முற்றுப் பெறாமலே
முடிக்கப்பட்ட உரையாடலில்
தொக்கி நிற்கிறது...
உனக்கும் எனக்குமான
இணக்கம்!!-
இடைவிடாது
ரீங்கரிக்கும் வண்டின்
ஓசையில்
இலயிக்க கற்றுக் கொள்
அகலிகா...
ஏமாற்றங்களின் கூச்சலும்
துரோகத்தின் இரைச்சலும்
ஓய்வெடுக்கட்டும்..
சிறிது காலமேனும்..!-
நின் கவி கண்டு
யானும் குழம்பித் தான் நிற்கிறேன்..
நீர் இயற்றிய கவி..
நான் வாசிக்கத் தானா
அன்றி..
நின் கவியை நான் வாசிக்கும் நேரம்
நீர் என்னை வாசிக்க ஆயத்தமாவதற்கா??
-
உன் உதாசீனங்களையும்
உதறித் தள்ளும்
அந்த நொடிநேரம் மட்டும்
நான் நானாய்
இருக்கிறேன் அகலிகா!!
-
திங்களுடன் தான் ஆற்றிய பேச்சுகளை
அடி மாற்றிப்
சொல்லிக்கொண்டே இருக்கிறாள்
அகலிகா..
உரையாடலை இரசித்ததாய்
அவளும்..
பேச்சுத் துணைக்கு
ஆளிருப்பதாய் நிலவும்...
ஆசுவாசப்பட்டுக் கொண்டிருக்க...
நாளைய
உரையாடலுக்கு
தயாராகிக் கொண்டிருந்தன
வாத்தும் நாயும்
பொம்மைகளாக!!
-
அனுமானங்களின்
அளவீடுகளை அறிவாயா
அகலிகா??
பற்றற்று நிற்பதற்கு
துணிந்தவள் தானென
முத்திரை அணிவித்ததுடன்
கேட்காமலே உனக்கிட்ட
பெயரும்...
அதுதானென நிர்ணயிக்கும்
தரவுகோலின் மதிப்பும் தான்!!-
மௌனங்களில்
இருக்கும் கனம்
வார்த்தைகளில் இல்லை தான்..
இருந்தாலும்
ம் என்ற ஒற்றை
எழுத்தைக் கொண்டாவது
பாரத்தைக் குறைத்திருக்கலாம்..
இடைவெளியையும் தான்!!-
ஆசவாசப்படுத்தும்
கரங்களை அதிகம்
தேடாதீர்கள்..
இங்கே பூக்களின் மணத்தை
பாராட்டும் கைகள் தான்
மரணத்திற்கும்
கையெழுத்திடுகின்றன..
குற்ற உணர்ச்சி ஏதுமின்றி!!-
"மி.மு 2018-ல் இலகுவான கண்களில்
மறைத்து வைத்திருந்த வன்மத்தை
நிர்வாணமாக்கியிருக்கலாம்...
இன்னும் பல ஆயிரம் ஆண்டுக்கான
சாபத்தை அளிக்காமல் போயிருக்கலாம்..
நீரடித்து விலகி நிற்கும்
நீரின் உணர்ச்சிகளை
சவப்பெட்டியில் பத்திரப்படுத்தும்
சனியின் வேலையையும்
சேர்த்தே குறைத்திருக்கலாம்".
வரப்போகும் யுத்தத்தையும்
தடுத்திருக்கலாம்...என
எழுதி முடிக்கும்முன்
எலும்பு கூட்டிற்குள்
அலைந்து கொண்டிருந்த உயிர்
இறுதி மூச்சை
விட்டுக் கொண்டிருந்தது...
கூடவே உணர்ச்சிகளையும்!!
-
நிசப்தங்களின்
உறைவிடங்களில்
கொக்கரித்துக்
கொண்டிருக்கிறது
உரத்த குரல்...
கேட்க நினைக்கும்
காதுகளின் வரவுக்காக
காத்துக்கொண்டிருக்கிறது...
பிறந்த நொடியிலிருந்து!!-