முழு பைத்தியம்
என்னை
பைத்தியம் என்று
சொல்வதற்கு
உங்களிடம்
ஆதாரங்கள் இருக்கிறது..
ஒருவேளை
இவன் பைத்தியம்
இல்லை என்று
சொல்லக்கூடிய
நேரம் வந்தால்
நிரூபிப்பதற்கு
என்ன இருக்கிறது
உங்களிடம் ?...-
நீ மட்டும் ஏன்
மோக நீர் ஊற்றினால்
மென்
தண்டிப்புகளை முளைக்க செய்கிறாய்?..
நிர்வாணம் கேட்டால்
நீ பதிலாக சுவாசம்
தருகிறாய்..
எனக்கு இப்போது தான் புரிகிறது..
நீ சரிவர அனுப்பாத உன் மார்புகளை விடவும்
நீ தரும் இதயங்கள் தான்
என் உன்னத சுயத்தை நீட்டிக்கிறது ..
-
எதற்குமே லாயக்கில்லாத மனிதனுக்கும் ஒரு வேலை இருக்கிறது ..
அவன் ஏதோ ஒரு பாரத்தை சுமக்க வேண்டியதாய் இருக்கிறது..-
எனக்கு உறக்கம் வருகிறது
ஆனால் கண்களை மூட வேண்டும் என்று நினைத்தாலே
தினமும் சலிப்புடன் கொட்டாவி வருகிறது..
இந்த இரவுகள் மட்டும் ஏன் இவ்வளவு இருளாய் இருக்கிறது?...-
உன் கவிதைகள் மீது எனக்கு பிரியம் ஏற்பட்டபோது இதயங்களை அனுப்பினேன் ..
நான் எதிர்பார்த்த உன் கவிதையொன்று என் கண்ணில் படும்போது பூங்கொத்துக்களை அனுப்பினேன் ..
உன் கவிதைகள் என்னை கணக்க செய்த போது கண்ணீர் துளிகளை அனுப்பினேன்..
எப்படியேனும் தினசரி உன் கவிதைகள் என்னை தொட்டுச் சென்று விடுகிறது..
அலைகள் தொடுவதில் நிகழ்வது
நனைதல் மட்டுமல்ல..
கரைதலும் தான்..
-
ஏன் இவ்வளவு மோசம்
என்பதுவும் எனக்குள் தான் இருந்தது ..
இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று நீங்கள் ஆர்ப்பரித்த ஒன்றும்
எனக்குள் தான் இருந்தது..
எனக்குள் இருக்கும் எல்லாவற்றையுமே ஒன்றொன்றாய் உங்களிடம்
காட்டுகிறேன்..
நம்புங்கள்...
கொஞ்ச நாளாய்
நானே
என் தொடர்பில் இல்லை ...
-
இன்னும் வளர விரும்பாத
ஹைடியும்
ஷின் சானும்
நமக்குள்ளும்
இருக்கிறார்கள்..
எட்டாவது மாடியில்
வேலை கிடைத்த
முதல் நாளே
கைகளை நீட்டி பார்த்தேன்..
நிலவைத் தொடுவதற்கு
இன்னும் உயரம்
தேவைப்படுகிறது..
-
சிலிண்டர் டெலிவரி வசதியில்லாத
ஊர் உனது..
டீக்கடையே இல்லாத ஊர் எனது ..
டவுன் ரெஸ்டாரண்ட்
கதவுகளில்
ஒரு நிமிடம் யோசிக்க
வைக்கும்
புல்- புஷ் களை போல
சிறிய மாறுதலாகவே
இருக்கிறது சகி
நம் வாழ்வு..-
என்னால் வாங்க முடியாத ஒரு விலை உயர்ந்த பைக்காய்
நேசிப்பை எனக்கு தெரியும்..
நேரில் பார்க்காத தூர சொந்தத்து ஒரே ஒரு அத்தை மகளாய்
நேசிப்பை எனக்கு தெரியும்..
ஆறாவதோடு படிப்பை நிறுத்திக் கொண்டு ஊர் விட்டு போன பால்ய சினேகிதி சிந்துஜாவாய்
நேசிப்பை எனக்கு தெரியும்..
முன்பு என்னால் வாங்க முடியாமல் இருந்து
இப்போது வாங்க முடிந்தும்
ஆசை விட்டு போன தாசில்தார் வீட்டு பெரியமீன் தொட்டியாய்
நேசிப்பை எனக்கு தெரியும்..
திருமணமான ஒரே வருடத்தில் தெப்பக்குளக்கரையில் உப்பி இறந்து கிடந்த எதிர் வீட்டு
டியூசன் டீச்சர் நித்யா
அக்காவாய் தான்
நேசிப்பை எனக்கு தெரியும்..
தூரத்திலயே இது வரை பார்த்த
நேசிப்பை
இதுதானென்று என் கைப்பிடித்து
காட்டியவள்
என் மனைவி தான் ..
-
புங்கன் கொழுந்து தண்டு கிள்ளி
கையில் ரத்தம் ஒட்டி காட்டினோம்..
குல்மோகர் பூவின்
அடி இதழை விரலில் வைத்து
பெரிய நகங்கள் வளர்த்தோம்..
எருக்கன் காய் அழுத்தி
பரீட்சை முடிவு பார்த்தோம்..
ஆற்றங்கரையில் பாட்டில் பொறுக்கி சேமியா ஐஸ் வாங்கினோம் ..
கை நீட்டி அம்மாவின் மீது
ப்ராமிஸ் வாங்கிக் கொண்ட போது
பொய்களற்றதாய் இருந்தது எங்கள் வாழ்வு..
-