உன் வாழ்க்கையில் போதுமான அளவுக்கு இருள் சூழ்ந்த பிறகே, நட்சத்திரங்களைக் காண ஆரம்பிப்பாய்.
-
ஒவ்வொருவரிடமும்
நாம் வினயமாய் நடந்து கொள்ள வேண்டும்
குறைந்த பட்சம்
சமயத்துக்குத் தகுந்தாற்போலவேனும்…
காட்டு வழியில் எதிர்வரும் வேளை
யானையிடம்.
கோவில் மதில் மீதிருந்தோ
மரக்கிளையிலிருந்தோ
இறங்கி வந்து கை நீட்டும் போது
குரங்கிடம்.
அங்கே இங்கே உட்கார்ந்து
திருப்தியடையாமல்
படிக்கவென்று மேஜை மீது திறந்து வைத்த
புத்தகத்தில் உட்காருகையில்
வண்ணத்துப் பூச்சியிடம்.
இப்படி இப்படி …
ஆனால் ஒரு குழந்தையிடம் சதா சர்வகாலமும்…
இல்லாது போனால்
(எக்கணம் எனச் சொல்ல முடியாமல்)
ஓர் ஆனந்தக் காட்சியை
இழக்கக் கூடும்.
--- நஞ்சுண்டன்-
ஒரு மனிதன் தன்னைத் தொலைத்து தான் யாரென்பதை கண்டுகொள்ளும் தருணத்தில் பிரபஞ்சம் மிரட்சி கொள்கிறது. சிக்கலுண்ட மனித மனங்களின் விஸ்தாரமென்பது எல்லையில்லாதது. அதிகாரமும் பதவிகளும் இல்லாத மனிதனாய் தன்னை அவர் கற்பனை செய்துகொண்டபோது ஒரேநேரத்தில் குழந்தைமையின் மகிழ்ச்சியும் முதுமையின் நிறைவும் அவருக்குள் சூழ்ந்து கொண்டது. அரபிக்கடலில் கப்பல்களை வேட்டையாடி பொன்னையும் பொருளையும் கவர்ந்துகொண்ட போதில்லாத நிறைவு துறக்க நினைக்கையில் வருவதுதான் ஆச்சரியம். எதுவுமில்லாத மனிதனுக்கு இத்தனை ஆறுதலான வாழ்வு கிடைக்குமென்றால் உலகின் வெற்றிகளைத் தேடி ஓடுகிற மனிதர்கள் எதைக் கண்டடைகிறார்கள்? துயரையும் பழிகளையும் பாவங்களையும் பொறாமைகளையும் சாபங்களையும் தவிர்த்து வெற்றிகள் தருவது ஒரு தற்காலிக களிப்பை மட்டுந்தான். அக்கணம், அச்சிறிய கணம் எளிய களிப்புகளில் திளைக்கும் மனிதர்கள் அப்படியான கணங்களை மீண்டும் மீண்டும் உருவாக்க விழைகிறார்கள்.
-ரூஹ்-
“தொலைந்து போனவர்கள்”
விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்
‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு ?-
#கொடுக்கிறேன்..!
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும் கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக் கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப் புல்லாங்குழல் கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு அது ஒரு கருவியே
இயற்கையைப் பார் அது கொடுக்கிறோம் என்று நினைத்துக் கொடுப்பதில்லை
தேவையுள்ளவன் அதிலிருந்து
வேண்டியதை எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின் ஓர் அங்கம்
என்பதை மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது பணம் மட்டும்
என்று நினைக்காதே
உன் வார்த்தையும் ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல் சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது நதியில் உள்ள
நீர்போல் இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம் சம்மதம் கேட்பதில்லை
கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை நியாப்படுத்தும்.
#கவிக்கோ அப்துல்ரஹ்மான்.-
நான் மனம் தளரவில்லை,வாழ்வின் மீதான நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை, எங்கேயும் வாழ்க்கை வாழ்க்கைதான். என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருக்கிறார்கள். மனிதர்கள் மத்தியில் ஒரு மனிதனாக இருப்பதும், எவ்வளவு துயரங்கள் ஏற்பட்டாலும் எப்போதும் மனிதத்தன்மையோடு இருப்பதும், வீழ்ந்து விடாமல் தைரியத்தை தக்க வைத்துக் கொள்வதும் தான் வாழ்க்கை. இதுதான் வாழ்க்கையின் மாபெரும் சவால்.
~ தஸ்தயேவ்ஸ்கி.-
ஒரு சிறு கோப்பையில் இருக்கும் நீருக்குள் கைப்பிடியளவு உப்பை அள்ளிப்ப்போட்டால் அந்த நீரைப் பருக முடியாது. ஆனால், அதே அளவு உப்பை நதிக்குள் போட்டாலும் நதி நீரை நாம் அள்ளிப்பருகலாம், அதில் சமைக்கலாம் , துணி துவைக்கலாம். நதி மகத்தானது. எதையும் வாங்கி அரவணைத்து அதை மாற்றக்கூடிய திறன் அதனிடம் உள்ளது. எப்பொழுது நம்முடைய இதயம் ஒரு கோப்பையைப் போல் சிறியதாக மாறுதோ அப்பொழுது நம்முடைய புரிதல், கருணை எல்லாமுமே ஒரு கட்டுக்குள் சிறியதாகத்தான் இருக்கும். தவிர, அது நம்மை துயரத்தில் ஆழ்த்தும். நாம் எதையும் யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் அல்லது அவர்களைச் சகித்துக்கொள்ளும் திறன் இருக்காது. தவிர, மற்றவர்களை மாறச்சொல்லி வற்புறுத்துவோம். ஆனால், எப்பொழுது நம்முடைய இதயம் நதியைப் போல் விரிவடையதோ அப்போது இதே விசயங்கள் நம்மை துயரத்தில் ஆழ்த்தாது. நாம் நிறைய புரிதல் உள்ளவர்களாகவும் கருணையுள்ளவர்களாகவும் எல்லோரையும் அரவணைத்து செல்பவர்களாகவும் இருப்போம். மற்றவர்கள் எப்படியோ அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வோம்.
-
எழுந்து வீழ்ந்து
தடுமாறும்
நடக்கத் தெரியாக் கடலலைகள்
யார் சென்றாலும்
விரல் நீட்டும்..-
சமூகத்தை மாற்ற விரும்புபவர்கள்
எல்லாம் தோற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
சமூகத்தை அழிக்க நினைப்பவர்கள்
எல்லாம் வென்று கொண்டிருக்கிறார்கள்.
சமூகத்தை எதுவும் செய்யாமல்
பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
எல்லாம் வாழ்வை எதேச்சையாக
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் இதில் எதைச் செய்யலாம்
என்று இன்னும்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.-
இடமில்லை என ஒருபோதும் விலகியதில்லை ஒளிக்கீற்று..!!
வழியில்லை என வருந்தாதே..!!
#"வானம் வசப்படும்"..
-