சிறகிருந்தும் பறக்கமுடியாமல்
சிக்கித் தவிக்கிறேன்
உன் காதல் கூட்டில்.
திறப்பாயா உன்
மனக்கதவை
பறந்து செல்வதற்கு அல்ல
என் சிறகை விரிப்பதற்கு!-
மின்னல்!
மழலை கொஞ்சும்
மழைத்துளியில்
மகுடி ஊதுகிறான்
நாக்கை நீட்டி
தாகம் தணிக்கிறது
வெள்ளை பாம்பு!-
இடைவிடாத இன்னல்களிலும்
இசை மீட்டிச் சிரிக்கிறது
புல்லாங்குழலின்
துளையில் சிக்கிய
காற்று.-
எண்ணெய்
எண்ணெய்யில்
உன் தாராளத்தை
காட்டினால்
உண்மையில்
உபாதைகள் தான்
உடன் பரிசாக வரும்-
மணக்கூலி
என்ன கொண்டு வந்தாய்
என்று கேட்கும்
ஆண் சமூகத்திடம்
என்ன கொடுத்து
அழைத்து வந்தாய்
என்று கேட்பது
முறையல்லவோ?-
முகம் கண்ட
முதல் முகவரியில்
பெயர் கேட்டு
பேசத் தயங்கிய
நினைவுகளும் அதோ..
முகம் காணா தூரத்தில்
சிதறிய கைகள்
செயலிகளில் கேலி பேசும்
நாட்களும் இதோ..
விடியாத இரவுகளிலும்
முடியாத நம் பேச்சுகள்.
சுவரெல்லாம் சுவாசித்த
நட்பின் ஈர காற்றுகள்.
சுவைக்காத உணவில்லை
சுற்றாத இடமில்லை
காரணம் சொல்லும்
கோபங்களும் இல்லை
காசு கேட்கும்
சொந்தங்களும் இல்லை.
தேடிக் கிடைக்காத
நட்பும் ஆனதே
பிரிக்க முடியாத
உறவு பந்தங்களாய்.
என்றென்றும் நினைவுகளில்
நம் தடம் பதித்த
கல்லூரிச் சாலைகள்
கிசுகிசுக்கின்றன
தொலைந்து போன
நம் கல்லூரி நாட்களை.-
யானையின் பிளிறல்
நீர் செய்வதை வானம் அளக்கும்
நிலம் செய்வதை புலன் அளக்கும்
அளந்தவை எல்லாம்
உன்னாலே அழிக்கப்படுவதால்
யாம் எங்கு செல்வோம்
இப்பெரு உடலாலே.
எம் சாணம் வளர்க்கும்
மரங்களையெல்லாம்
நீ நாணமின்றி அழிக்கிறாய்.
எம் வழியெல்லாம்
வேலி அமைத்து
மின்சாரம் பாய்க்கிறாய்.
உணவு தேடி
ஊருக்குள் வந்தால்
வெடி வைத்து தகர்க்கிறாய்.
எம் இருப்பிடத்தை அபகரித்து
எமை வைத்தே
யாசகம் செய்கிறாய்.
மயிரிழையும் விடாமல்
மோதிரம் தரிக்கிறாய்.
தந்தத்தின் மோகத்தால்
இனத்தையே அழிக்கிறாய்
உன் சீர்செழிக்க
எமையே சிலை வைத்தும்
வணங்குகிறாய்.
அழிவின் விளிம்பு
பிடியில் இருக்க
எம் பிளிறல்
கேட்கவில்லையா.
தீண்டாமை எமக்கில்லை
தீங்கிழைக்கவும் விரும்பவில்லை
வாழ்வை மட்டும் கொடுத்துவிடு
வரும்காலம் வாழவைப்போம்.
-Ilakky rebha
-
என்னை ஏற்பாயா என்று
காதல் பரிசு
கேட்கும் உன்னிடம்
ஏக்கத்தை மட்டுமே
கொடுத்துச் செல்கிறேன்.
வலிகளை ஏற்றுக்கொண்டு
காயங்களால் உன்னை
செதுக்கி
முறையாக அலங்கரிக்க
காத்திருக்கிறேன்.
காதல் சிரிப்பதற்கு
மட்டும் அல்ல
சீர்படுத்தவும் கூட..
இந்தச் சிற்பிக்குள்
ஒளிந்திருக்கும் காதலை
சொல்லாமலே
கடத்திச் செல்கிறேன்
நீ அறிவாயென!-