வானம் தினமொரு
நிறம் பூசுவதில்லை..
நிலா தினமொரு
முகம் காட்டுவதில்லை..
கடல் தினமொரு
கரை தேடுவதில்லை...
மனதின் கதியும்
அப்படித்தான்....!-
பிரியத்திற்கென்று
சில எழுதா விதிகள் உண்டு..
அது சொல்வதை மட்டுமல்ல
சொல்ல வந்து சொல்லாமல்
போனவற்றையும்
கண் முன் நிகழ்த்திக் காட்டும்....!-
கண்ணீர் நிறைந்த
விழிகளோடும்..
காலம் தந்த
காயங்களோடும்..
ஒவ்வொரு முறையும்
உன்காலடியில்
வந்து விழுகிறேன்..
என் சிறகில் தைத்த முட்கள்
ஒவ்வொன்றையும்...
அவ்வளவு லாவகமாக..
கையாள்வதோடு..
குருதி வழிந்தோடும்
என் காயங்களின் மேல்
பிரியத்தின் எச்சில் தொட்டு
தடவி..
அன்பென்னும் அமுதூட்டி
என்னை உயிர் பிழைத்திருக்க செய்வது
உன் பிரியம் மட்டும் தான்....!
-
நாட்பட்ட ரணம்
என்பதற்காக..
வலிக்காமலில்லை..
அதுவும்
ஊணோடு
ஒன்றிப்போனது
அவ்வளவு தான்....!
-
நினைவுகள்..
நினைவுகளாகவே
சுவாசத்தின்
அடி ஆழத்தில்
தங்கி விட்டால்கூட
பரவாயில்லை..
அப்படியல்லாமல்
அது ஒரு இளையராஜாவின்
பாடலாக மாறி
கண்ணுக்கு புலப்படி
காற்றில் மிதந்து வந்து
மனதை தட்டி
மௌனம் கலைத்தால்
நானென்ன செய்வேன்.....!
_🪶....
-
நிலவை காணும்
பொழுது
நானுன்னை
நினைப்பது போல்
நீயும் என்னை..
நினைத்துக் கொள்வதில்
இருக்கிறது
என்னிறைவு....!
-
இது தான்..
இவ்வளவு தான்..
என்று சொல்ல
முடிந்திருந்தால்..
ஏன் இத்தனை
கவிதைகள்
எதற்காக இவ்வளவு
மௌனங்கள்
துயரத்தையும்
பிரியத்தையும்
முழுவதுமாக
சொல்லி முடிக்கும் சொல்
இருக்கிறதா என்ன....?
-
எல்லா இதயங்களிலும்
யாரோ ஒருவர் மீதான பிரியம்
எந்தவொரு
பிடிமானமும்மற்று
வெறும் நினைவுகளால்
மட்டும் உயிர்
பிழைத்து கிடக்கிறது....!
-
நிலை கொள்ளா
மௌனத்தில் மனம்
ததும்பும் பொழுது
இதயத்தில் மட்டும்
பட்டாம் பூச்சிகளின்
படபடப்பினை
உணருகிறோமென்றால்
நம் நினைவுகளுக்கு
யாரோ..
அழைப்பு விடுக்கிறார்கள்....!-
நீ கனவாக இருந்திருந்தால்
கவிதையில் கடந்து
போயிருப்பேன்..
நீயென் நிதர்சனமாகி..
நித்தம் என்னை
அகர்ஷித்துக்கு கொண்டிருக்கிறாய்....!
-