அசையும் காற்றை அணைத்துக்கொண்டே
அவள் கேட்டாள், உனக்கென்மீது காதலா என்று!
உரசி தழுவிய காற்று உடனே உரக்கச்சொன்னது,
கண்ணியமான காதல் என்று!-
நான் கேட்ட போதெல்லாம் உதவிய உனக்கு, இதோ இங்கு என் சின்னஞ்சிறு உதவ... read more
கயவர் கூட்டத்தினுள் காலூன்றியப்பின்
கண்கள் இமைக்க மறந்தனவோ?
கணநேர கலக்கமும் கால சுழற்சியில்
கலகமென கலந்ததுவோ?
தாகத்தின் வலியறியாதவர்கள்
தானத்தின் வழிச் செல்லத்தான் மறந்தனரோ?
இதயத்தின் ரணமிங்கு கூடிடவே,
ஏங்கி நின்றேன் நானிங்கு விடுதலைக்காக..
எஞ்சியதெல்லாம் ஏனோ ஏமாற்றமே!
பழி அதில் சிக்கிய அவர்களும்,
வழி அதுத்தேடி இங்கு நானும்...
விதையே இல்லாமல் முளைத்தச் செடிக்கும்,
ஆயிரம் அரண்கள் இருக்கத்தான் செய்கிறது!-
கடிகாரத்திற்கென்ன சுழன்றுக்
கொண்டு தான் இருந்தது,
ஆனால் நேரம் தான் இங்கு
கடந்த பாடில்லை!
உதித்த சூரியனும் கூட அதே
வேகத்தில் மறைந்து விட்டான்,
எனக்கோ நேரம் நிலை தடுமாறி
நின்றதோர் உணர்வு!
அ என ஆரம்பித்த ஆசிரியர்
ஆயிரம் சொற்கள் சொல்லி முடித்தும் கூட,
அரை நொடியும் நகராமல்
நின்றுவிட்டது எனக்கு!
சர்வக்காலமும் சற்றே நிற்கக்காரணம்..
தோற்கடிக்கப்பட்ட வீரனின் வலியையும்
தாண்டி வலிக்கிறது என் தோழியின் விடுப்பு!-
உதிக்க மறந்த சூரியன்,
நிலையில்லாமல் போனதோ வான்?
எழுத மறந்த நொடிகள்,
வழியிழந்து தவித்தாளோ ரசிகை?
துடிக்க மறந்த இதயம்,
அர்த்தங்களின்றி போனதோ உயிர்வளி?
இப்புவியே இத்தனை மறந்தும்..
அவள் நித்திரையும் மறவாமல்
நிலைக்கொள்வதோ நின் முகம்!
மௌனங்கள் கடந்து அவள்
காதுகள் கேட்டதென்னவோ நின் குரல்!
அதிசயங்கள் ஆயிரம் காட்டிய
உலகை மறந்த அவளின் உணர்வுகள்
நாடி சென்றதென்னவோ உனையே!
அத்தனை அரங்கேறியப்பின்னும் அவளுக்கு ஏன் அந்நிலை? பாவையின் பதைபதைக்கும் இதயத்தின் வலி அறிவாயா நீ?
- இன்று சொல்லி பயனொன்றுமில்லை.. இழந்த வைரத்தின் மதிப்புணரும் தருணம் அதை அறிந்திடுவாய் நீ!-
சத்தங்களின் ஓசைகளில் காணாமல் தொலைவது என்னவோ மௌனங்களின் ஆசைகளே!!
-
புவியிங்கு புதிர் தான் - நீ
புரிந்திடு புன்னகை..
உலகமே உண்மையில்லை தான் - நீ
உரைத்திடு உளறல்களை..
புதிருக்குள் தேடல், மனதிற்குள் மோதல்;
கசங்கிய காகிதமும், கலங்கிய கண்களும்..
ஆனால் ஒன்றை அறிந்து கொள்,
கானல் நீருக்கும்
கவிதையாகும் வல்லமை உண்டு!-
சில்லென்று வீசிய காற்று..
சிற்பமென நின்ற மலைகள்,
காட்சியை ஏறிட்டு பார்த்த கண்கள்..
அரும்பென மலர்ந்த அற்புத கனவுகள்,
மென்மையாய் சிரித்த இதயமும்,
மெல்லமாய் உதித்த சூரியனும்!
கவலைகள் கணமென காணாமல் சென்றிடவே,
நிஜங்கள் எல்லாம் ஒருகணம் நிழலென நின்றிடவே..
ஆனந்தமாய் அந்த சில நொடிகள்
இந்த நொடி நீடித்திட ஆசை
இந்த நொடி நிலைக்கொள்ள ஆசை
இந்நொடியாய் வாழ்வே மாறிட ஆசை
இப்படி ஆசையுலகிற்குள் அகப்பட்ட சிறுமியின்
சிறுக்குரலாய் இதோ இங்கு என் வரிகள்!!!-
இரவெல்லாம் கண நேர தூக்கமுமில்லை.. காரணம், புத்தகமெனும் ஆனந்த சிறையில் சிக்குண்ட நான் மீளவில்லை!
அறிவேன்..
நான் வாசித்த காதல் மானுட காதல் அல்லவெண்பதை அறிவேன்
ஆனால் அறிந்திராமல் தான் இருந்து விட்டேன், "நாட்டிய கலை நரசிம்மன் ஆகாதென்றும், சிம்மாசனம் சிவகாமி ஆகாதென்றும்!"
எனினும்..
இவை கடந்த காதல் என்றல்லவா எண்ணியிருந்தேன்!? என் கருத்தில் பங்கம் விளைந்தேனோ? இதற்கு நடுவில் விதி செய்தி சதி ஏனோ?-
அவ்வப்போது எழுத்தை கைவிட்டால் என்னவென்று கூட சிந்திப்பதுண்டு,
ஏதோ ஒன்றின் மேல் இருக்கும் வெறுப்பின் பொருட்டு..
எழுத்தின் மேல் நான் கொண்ட தீரா அபிமானம், எழுத்திற்கு ஏன் என்மேல் இல்லை என்று கூட சிந்திப்பதுண்டு,
ஏதோ ஒரு அதிருப்தியின் பொருட்டு..
அமைதியாய் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்த பின்பே உணர்ந்தேன், நான் எழுதுவதை அடியோடு கைவிடும் நாள் ஒன்று இருக்குமேயானால் அது நான் மரணிக்கும் நாளாக மட்டுமே இருக்க முடியும் என்று!
அப்படியொரு பிணைப்பல்லவா எழுத்துடன் எனக்கு!? எழுத்தின்றி நான் இல்லை, வாழ்வின் வர்ணஜாலங்களை வார்த்தைகளல்லவா எனக்கு அறிமுகம் செய்தன!?-
பள்ளி சீருடையும், பார்க்க
விரும்பிய சிகரங்களும்..
பை நிரம்பிய புத்தகங்களும்,
மனம் நிரம்பிய புத்தாசைகளும்..
வாள்முனைக்கூட வென்று விடாத ஒன்றை
பேனா முனை வென்று விடும் என்ற எதிர்ப்பார்ப்புகள் சேர்ந்திடவே..
எதிர்த்து நிற்பவர் முன்பெல்லாம் தன் எழுத்து ஓர் ஆயுதம் ஆகிடும் என்ற நம்பிக்கை பிறந்திடவே..
அறிவெனும் மனக்கோட்டை கட்டியவளாய், அதில் தனக்கே மகுடம் சூடியவளாய்.. எதிர்ப்பார்ப்புகள் ஏராளம் கொண்டு பள்ளி வளாகத்திற்குள் பாதம் பதித்தாள் அந்த ஏழை சிறுமி!-