மனித வாழ்வெனும் பெருங்கடலாம்.. அதனை கடக்க நிற்பதோ பெரும்படையாம்!!
பயண தூரமோ தெரியாது , எந்த கரையின் ஓரமும் புரியாது..
திரும்பி செல்லவும் முடியாது , விரும்பி தங்கவும் இயலாது..
அனைத்து பயணிகளின் இலக்கும் ஒன்றே, ஆனால் பயணங்கள் பலவிதம்..
சிலர் கப்பலில் பயணிப்பர், சிலர் படகில் பயணிப்பர்,
சிலர் அயராது நீந்தியே கடக்க முயல்வர்..
ஆனால்,
பயணத்தில் இவை எதுவுமே நிரந்தரம் இல்லை.. பயணம் ஒன்றே நிரந்தரம் ஆனது!!
இக்கடல் பயணத்தில் பல அலைகளை கடக்க நேரிடும்,
அலைகளை கடப்பதே பயணத்தின் பக்குவமாக மாறிடும்!!
இடையில்,
சூழல் என்னும் சுழலில் சிக்கி,
சில வேடிக்கை மாந்தர் தளர்ந்து போவர் ..
சிலரோ சுழலில் நீந்தி, மூழ்கி முத்தெடுத்து வெளிவருவர்!!
பயணத்தின் போது,
கடும் புயலும் வீசும், தேன் தென்றலும் வீசும்..
சுடும் வெயிலும் வரும், வான் மழையும் வரும்..
சிலர் மதித்து நமக்கு வழி காட்டி செல்வார்,
சிலர் மிதித்து நம்மை குரங்காட்டி செல்வார்..
இவை எதற்கும் கலங்காது, மயங்காது,
கிடைக்கும் மரக்கலத்தை பற்றி பயணம் செய்..
எதில் பயணிக்கிறோம், எப்படி பயணிக்கிறோம் என மற்றவர் பயணத்தை பார்ப்பதாலோ..
சுழல், புயல் என எதிர் வரும் இடர் பார்த்து மிரண்டு நிற்பதாலோ பயணத்தில் பயனில்லை.
கப்பலோ, படகோ.. வெயிலோ, மழையோ.. தென்றலோ, புயலோ..
எத்தகு சுழலிலும் (சூழலிலும்), மானிடா!!
பயணத்தை மறவாதே..
பயணத்தின் ரசனையை மறவாதே..
பயணம் அழகானது !!-
மரங்கள், மலைகள், பூங்காக்கள், வயல் வெளிகள் என இயற்கையின் அழகியலை ரசிக்கையில் தவிர்க்க முடியாதது பறவைகளின் சத்தம் ...
அவை நமக்கு ஒரு வித மன அமைதி தருவதாக கருதுகிறோம் ..
அது ஒரு வகையில் உண்மையும் கூட தான்.
இயற்கை அழகானது !
ஆனால், அந்த பறவைக்கு மட்டுமே தெரியும்...
அது இரையின்றி கத்துகிறதா,
ஆபத்தில் கத்துக்கிறதா என்று ..
இயற்கை புதிரானது !
நமக்கு அந்த சத்தம் எல்லாம் ஒன்று தான் ..
பசியில் கத்தும் பறவைகளை பாடுகின்றன என்றும்,
உயிரைக் காக்க ஓடும் மான்களை துள்ளி குதித்து ஓடுகின்றன என்றும்,
ரசனை கண்ணில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தவறு ஒன்றும் இல்லை.
இயற்கை விதிகளற்றது !
அந்த அந்த இடத்தில் இருந்து பார்ப்பவர்க்கே தெரியும்
அந்த இடத்தின் வலியும், சுகமும் ..
இயற்கை சுதந்திரமானது !-
ஒரே கடுப்பாக இருக்குதய்யா,
காலை எல்லாம் மாலை ஆச்சு ..
சாலை எல்லாம் ஓடை ஆச்சு ..
வேலை எல்லாம் முடங்கி போச்சு ..
சோலை எல்லாம் கிறங்கி போச்சு ..
ஆதலால் களைப்பாக இருக்குதய்யா,
கதிரவனும் கண் விழிக்காமல் ..
களைப்பினிலே நானுமிங்கு மேல் குளிக்காமல் ..
உண்டு, உறங்கி, உருண்டு கொண்டு..
உடைகள் உலர்த்த வெயிலை கண்டு..
எனினும் களிப்பாக இருக்குதய்யா,
மேலே இருந்த அத்துணை இருப்பினும்..
மின்னல் இடியென பேய் போல் பொழிதினும் ..
சன்னல் வழியே உன் ஒரு துளி பார்க்கையில்,
இன்னல் எல்லாம் பல அடி பறந்தது ஏனோ !
கடுப்பு, களைப்பு, களிப்பு என பல மலைப்பை தந்து,
மழையே நீ வியப்பு தான் !!!-
விண்ணின் அழகு வெண்ணிலா...
இம்மண்ணின் அழகோ என் நிலா!!
காந்தம் இருப்பது என் கண்ணிலா?
இல்லை ஈர்த்திழுக்கும் அப்பெண்ணிலா?-
படைப்பாளிகளின் பயணங்கள் முடிவதே இல்லை...
படைப்பவன் மறையலாம்... படைப்புகள் மறைவதில்லை...
பரந்து விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் எல்லை வரை படைப்புகள் பயணிக்கும்!!!
படைப்புகளின் பயணம் என்பது காலம், இடம், மொழி, மதம் அனைத்தையும் கடந்து பயணிக்கும்!!!
எனவே படைப்புகளின் பயணங்கள் என்றுமே முடிவது இல்லை..
படைப்போடு சேர்ந்து படைப்பாளியும் பயணிக்கிறான்..
படைப்பாளிகளின் பயணங்கள் முடிவதே இல்லை...-
இடது என்பார்.. வலது என்பார்.. மய்யம் என்பார்..
கழகம் என்பார்.. கமலம் என்பார்.. கலாம் என்பார்..
திராவிடம் என்பார்.. தேசியம் என்பார்.. தமிழன் என்பார்..
வெற்றிநடை என்பார்.. விடியல் என்பார்.. மாற்று என்பார்..
காரில் நின்று கையை காட்டுவார்,
இறங்கி வந்து கையும் நீட்டுவார்..
வேட்டு போட்டு ஓட்டு கேட்பார்,
டிவிட்டு போட்டும் ஓட்டு கேட்பார்..
எப்படி கேட்பினும்.. எவர் வந்து கேட்பினும்..
இவற்றில் உண்மை குரல் எது என உணர்ந்து உங்கள் உரிமையை உரித்தாக்குவீராக !!-
சோழன் வழி வந்த காலா! கரிகாலா!!
புலிக்கொடியின் புகழை பூலோகமெல்லாம்
பரப்ப புலிக்குட்டியாய் வந்தவனே!
தக்கோலப் போரில் யானை மேல் மறைந்த
இராஜாதித்யரின் மறுபிறப்பே!
பதினாறு வயதிலேயே போர்க்களம் கண்டு
பகைவர் படையை பதரடிக்க செய்தவனே!
வீரபாண்டியன் தலை கொண்ட வீராதி வீரனே!
வடதிசையில் படை திரட்டி இராஷ்டிரகூடப் படையை
துரத்திய தீரனே!
வேட்டை என வேல் எடுத்தால் வனவிலங்குகள் அழியும் வரை மிச்சம் வைக்காமல் வேட்டையாடும் வேங்கையே!
அச்சம் எனும் வார்த்தையை அகராதியிலும்
அகற்றிய அசகாய சூரனே!
இமயம் முதல் இலங்கை வரை ஆதித்த கரிகாலன்
என்றால் ஆடிப்போகும் அளவிலான உன்
எட்டாத வீரத்தை எட்டடியில் எப்படி அடக்குவேன்!?-
இரவு முழுதும் தூக்கம் இல்லை உன்னால்..
ஆனாலும் இரவில் உன்னை தவிர்க்க முடியவில்லை என்னால் !!!
சத்தம் இன்றி பக்கம் வந்தாய்...
என் கை, கால் எல்லாம் முத்தம் தந்தாய்..
பின் அதற்கு ஈடாகும் வகையில் என் இரத்தம் கேட்டாய் !!!
உன்னால் நான் சித்தம் கலங்கி நித்தமும் நித்திரை கலைக்கிறேன்...
என்னை நானே அடித்துக்கொள்கிறேன்...
உன்னை கண்டால் அடித்தே கொல்கிறேன் !!!
***** கொசு *****-
இன்று முதல் தங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கி நாட்கள் அனைத்தும் தித்திக்கும் கரும்பாய் திகலட்டும் !!!
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!-
வெடுக்கென்று கிடைத்து விட்டால் வெறுப்பாகி போகும் என்பதாலோ என்னவோ ?
வெகு தூரம் தள்ளி வெட்கத்தில் ஒளிந்து கொண்டு இருக்கிறது "வெற்றி"-