தன் ஆள்காட்டி விரலில்
ஆகப் பெரிய சக்தி
இருப்பது தெரியாமல்
மொத்தக் கைகளிலும்
திருவோடு ஏந்தும் "மக்கள்"!-
உன் விழியென்னும்
உளி வழியாய் செதுக்கப்பட்ட
என் இதயம்
நீ வரும்
வழியாய் துடித்து நிற்கும்!
உன் கொலுசோசை கேட்க
தான் துடிக்கும் ஓசை கூட
அது நிறுத்தி வைக்கும்!
அடி உன் ஓரக்கண்
பார்வை படவில்லையெனில்
அது துடிதுடித்துப் போகும்!
துடிக்கின்ற இதயத்தை
துடிதுடிக்க வைக்கின்ற பாவம்
உனக்கு வேண்டாம்
பாவையே பார்த்துவிடு!-
சில மணி நேரங்கள் தூங்கிவிடவாவது
உன் நினைவுகளை மறக்க நினைக்கிறேன்!
ஆனால் நீயோ என் இதயத்தின்
நான்கு அறைகளையும் மாறிமாறித் தட்டுகிறாய்!
நான் தூங்க மருந்தொன்று உண்டோ?
உன் அணைப்பைத் தவிர!-
அதிலுள்ள பக்கங்கள் தான்
எத்தனை சுவாரசியமாக இருக்கும்!
அனுபவங்களின் புதையலாக
அறிவுரைகளின் உண்டியலாக!
அதிலே எனக்கான பக்கங்களும் இருக்கலாம்!
எனது சரி தவறுகளும்
அதற்கான தன்னிலை விளக்கங்களும்
நான் கற்ற பாடங்களும்
பக்கங்கள் முழுவதும் அப்பியிருக்கும்!
ஒரு மயிலிறகைக் கூட
எனக்கான பக்கங்களுக்கு இடையில்
நான் செருகியிருக்கக்கூடும்!-
இருளில் முளைத்த நட்சத்திரங்களில்
இருக்கிறதா உனது எதிர்காலம்?
சுழன்றே செல்லும் கோள்களினால்
சொல்லப்படுமா உன் வருங்காலம்?
ரேகை, வாஸ்து, பெயர் மாற்றம்
இவற்றால் நிகழுமா நிலை மாற்றம்?
அறிவும் உழைப்பும் துணையெனக் கொள்
அவற்றை உன்னோடு அழைத்துச் செல்!
மாற்றம் ஒன்றே நிலையெனச் சொல்
உலகம் உன்னோடு நீயே வெல்!
தீபம் ஏற்றி மாற்றம் வேண்டாது
வியர்வை சிந்து வெற்றி தப்பாது!-
எழுந்து வரும் சூரியனில்
சூரியன் தரும் ஒளியினில்
ஒளியில் ஆடும் சிறுதுகளினில்
துகள்கள் உருவாக்கிய உயிரினில்
உயிர்கள் இயைந்த இயற்கையினில்
இயற்கை இயற்றிய மலையினில்
மலைகளில் தோன்றிய ஊற்றினில்
ஊற்று தந்த ஓடையினில்
ஓடை சேர்ந்த நதியினில்
நதி வீழும் அருவியினில்
அருவி தெறிக்கும் சாரலினில்
என்றோ வந்த பாறை மேல் அமர்ந்தே
இன்றோ நானும் இவ்வுலகை ரசிக்கிறேன்
"இந்த உலகம் தான் எவ்வளவு அழகானது!"-
சுடர் விட்டு எரியும் தீபத்தின் ஒளியில் அந்தச் சிறுவனது சிந்தனைக் கனலும் தகித்துக் கொண்டிருந்தது. அவன் தாயிடம் கேட்டான் "இந்த தீபத்தை ஏற்றினால் தான் அந்த லட்சுமி தெய்வம் வீட்டிற்குள் வருமென்று பாட்டி சொன்னது நிஜமா அம்மா?". ஊதுபத்திகளின் வாசத்தைப் பூஜை அறையில் பரப்பிக் கொண்டிருந்த தாய் சொன்னாள் "நிஜம் தானடா என் செல்வமே!". மனதில் எழுந்த மறு கேள்வியைக் கேட்டான் அந்த மகன் "அப்போது சாமி சிறு துரும்பிலும் இருக்கும் பெருந் தூணிலும் இருக்கும் எனச் சொன்னாயே அம்மா! இப்போது தீபம் ஏற்றினால் தான் சாமி வரும் என்கிறாயே அம்மா!" திடீரென்று சினம் கொண்ட தாய் "இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் அந்தச் சாமி உன்னை நரகத்துக்கு அனுப்பிடும்!" என்று அவன் சிந்தனைச் சிறகை ஒடிக்க முற்பட்டாள் அந்தத் தாய். "தவறு செய்தால் தானே நரகத்திற்குப் போவோம் என்றாயே அம்மா? நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் அந்த சாமி நரகத்திற்கு அனுப்ப வேண்டும்?" என்றான் மகன். "கடவுளை எதிர்த்து பேசினால் நரகத்திற்கு அனுப்பிவிடுவார்" என்றாள் தாய். "அந்த ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி வேண்டி அரசை எதிர்த்து கேள்வி கேட்ட நம்ம ராமசாமி தாத்தாவை போலீசு பிடிச்சுட்டு போய் சிறையில் அடைத்த மாதிரியா அம்மா?" என்றான் மகன். தாயின் முகம் வெளிறியது. "உனக்கு வாய் அதிகமாகிவிட்டது. போய் பாடத்தைப் படி" என அவனை அதட்டிவிட்டு அடுப்பறைக்குள் சென்றாள் அந்தத் தாய்.
-
வீட்டுக்கொரு வாசற்படி போல
வாசிக்க நல்ல நூலகம் வேண்டும்!
நற்றறிஞர்கள் நூல்கள் பலவும் - அங்கே
நயமாய் நிறைந்திட வேண்டும்!
படுத்து வாசிக்கப் பஞ்சனையும்
சாய்ந்து வாசிக்கச் 'சேரும்'
நடந்து வாசிக்க நல்முற்றமும்
ஒருங்கே அமைந்திட வேண்டும்!
அங்கே மரமும் வேண்டும்
அது தரும் நிழலும் வேண்டும்!
படித்தது மறக்காத நினைவும் வேண்டும்!
வாசிக்க வாசிக்க மங்காத கண்ணும்
சோர்வுராத மூளையும் தீர்ந்திடாத தாகமும்
மிக வேகக் கண்களும் வேண்டும்!-
அதெப்படி மத வெறியர்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறார்கள்? ஒருவரைப் பழிக்க வேண்டுமெனில் அவருடைய தாய், மனைவி, தங்கை முதலிய பெண் உறவுகளையே கேவலம் செய்கிறார்கள்? பெண்ணை உடைமையாக எண்ணியதன் விளைவே இது! பெண்ணை அடிமையாகவும், உடைமையாகவும் எண்ணும் எந்த மதமும் தீவிரவாதமே! அப்படி எண்ணுபவர்கள் தீவிரவாதிகளே!
-
பொதுவாக எந்தவொரு நாடும், ஒரே மதம் அல்லது ஒரே இனம் அல்லது ஒரே மொழி என ஏதேனும் ஒரு புள்ளியில் ஒன்றுபட்டு நிற்கும். ஆனால் இந்தியா என்பது பல மதங்களின், பல இனங்களின், பல மொழிகளின், பல கலாச்சாரங்களின் ஒன்றியமாக இருக்கிறது. இருப்பினும், 'இந்தியன்' என்ற புள்ளியில் நாம் அனைவரும் ஒன்றுபடுகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம். இந்த வேற்றுமையே இந்தியாவின் சிறப்பாக இருக்கிறது. இதனை பலரும் இன்று மறந்து வருகிறோம். இந்த வேற்றுமையை நாம் அழிக்க முற்படும்போது, நமது ஒற்றுமையை இழக்க நேரிடுகிறது. என் கருத்தை ஏற்காத ஒருவரை நான் எதிரியாக நினைத்தால் அங்கேயும் ஒற்றுமை உடைகிறது. எனவே வேற்றுமையை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால், நம் ஒற்றுமை இன்று திறக்கப்பட்ட 'இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின்' சிலையை விட உறுதியானதாக இருக்கும்.
-