ஏதேதோ பேசப்போய்
எதுவும் பேசாமல் இருக்கிறோம்
இப்பொழுது !
-
நான் அன்பு தருகிறேன்
நீயும் அன்பு தருவாயா என்று
பேரம் பேசுகிறது காதலர் தினத்தில் !
-
என்றோ
எதார்த்தமாக பார்த்தபோது
அவசரமாக பகிர்ந்துக்கொண்ட
தோழியின் கைபேசி எண்
அப்படியேதான் இருக்கிறது
எந்தவொரு சலசலப்பையும் உண்டாக்காமல்.
நேரமும் இருக்கிறது நினைவும் இருக்கிறது
அவ்வப்போது
இருவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்
'வாட்சப் ஸ்டேட்டஸ்களை'.
எண்களை
பகிர்ந்துக் கொண்டதில் இருந்த அன்பு
ஸ்டேட்டஸ்களுக்கு மட்டும் மறவாமல்
விருப்ப குறியீடுகளை அனுப்புகிறது...
இப்படி எதுவுமே செய்யாத அன்பு
ஏதோ செய்துக்கொண்டு இருக்கிறது
எங்கள் இருவரையும்...
-
நீண்ட காலமாக
சொன்னவர்கள் எல்லாம்
நீங்கி போனார்கள்...
அண்மைக்காலமாக
சொன்னவர்கள் எல்லாம்
அண்டாமல் போனார்கள்...
தவறாமல்
சொன்னவர்கள்
எல்லாம் தவறிப்போனார்கள்...
நினைவில் வைத்து
சொன்னவர்கள் எல்லாம்
நினைவின்றி போனார்கள்...
நேரத்துக்கு சரியாக
சொன்னவர்கள் எல்லாம்
நேரமின்றி போனார்கள்...
இவர்களை போலவே
கூடிக்கொண்டே போகிறது
அகவை தினமும்...
-
ஒரு தனிமையை
எடுத்துக்கொண்டு அமர்கிறேன்
யார் யாரோ வந்து
பகிர்ந்துக்கொள்கிறார்கள் !
-