ஏதோ இருக்கிறது நீ
ஏதும் இல்லை என்று
கூறும் வரை ....
-ஜீவன்மொழி-
உன் விருப்பப்படி என்றவுடன்
உறவின் பிடியில்
சுதந்திரம் சரணடைகிறது.
நாம் என்பதிலிருந்து
நான் பிரிந்து செல்கிறது.
- ஜீவன்மொழி-
அலை அலையாய் மேகம்
அள்ளி அள்ளி தெளிக்க
துளித் துளியான மழையில்
துள்ளிக் குதிக்கும் மனம்..-
எதிர்பார்த்து காத்திருந்த
களைப்பில்லா பயணங்கள்
களிப்புமிக்க பகிர்வுகள்
உறவுகளின் உபசரிப்புகள்
உற்றாரின் அருகாமை என
உச்சம் தொட்ட உவகை
விரும்பிய விருந்தோம்பல்
விடைபெறா தருணங்கள்
குறைவில்லா சந்திப்புகள்
குதூகலக் கொண்டாட்டங்கள்
என நாட்கள் கரைந்ததே
தெரியாமல் உருண்டோடிய
விடுமுறைக் கால்தடங்கள் !
இவை காத்திருப்பின் வலி தீர்க்கும்
அன்பு அத்தியாயங்கள் !
வாழ்க்கை பயணத்தின்
இன்றியமையாத பக்கங்கள் !
சலிக்காமல் அனுபவித்து
சிறுக சிறுக சேகரித்த
நினைவுப் பெட்டகங்கள் !
மீண்டுமொரு நீண்ட
இடைவெளிக்கு தேவையான உந்துவிசை !
- விடுமுறை முடிந்து திரும்பும்
மண்மனம் மாறா வெளிநாட்டு வாசிகள்
- ஜீவி-
முன்போல் இல்லாமல்
இப்போதெல்லாம்
இளைப்பார மனம்
தேடுவது மடியை அல்ல
மணித்துளியையே...
- ஜீவி-
தூரமாய் இருந்தாலும்
துணையாய் இருப்போம்
பிரிந்தே இருந்தாலும்
சேர்ந்தே இருப்போம்
என உரைப்பது இன்னும்
எத்தனை நாட்கள் ?
நிதர்சனம் தவிர்த்து
நினைவலைகளில் நீந்தி
உறவை நீட்டிப்பது இன்னும்
எத்தனை நாட்கள் ?
வழக்கங்கள் வாழ்க்கை முறை
கடமைகள் காவியங்கள்
என சொல்லி சமாளிப்பது
எத்தனை நாட்கள் ?
வருடங்கள் ஓடுகிறது
வயதும் கூடுகிறது
நம் நட்பு மட்டும்
கூடா தண்டவாளமாய்
நீள்கிறது தோழியே ..
- ஜீவி-
அறிந்திடா ஆயிரம் பேர் அருகினில்
தெரிந்திடா அன்றாட
வழக்கங்கள்
புரிந்திடா புதிராய்
புதுநகரமும் புதுவாழ்வும் !
இருந்தாலும்
ஆறுதலாய் காதோடு
கிசுகிசுக்கும் பழக்கப்பட்ட தென்றல்
"போகப் போகப் பழகிவிடும் என "....
- ஜீவி
-
ஒரு ஞாயிறு காலையின்
மொட்டை மாடி கீதங்கள்
கீச்சிடும் கானப் பறவைகள்
சத்தமிடும் சாலை வண்டிகள்
டக் டக் துவைப்படும் துணி
டிக் டிக் ஓடிடும் கடிகாரம்
ஷ்ஸ் ஷ்ஸ் விசிலிடும் குக்கர்
கடக் கடக் இரைச்சலிடும் மோட்டார்
தடக் தடக் கூவிடும் ரயில்வண்டி
இத்தனைக்கும் நடுவில்
எங்கிருந்தோ இசைக்கும்
ரேடியோ பாடலுக்கு
தாளமிடும் மனம் ...
- ஜீவி
-
என்றோ நினைந்த
நம் தருணங்களை
சுகந்தமான மனதில்
ஊஞ்சல் ஆடியபடியே
துளித் துளியாய்
அசை போடுகிறது....
- ஜீவன்மொழி
-
காற்றோடு கலந்தே கொஞ்சம்
கதைகள் பேசிடு
மாற்றங்கள் என்றும் உண்டு
வீண் தாபம் தீர்த்திடு
ஆற்றாமை அகற்றி நெஞ்சின்
பாரம் குறைத்திடு
ஏற்றங்கள் வானை முட்டும்
வாழ்வை வாழ்ந்திடு ......
- ஜீவன்மொழி
-