எதுவாக இருந்தாலும்
இதுக்கு நீ பேசாமலே
இருந்திருக்கலாம் என்கிறாய்...
இன்றிரவு நான் எழுதலாம்
இதயப் பின்னலில்
சிக்கல்கள் கூடிக்கொண்டே
போவதை!-
அதனின் அதனின் இலன்
அரனே...ஆவணமறுக்கும் சிவனே
இறையனே...
இல்லாமையின் பொருளான சிவனே
உமையனே...
ஊடாடும் உயிர்சிவனே
எம்பிரானே...
ஏகமாய் என்னையாள்பவனே
ஐயா...வென்றுருகும் போதே
ஒலிக்குதய்யா
ஓம் காரம்!-
ஒரு மௌனம்
ஒரு முகச்சுழிப்பு
ஒரு கோபம்
ஒரு குறை கூறல்
ஒரு பாராமுகம்
ஒரு புறக்கணிப்பு
ஒரு அவமதிப்பு
இப்படி ஒவ்வொரு படியாக
மெதுமெதுவாக இந்த பிரிவுக்கு
நீ என்னை தயார் செய்திருக்கலாம்
வலிகளை குறைக்க
வைத்தியம் இல்லையாம்..!-
வாழ்வதற்கு நீ வேண்டும்
என்பது போய்
எதற்காகவேணும் நீ வேண்டும்
என்று வந்து நிற்கிறேன்
வாழ்ந்து தீரவேண்டும் என்று
தோன்றும் நாளில்
இந்த கவிதைகளை மலர்வளையங்கள்
அலங்கரித்துக் கொண்டிருக்கும்!-
முன்பு கவிதைகளை
வாசித்துக் கொண்டிருந்தேன்
இப்போதெல்லாம்
அதில் புதைந்துள்ள வலிகளை...
இங்கேதான் இருந்தாக வேண்டும்
என்ற கட்டாயம்
வேறென்ன செய்ய??-
நெடுந்தொலைவு பயணம்
காதுகளை உறுத்தாத இசை
கண்களை தழுவும் இயற்கை
கால்களை வருடும் அலைகள்
கதகதப்பான கவிதைகள்
உரிமையான தோளணைப்பு
இவற்றிற்கு சற்றும் குறைவில்லாதது
தனித்திருப்பதாய்
உணரும் கணங்களில்
வரும் நல விசாரிப்புகள்!-
நிழல்கள் கடந்துபோவதுபோல
முடிந்தும் முடியாமலும் ஒரு பயணம்
ஒவ்வொரு நிலையத்திலும்
காற்றாய் நின்று கையசைக்கிறாய்
உள்ளங்கையில் பொத்தி
வைத்த ரேகைகள்
வியர்வையில் குளித்திட
பயணம் முழுவதும் பால் திரிபில்
பாடாய்படுவதெல்லாம்
இந்த கவிதைகள்தான்!-
பாதிக் கனவில்
தொலைந்து போனாய்
ஊதிப் பெருத்த இரவுகளின்
முகவரியைக் காட்டி...
தாளாமல் தாவிப்பிடித்து
இறுக்கிக் கொள்கிறேன்
தனித்தே வாடிடும்
இந்த கவிதைகளை!-