என் சொடக்கு வராத விரல்களை நீ விடுவதில்லை.
அதை தவிர என் விரல்களில் வேறு வலியில்லை.-
அழகு சாதன பொருட்கள் ஆயிரம் வாங்கியும் பயனில்லை.
நீ வந்ததும் அழகாகிவிட்டேன்.-
இப்பொழுதுகளில்,
உன்னிடம் பேசுவதும்
உன்னை குறித்து பிறரிடம் பேசுவதுமே
என் தினசரி உரையாடல்கள்.-
நீ பேசும் சொற்களின்
உச்சரிப்பு உடையாமல்;
வாகாக பிடித்து;
என் அறை கண்ணாடியில் காட்டி;
அதன் அழகு உணர்த்தி;
பின் மென்முத்தமிட்டு அனுப்பிவிட வேண்டும்
காற்று அடித்துக்கொண்டு போவதற்குள்.
-
ஆசை விரித்து
இதழ் குவிக்கும்
முத்தங்கள்,
நீங்கள் பார்ப்பது போல்
தலையணைக்கு இல்லை.
-
"என் முத்தங்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன.
அவை பார்த்து அவனிடம் சேரும் வரை கூட இருங்கள்" என்று மேகங்களிற்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
-
'இங்கு வெளிச்சமாக இருக்கிறது'
என்றே நாம் மாடிப்படிக்கட்டு கீழிறங்குகையில்
பௌர்ணமி நிலா முக்காடு போடுகிறாள்.
இவள்,
உதவுகிறாளா?
விளையாடுகிறாளா?
இவளை நம்பலாமா?
நம்பி கிடக்கலாமா?
-
இருங்கள்,
நான் வருகிறேன்,
என் இதயத்தின் கவசம் கழற்றிவிட்டு.
நிராயுதமாய் சுற்றி பல நாட்களாயிற்று.
பச்சப்புள்ளையாய் சுற்றி பல நாட்களாயிற்று.
என்ன வேண்டுமானாலும் குத்தி கிழிக்கட்டும்.
வலிக்கட்டும்.
பார்த்துக்கொள்ளலாம்.
ஆறிவிடப்போகிறது.
-
என் திங்கட்கிழமையின் வெறுமைகள் யாவும் காற்றில் நின்று ஆடும் உன் தலைக்குளித்த முடி முத்தமிட்டு வருடிவிடுகிறது.
பின் திங்கட்கிழமையிற்கு காத்திருக்கும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
-