இப்படித்தான்
வாழ்நாள் முழுவதும்
வாழ்விலும் தாழ்விலும்
ஒருவருக்கொருவர்
துணையாய் இருங்கள்!"
~ போகன் சங்கர்-
கடல் கருநீலமாகி
கருமையாகி
பிறகு இரவாகிறது.
மணலெங்கும் நண்டுகள்
சுதந்திரமாய்த் திரிகின்றன.
ஆகாசம் கடல் மேல் தொப்பென விழுகிறது.
அமைதி.
இரு வலிய கரங்கள் கழுத்தை நீருக்குள்
விடாப்பிடியாய் அழுத்தும் அமைதி.
~ தீபு ஹரி-
” நழுவ விடுபவர்களின் கைகளைத்தேடி அமரும் கோப்பை நான் எனது மூளை நிலவின் களிம்பேறிய படித்துறைகளின் இரவில் விழித்து இருப்பது”
- பொன்முகலி
-
"குழந்தைகளைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்?" என்று, தன் மார்பில் ஒரு குழந்தையை அணைத்துக் கொண்டிருந்த பெண்ணொருத்தி கேட்டாள்.
அவர் சொன்னார்:
"உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல.
அவர்கள், வாழ்க்கை தமக்கென்று வேண்டிய குழந்தைகள்.
அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்; உங்களிடமிருந்தல்ல.
அவர்கள் உங்களுடன் இருந்தாலும், உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல.
உங்கள் அன்பை அவர்களுக்கு நீங்கள் தரலாம், உங்கள் எண்ணங்களையல்ல.
அவர்களுக்கென்று தனிச் சிந்தனைகள் உண்டு.
அவர்களின் உடல்களுக்குத்தான் நீங்கள் பாதுகாப்புத் தர முடியும் ஆன்மாக்களுக்கல்ல.
அவர்களின் ஆன்மாக்கள், நாளைய வீட்டில் வாழ்பவை. அங்கே நீங்கள் செல்ல முடியாது, உங்கள் கனவிலும் கூட.
அவர்களைப் போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால், அவர்களை உங்களைப் போல் ஆக்கி விடாதீர்கள்."
- தீர்க்கதரிசியில் கலீல் ஜிப்ரான்
( தமிழில் கவிஞர் புவியரசு )-
சொல்லென ஒரு கண்ணீர்
சொல்லென ஒரு கண்ணீர் தொண்டையில் தங்கிவிட்டது என்னின் எந்த மனதோ இக்கண்ணீர்
சொல்லாலான கண்ணீரே இப்பொழுதை விடு.
- சதீஷ்குமார் சீனிவாசன்-
தைலவர்ணங்களால் யாதொன்றும் வரையப்படா குகை
அருகில் எல்லாமும் வரையப்பட்ட குகை
என்றாலும்
வரையப்பட்ட குகை யாவற்றிலும் முக்கியத்துவம் கொள்கிறது.
ஆராய்ச்சியாளர் முன் பார்வையாளர்கள் முன்
அவர்களின் புகைப்படக் கருவிகள் முன்
வரையப்படா குகையும் எல்லாமும் பெற வேண்டி
அதில் யாவற்றையும் துடைத்தழித்த
தைலவர்ண கரமொன்றை மட்டும் வரைந்து வைத்தேன்.
- நரன்-