ஒரு அன்பை பாதுகாத்தல்
என்பது அத்தனை எளிதல்ல...
மேலும் அதனை நம் வாழ்வின்
இறுதி வரைக்கும் எடுத்து
செல்வதும் கூட ஆகாத காரியமே...
அதனால் தானோ என்னவோ
அதை கண்டாலே
தூரம் நிற்க தோன்றுகிறது...!-
பிரியத்தின் பெயரில்
பழியிட்டதையெல்லாம்
பட்டியலிடுகிறது காலம்...
அது பிரியம் தானா
என்றெழும் வினாவிற்கு
பிறகு...!-
மொத்தமும் நீயே நிரப்பி
சென்று விட்டாய்
ததும்பி நிற்கையில்
இனி வேறெதை ஊற்ற?-
சிறகுகளை சிங்காரிப்பது
தான் அன்பின் அதீதமாம்
கம்பிகளை மெருகேற்றி
கொண்டிருக்கும் அதீத
அன்பிடம் யார் சொல்வது?-
இன்னமும் கூட அப்படியே
தான் இருக்கிறது
என் கை படாமல்...
சூழ்நிலையை இலகுவாக்க
நீ தந்த சமாதானங்கள்...!-
ஒரு ஆழ்ந்த நேசத்தை
அடையாளங்காண முடியுமா?
முடியுமே...
குறைந்தபட்சம்
நிகழ்தலின் காரணமறியாது...
அதிகபட்சம்
பிரிதலின் காரணம் விளக்காது...!
-
எதற்காவது தகுதி
பெற்றிருந்தால் சரி தான்...
அன்பினை போல
வெறுப்பும் கூட ஒரு பிரத்யேக
உணர்வு தான்...
அனைவரிடமும் தோன்றிடாதே...!-
பின்னியிருக்கும் அன்பின் வலையில்
இம்மி நகராமல் இறந்து விட
தோன்றுகிறது சில நேரம்...
நூலிழையில் வெளியேறும் மூச்சுக்காற்று நேசக்கனங்களை உதறி
சுதந்திர சுவாசமெடுக்க மன்றாடுகிறது
சில நேரம்...
கொன்று கொன்று உயிர்ப்பித்து
விளையாடும் அன்பின்
விளையாட்டில் பகடையாகாத
மனம் தான் எதுவோ?-