நிலவைப் பற்றி நிலவிடமே கேட்கிறாய்..!
என்னவென்று அது சொல்லும்?
அந்த இருளிடமாவது நீ கேட்டிருக்கலாம்..!
இல்லையென்றால் நீ என்னிடம் கேட்டிருக்க வேண்டும்..!
உன்னைப் பற்றி சொல்லியிருப்பேன்..!
.
.
(அவள் இருளை தணிக்க வந்த நிலவு அவன்..!)-
நிலவு இல்லாத
அடர்கருப்பு வானத்தில்
யாரும் காணாத
ஒரு தனிமை இருக்கிறது..!
ஒளியைத் தேடுபவர்களை விட..
இருட்டினை ரசிப்பவர்களுக்கு
மட்டுமே அவை புலப்படுகிறது..!
பிரபஞ்சத்தின் கருந்துளையில்
காணாமல் போன
துகள்களின் வரிசையில்
என் கனவுகளும் அடங்கும்!
நட்சத்திரம் எண்ணியவாறு
எவரேனும் இங்கு வந்தால்..
தொலைந்த என் கனவுகளை
மீட்டுத் தாருங்கள்..!
முடிவில்லாமல் நீள்கிறது..
இந்த ஏகாந்த இரவுகள்..!!!-
ஒற்றைத் துகளில் துவங்கி..
முடிவற்று செல்கிறது பிரபஞ்சம்..!
பெருவெடிப்பிற்கு பிறகு..
சிதறிய விண்மீன் திரள்கள்
ஆங்காங்கே மினுமினுக்கிறது..!
ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்ட
பல்வேறு அணுக்களோடு..!
எதனோடும் பொருந்தாத இந்த மனமும்
மிதந்து கொண்டிருந்தது..!
நிசப்தமாக சுற்றித் திரிந்த
இருண்ட தனிமங்களோடு..
விவரிக்க இயலாத பல உணர்வுகளும்
உலவிக் கொண்டிருந்தது..!
"அந்த மறைமதி இரவு வானத்தில்..
அப்படி என்னதான் இருக்கிறது,,
தினமும் சென்று பார்த்திட.."
என்று கேட்கும் மனிதரிடம்
எப்படிக் கூறுவேன்..!
"எனதிந்த முடிவில்லாத
இருளின் கதைகளை..!"-
அந்தி நேர வானில்..
பறக்கின்ற பறவையை
வெறுமனே திண்ணையில்
அமர்ந்து ரசித்ததுண்டு..!
சில சமயங்களில்
சாதாரணமாக உள்ளங்கையில்
வந்து விழும் இறகுகளை
கண்டும் வியந்ததுண்டு..!
இழப்பதின் வலியை
ஒருபோதும் அந்த பறவை
உணர்ந்ததில்லை..!
மாறாக..
சிறகுகளை விரித்து
மென்மேலும் பறக்கிறது..!— % &-
என்ன செய்கிறேன் நான்..!!
இந்த அறை முழுவதும்
விரவிக் கிடக்கும் தனிமையோடு..!!
என் இருப்பை உணர்ந்திடாத
வெற்று எண்ணங்களோடு..!!
எப்படி தொடங்குவது..
இந்த வாழ்வினை..!!
என தவித்துக் கொண்டிருக்கிறேன்..!!
இது எதைப் பற்றியும் அறியாமல்..
வானில் பறக்க..ஒத்திகை பார்க்கும்
மனதிற்கு என்ன பதில் கூறுவேன்..!!— % &-